Published : 03 Aug 2018 09:04 AM
Last Updated : 03 Aug 2018 09:04 AM

பிரியாணி அரசியல்

அரசியல் என்பது தொண்டாக இருந்த காலம் போய் தொழிலாக மாறிப்போனதன் விளைவுதான், சென்னையில் அரங்கேறிய பிரியாணி கலாட்டா சம்பவம். கட்சியின் பெயர் சொல்லி பிரியாணி கேட்டு, கடை ஊழியர்களைக் கட்சி ஊழியர்கள் தாக்கும் அந்தக் காட்சிகள் அரசியல் மீதான மதிப்பை மேலும் குலைக்கவே வழிவகுக்கின்றன.

அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு மதிப்பு குறையவும், வெறுப்புணர்வு உருவானதற்கும் சிறிதும் பெரிதுமாகப் பல  காரணங்கள் உண்டு. பல கட்சிகளில், தங்களிடம் உறுப்பினராக இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. சொல்லப்போனால், குற்றச் செயல்களில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுவதற்காக அரசியல் பின்னணி தேடுபவர்களுக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்து வணிகர்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டுபவர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கின்ற கட்சிகளும் உண்டு.

இதன் விளைவுகளை மக்கள் ஒவ்வொரு நாளும் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதனால்தான், அரசியல் என்பது தொண்டு என்ற எண்ணமெல்லாம் மறைந்து, அது ஒரு கொள்ளை லாபத் தொழில் என்பதுபோல ஆகிக்கொண்டிருக்கிறது.

சென்னையின் கடை ஒன்றில், கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த பிரியாணி அடாவடி சம்பவத்தை இன்று உலகம் முழுக்க சமூக ஊடகங்களில் அந்தக் கட்சியின் எதிரிகளும் அதிருப்தியாளர்களும் உற்சாகமாகப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த அவமானச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கட்சியும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பிரியாணி கேட்டு அடிதடி நடத்தியவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது. அக்கட்சியின் செயல் தலைவர் நேரடியாகவே பாதிக்கப்பட்ட உணவகத்தினரைச் சந்தித்துப் பேசிவந்திருக்கிறார்.

இது ஏதோ அந்த ஒரு கட்சி மட்டுமே தொடர்புடைய விஷயம் அல்ல. கட்சிப் பொதுக் கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் நிதி கொடுக்கச் சொல்லி, வேறு சில கட்சிக்காரர்கள்  கடைக்காரர்களை மிரட்டிய காட்சிகளும் இதேபோல் சமூக ஊடகங்களில் பரவியது உண்டு. ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவருடைய தகுதி பற்றி குறைந்தபட்ச விசாரணையாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு கட்சிகளுக்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே அது நடைமுறையில் இருக்கிறது.

கூட்டம் சேர்த்துக் காட்டினால் போதும் என்ற வெறியில், ‘யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இணையலாம்’ என்றும், ‘அலைபேசி வாயிலாக ஒரு மிஸ்டுகால் கொடுத்தாலே போதும், உறுப்பினர் ஆக்கிவிடுகிறோம்’ என்றும் துரத்தித் துரத்தி ஆள் பிடிப்பவர்களுக்கு இந்த பிரியாணி சம்பவம் சமீபத்து எச்சரிக்கை. இதில் இன்னொரு கொடுமை, ஒரே நபர் எத்தனை கட்சிகளில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை வைத்திருக்க முடியும். இதற்கும் கண்காணிப்பு,  கட்டுப்பாடெல்லாம் கிடையாது என்பதாகும்.

இது கணினியின் காலம். தாங்கள் நடத்துவது அரசியல் தொண்டுதானே தவிர, தொழில் அல்ல என்று உறுதியாக நிரூபிக்க விரும்பும் கட்சிகள் - தங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களோடு, ஒவ்வொரு உறுப்பினரின் விவரங்களையும்கூட மக்கள் பார்வைக்கு வெளியிட முடியும். அதில், குற்றச்செயல் புரிந்தவர்கள் பற்றி ஆதாரத்தோடு யாரிடமாவது தகவல் இருந்தால், அதைக் கட்சியின் பார்வைக்கு மக்கள் கொண்டுவரவும் வழிவகை செய்ய முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு குற்றத்தன்மையிலிருந்து ஒவ்வொரு கட்சியும் தன்னை அந்நியமாக வைத்திருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவே இனி அது மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறும்.

- தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thankarbachan5@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x