Published : 30 Oct 2017 10:09 AM
Last Updated : 30 Oct 2017 10:09 AM

கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி!- யோகேந்திர யாதவ்

கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும் கண்ணாடி அவருடைய வாழ்க்கை!

தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் நாட்டின் பிற பகுதியில் உள்ள இயக்கங்களுக்கு ஒரு வழிகாட்டி. அரை நூற்றாண்டாகத் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் இரு திராவிடக் கட்சிகளையும் தாண்டிச் செல்லாமல் இருக்க சமூக நீதி இயக்கமே முக்கியமான காரணம். சமூக நீதிக்கான இயக்கத்தை வெற்றிகரமான அரசியல் கட்சியாக மாற்றிய முதல் தலைமுறை அரசியல்வாதிகளில் முக்கியமானவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கம் வலுவாகக் காலூன்றியதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அதன் பலன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பலன் தந்ததோடு நிற்கவில்லை என்பதேயாகும். இதிலும் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். வட இந்தியாவிலும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பேசும் அரசியல் 1960-களில் தொடங்கியது. 1967-ல் அவர்களில் பலர் முதல்வர் பதவிக்கும் வந்தனர். ஆனால், இது சமூக நீதியை நோக்கிய வெற்றிகரமான பயணமாக அமையவில்லை. விரைவிலேயே அந்த அலை வடிந்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்தக் குரல்களைக் கட்டுப்படுத்தியது. 1990-களில் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்த பிறகே சமூக நீதியை நோக்கிய அடுத்த பயணத்தில் வட இந்தியா காலடியை வைத்தது. அதேபோல, அரசியல் தளத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை நோக்கி அதிகாரம் சென்றாலும், பிற்படுத்தப்பட்டவர்களில் செல்வாக்கு மிக்க – தாக்கூர், மராத்தா, யாதவ், குர்மி போன்ற - உயர் சாதியினரைத்தான் அது மையம் கொண்டிருக்கிறதே தவிர, வேர் நோக்கிச் செல்லவில்லை. ஆனால், மக்கள்தொகையில் மிகச் சிறிய எண்ணிக்கையைக் கொண்ட, சாதிய அடுக்குகளில் கீழே இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வந்து, இவ்வளவு உயர்ந்த இடத்தை கருணாநிதி தக்கவைத்திருப்பது சமூகப் புரட்சியே தவிர வேறல்ல. அந்தப் புரட்சிக்கு அவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்!

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக உயர கருணாநிதி முக்கியமான காரணம். சமூக நீதி அரசியலை அரசுத் திட்டங்களாக உருமாற்றியது அவருடைய இன்னொரு முக்கியமான சாதனை. சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக, அதிமுக இடையில் ஆரோக்கியமான போட்டி எப்போதும் நிலவியது. இதனால்தான் சமூக நலத் திட்ட அமலாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு திராவிட இயக்கத்தின் நிரந்தரமான பங்களிப்பு என்றால் அது, ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ என்ற தேசியவாதத்தை ஏற்க மறுத்து அது உறுதியாக நிற்பதுதான். கருணாநிதியின் ஆட்சியில் மாநில அரசு ஒருபோதும் மத்திய அரசுக்குக் கீழான அரசாகச் செயல்பட்டதில்லை. மத்திய-மாநில உறவு தொடர்பாக அவர் நியமித்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தாலும் கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான கதவை அது திறந்தது. சுதந்திர தினத்தன்று முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவரும் அவரே. தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடிநிலை அமலாக்கத்தைத் துணிவோடு எதிர்த்த முதல்வர் என்று வரலாற்றில் என்றும் கருணாநிதி நினைவுகூரப்படுவார்.

துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கு திமுகவிடம் ஏனைய கட்சிகளிடமிருந்து வேறுபட்ட தன்மையையும் பழைய தீவிரத்தையும் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த போக்கில் – குடும்ப அரசியல் உட்பட – திமுக செல்வது ஏற்கவே முடியாதது. பெருமை மிக்க திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை மேலும் கொண்டுசெல்ல வேண்டும் என்றால், திமுகவின் புதிய தலைமுறையினர் அதன் முன்னோடிகளைப் பின்பற்ற வேண்டும்!

யோகேந்திர யாதவ், சமூகவியல் அறிஞர், (ஆம் ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்)

தமிழில்: வ.ரங்காசாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x