Published : 11 Aug 2018 09:12 AM
Last Updated : 11 Aug 2018 09:12 AM

திராவிட இயக்க நூல்களுக்கு எப்போது உருவாகும் ஓர் இணையக் களஞ்சியம்?

திராவிட இயக்கத்தின் முதன்மையான தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் இழப்பு அவ்வியக்கத்துக்கு மட்டுமின்றி, தமிழ் எழுத்துலகுக்கும் மாபெரும் இழப்பு. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு என்று சங்க இலக்கியங்களைக் கதைகளாக, கவிதைகளாக, கடிதங்களாக தமிழகத்தின் பெருவாரியான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் கருணாநிதிக்கும் பெரும்பங்குண்டு. எழுதப் படிக்கத் தெரியாதவர்களும்கூட அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் வாயிலாகப் பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையறிந்துகொண்டார்கள். கருணாநிதியின் எண்பதாண்டு கால எழுத்தும் பேச்சும் கணிசமான பகுதி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது ஆறுதலானது. ஆனால், அவை அருங்காட்சியக ஆவணங்களாக சுருங்கிவிடக் கூடாது.

பெரியாரின் எழுத்துகளும் உரைகளும் அவ்வப்போது தொகுப்புகளாக்கப்பட்டு வருகின்றபோதிலும் முழுத் தொகுப்பாக இன்னும் கிடைக்கவில்லை. அண்ணா ஒரு பெரும் எழுத்தாளர். ஆனால், அவர் எழுதிய, பேசிய அத்தனையும் இன்றும் நமக்கு நூல் வடிவில் படிக்கக் கிடைக்கவில்லை. கணிசமான தொகுப்புகள் வந்திருக்கின்றன என்றாலும், அதை தரப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் என்று சொல்ல முடியாது. தஞ்சை செம்பியனின் தனிமுயற்சியால் தற்போது இணைய அளவில் மட்டும் பெரும் தொகுப்பு படிக்கக் கிடைக்கிறது. கருணாநிதியின் எழுத்தும் உரையும் அவ்வாறு, அச்சுநூல், மின்னூல்களாகவும், இணையப் பதிப்புகள், காணொலிகளாகவும் என்ற எல்லா வகையிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

காந்தியின் சிந்தனைகளும் அம்பேத்கரின் சிந்தனைகளும் முழுத் தொகுப்பாக அச்சிலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அது சார்ந்த விவாதங்களுக்குத் துணைநிற்கும் அறிவுக் கருவூலங்களாக அவை விளங்குகின்றன. ஆனால், பெரியாரின் ‘குடிஅரசு’ கட்டுரைகள் மட்டுமே தற்போது மின்னூல்களாகக் கிடைக்கின்றன. சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் தமிழ் மண்ணுக்கென ஒரு தனித்த சுயமான பார்வையை முன்னெடுத்த மற்ற திராவிட இயக்கச் சிந்தனையாளர்களைப் பற்றிப் படித்து அறிந்துகொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நூலகமோ இணையதளமோ இன்னும் உருவாகவில்லை.

திராவிட இயக்கம் என்பது பெரியாருக்கும் முற்பட்டது. கருணாநிதிக்குப் பிறகும் தொடர்ச்சி உண்டு. நூற்றுக்கணக்கான அறிவுஜீவிகள் பங்களிப்பு செய்த இயக்கம் அது. டி.எம்.நாயர் தொடங்கி சிங்காரவேலர், குத்தூசி குருசாமி, சாமி.சிதம்பரனார், குருவிக்கரம்பை வேலு, இரா.செழியன், முரசொலி மாறன், க.திருநாவுக்கரசு என்று நீளும் பெரும்பட்டியல் அது. அதேபோல இலக்கியத்திலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் நீள்கின்றன. இங்கர்சால், பெட்ரண்ட் ரஸல் என்று மேலைநாட்டு சிந்தனையுலகத்தையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்கள் திராவிட இயக்கத்தினர். தலைவர்கள் தங்களுக்கென்று தனி இதழ்களை நடத்திய வரலாறும் உண்டு. திராவிட இயக்கத்தின் எழுத்துப் பதிவுகள் நவீன தமிழ்நாட்டினுடைய அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையெல்லாம் காலத்தில் கரைந்துபோய்விடாதிருக்க அனைத்தையும் ஆவணப்படுத்தியாக வேண்டும். அதைப் பொதுவெளியில் அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில் இணையத்திலும் கிடைக்கச்செய்ய வேண்டும். ஆட்சிப்பொறுப்புக்கு எதிர்நின்று மோதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்துமுடிக்க வேண்டிய காலத்தின் மிகப் பெரும் பணி இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x