

தமிழ்நாட்டில் அரசாணை எண் 65, ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை, நாள் 24/05/2022இன்படி, ஆண்டுக்கு ஆறு முறை கிராமசபைக் கூட்டம் கட்டாயம் நடைபெற வேண்டும். அதன்படி அக்டோபர் 2 கிராமசபைக் கூட்டமானது, ஆயுத பூஜை விழா காரணமாக அக்டோபர் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்றது.
10,000க்கும் மேற்பட்ட கிராமசபைகளில் தமிழ்நாடு முதல்வரும், ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் ஆகியோரும் இணையவழி நேரலையில் கலந்துகொண்டனர். அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர், கிராம மக்களின் தேவைகள், குறைகள் கேட்டறியப்பட்டு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார். ஒருவகையில் மாநில அரசின் பரப்புரை நிகழ்வு அல்லது குறைதீர்ப்புக் கூட்டம்போல இது நடந்து முடிந்தது.