Last Updated : 29 Aug, 2018 09:26 AM

 

Published : 29 Aug 2018 09:26 AM
Last Updated : 29 Aug 2018 09:26 AM

ஸ்டாலினிடம் எதிர்பார்ப்பது என்ன? 

அண்ணாவும் கருணாநிதியும் ஒரு பெரும் காலம் தூக்கிச் சுமந்த பெரும் பொறுப்பு ஸ்டாலினிடம் வந்திருக்கிறது. மாநிலத்தின் இன்னொரு பெரிய கட்சியும் ஆளும்கட்சியான அதிமுக இரு பிரிவுகளாகப் பிளந்து, மாநில நலனுக்காகக் குரலெழுப்ப இயலாத, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதே சாதனை என்று ஆகிவிட்டிருக்கும் நிலையில், கட்சியைத் தாண்டியும் மாநில அரசியலில் பெரிய சவால்கள் ஸ்டாலின் முன் நிற்கின்றன.

சுமார் 50 ஆண்டு காலப் பொது வாழ்வு, நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் சிறை வாழ்க்கை, அடக்குமுறையை எதிர்கொள்ளல், கட்சியில் படிப்படியான வளர்ச்சி, ஆட்சி நிர்வாகத்தில் சட்ட மன்ற உறுப்பினர் - மேயர் - உள்ளாட்சித் துறை அமைச்சர் - துணை முதல்வர் என்று அவரது நேர்த்தியான பணி என்று எல்லாமும் சேர்ந்து ஸ்டாலினைக் கனியவைத்திருக்கின்றன. கட்சியின் தலைமைக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் தலைமைக்கும் தகுதி படைத்தவராய் மாற்றியிருக்கின்றன. பொதுமக்களிடத்திலும் ஸ்டாலின் மீது ஒரு அபிமானம் உருவாகியிருப்பதும், அவர் மீது பெரிய குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதும் அவருக்குள்ள பெரிய அனுகூலம். மக்களிடம் உள்ள எதிர்பார்ப்பே அவர் முன்னுள்ள பெரிய சவால் என்றும் சொல்லலாம்.

தமிழகம் மீண்டும் அனைத்துத் துறைகளிலும் முன்னுதாரணமாய்த் திகழும் வகையில் நல்லாட்சி, செயல் திறன், மாநில உரிமைக்காகப் போராடும் அரசியல் சூழல் தமிழகத்தில் உருவாக ஸ்டாலின் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. கருணாநிதி போன்ற ஒரு பெரும் தலைவரோடு தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்று தன்னடக்கத்துடன் ஸ்டாலின் சொல்லும்போதும், அவரை கருணாநிதியோடு கட்சியினரும், மற்றவர்களும் ஒப்பிடவே செய்வார்கள். ‘கருணாநிதி நல்ல நிலையில் இருந்திருந்தால், இந்நேரம் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்’ என்று சொன்னவர்களுக்கு, ‘கருணாநிதியே அப்படி நடந்துகொண்டதில்லை’ என்று ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டி உருவான நிலையைப் பார்த்தோம். இந்த ஒப்பீடு தொடரும். ஆனால், அதுதான் அவர் தன்னை ஒரு வெற்றிகரமான தலைவராக நிலைநிறுத்திக்கொள்வதற்கான அளவீட்டுக் கருவியாகவும் இருக்கப்போகிறது.

திமுகவை இளைஞர்களிடத்தில் கொண்டுசேர்க்க வேண்டும். திமுகவைக் காலத்தின் தேவைக்கேற்ப நவீனப்படுத்தும் வழிகளையும் அவர் மேற்கொள்ள வேண்டும். தேசிய அரசியல் இந்திய மாநிலங்களின் அரசியல் சூழல்களைக் குலைத்துப்போட்டிருக்கும் நிலையில், தேசிய அரங்கில் திமுகவின் பங்களிப்பை அதிகரிக்கக் கூடுதலாக அவர் உழைக்க வேண்டியிருக்கும். திமுகவின் அடிப்படைக் கொள்கைகள் நீர்த்துப்போகாமல், தமிழகத்தின் வேளாண்மைப் பிரச்சினை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, இயற்கையை அழித்துவிடாத புதிய தொழில் கொள்கை, நீர்நிலைகள் மீட்டுருவாக்கத்துக்கான புதிய செயல்திட்டம், ஊழலுக்கு எதிரான எளிமையான செயல்பாடு, கட்சியினர் அவரவர் தொகுதி மக்கள் பணிகளோடு ஒருங்கிணைத்தல் என்று திமுகவின் போக்கில் நிறைய உத்வேகச் செயல்பாடுகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கருணாநிதி கவலைக்கிடமாக இருந்த நிலையில், ஒரு பிரியாணி கடையில் அராஜகமாய் நடந்துகொண்ட கட்சியினர் மீது அவர் எடுத்த நடவடிக்கையும் அக்கடைக்கு அவர் நேரில் சென்று கடை ஊழியர்களிடம் அவர் ஆறுதல் கூறியதும் அவர் சென்றுகொண்டிருக்கும் பாதையைச் சுட்டிக்காட்ட நல்ல உதாரணம்.

கட்சியினர் மட்டும் அல்ல; மாநில மக்களும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் அவரை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை மனதில் கொண்டு, அவர் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்!

- இரா.கண்ணன், ஐக்கிய நாடுகள் சபையில், சோமாலியாவில் ஹிர்ஷபெல்லே மாநில அலுவலகத்தின் துணைத் தலைவர்.

தொடர்புக்கு:unkannan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x