

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாகப் பொழிந்துவருவது நிம்மதி அளிக்கிறது. பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதேவேளையில் மழை, வெள்ளத்தால் கடந்த காலங்களில் பெற்ற படிப்பினையைக் கொண்டு மக்கள் பாதிக்கப்படாத வகையிலான பணிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகிறது.
2025இல் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே அக்டோபர் 16இல் தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் 112%க்கும் மேலாகப் பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 1971 - 2020ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், தமிழகம் 48% மழைப் பொழிவை வடகிழக்குப் பருவமழை மூலம் பெறுகிறது. ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் வங்காள விரிகுடாவில் சராசரியாக மூன்று புயல் அபாயங்கள் ஏற்படுகின்றன.