

ஒருவரின் மனநலம் தனி ஒருவருக்கானது மட்டுமல்ல; அவர் வாழும் குடும்பம், சமூகம், பணியாற்றும் சூழல் அனைத்துக்குமானது. குடும்பமாக வாழவும், சமூகமாக முன்னேறவும், உளம் கனிந்த அன்புடன் ஒன்றித்திருக்கவும் மனநலம் உதவுகிறது. வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் மனநல வழிகாட்டிகள், இத்தகைய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தவிர்க்க இயலாக் காரணிகளாக விளங்குகிறார்கள்.
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை அறிய, கவனக்குறைவிலிருந்து மீண்டுவர, அந்தந்த வயதுக்குரிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள, போதை, கோபம், சண்டை, திருட்டு, இணையவழி மிரட்டல் உள்ளிட்ட நடத்தைகளைச் சீரமைக்க, நல்லொழுக்கம் தவறுகிறபோது ஏற்படும் குற்றவுணர்வைக் கையாள, பெற்றோர்களைப் புரிந்துகொள்ள மனநல வழிகாட்டிகள் உதவுகிறார்கள். உடன் படிக்கும் மாணவர்களின் ஆதிக்கம் நற்பண்புகளை வளர்க்க உதவுவதுபோலத் தவறு செய்வதற்கும் வழிவகுக்கும்.