

சோமனின் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி, சிவராம காரந்த் தனது நாவலில் இப்படி எழுதியிருக்கிறார். ``சமையல் என்ற பெரிய பெயர் அதற்குத் தேவையில்லை. கஞ்சி காய்ச்சும் வேலைதான் அது. கல் அடுப்பில் நெருப்பு பற்ற வைத்து மண்பானையை வைத்தார்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொண்டுவந்த அரிசியிலே இரண்டு மூன்று பிடிகளை எடுத்துப் போட்டு வேக வைத்தார்கள். அங்கேயிருந்த இன்னொரு கல்லின் மீது நான்கு உப்புக்கல்லையும் இரண்டு உலர்ந்த மிளகாயையும் வைத்து அரைத்தார்கள். துவையல் தயாரானது. இன்னும் என்ன, அரிசி வெந்தவுடன் சாப்பிட வேண்டியது தான்.
``சோமனின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கு, மேற்சொன்ன வரிகளே சாட்சியம். கன்னட இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளராகக் கொண்டாடப்படும் சிவராம காரந்த் ஞானபீடவிருது பெற்றவர். நாட்டுப்புறக்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1931இல் ‘சோமனின் உடுக்கை’ நாவலை எழுதியிருக்கிறார். தலித் இலக்கியங்களின் முன்னோடி படைப்பாக இந்த நாவல் கருதப்படுகிறது. தி.சு.சதாசிவம் இந்நாவலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.சோமனின் உடுக்கையொலி நாவலின் மையப் படிமமாகிறது. தனது மனத்துயரை, கஷ்டங்களை உடுக்கையொலியின் மூலம் சோமன் வெளிப்படுத்துகிறான். அவன் பூசாரியோ, குறிசொல்பவனோ இல்லை. மாறாகத் தனது கடந்தகாலத்தைப் போலவே எதிர்காலமும் இருண்டிருக்கிறது என உணர்ந்தவன். அவன் எழுப்பும் இசை அவனது இருப்பின் அடையாளம்.