Published : 16 Aug 2018 09:28 AM
Last Updated : 16 Aug 2018 09:28 AM

தலைவன் 11: இரா.முத்தரசன் 

உழவர் மகன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலிவலம் எனும் குக்கிராமத்தில் ராமசாமி - மாரிமுத்து தம்பதியின் ஐந்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் முத்தரசன் (18.1.1950). அப்பா சிறு விவசாயி. காவிரிப் படுகையில் சிறு வயதிலேயே சேற்றில் இறங்கி வேலை பார்த்தவர் முத்தரசன். மனைவி பங்கஜம், சமூக நலத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகன் ஜீவானந்தம், மகள் சுகன்யா.

பள்ளி இல்லா கிராமத்தில்

அப்போதெல்லாம் ஆலிவலத்தில் பள்ளிகள் இல்லை. கொஞ்சம் படித்தவர்கள் நேரம் கிடைக்கும்போது நடத்திய வகுப்புகளில்தான் ‘அ’, ‘ஆ’ கற்றார் முத்தரசன். பின்னர், ஓராசிரியர் பள்ளி தொடங்கப்பட்டாலும், பேருந்து வசதி இல்லாததால் அந்த ஆசிரியரும் பணியிலிருந்து நின்றுவிட, 4-ம் வகுப்புக்குப் பக்கத்து (பொன்னிறை) கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தார் முத்தரசன். அம்மனூரிலிருந்து சேதுராமன் என்ற அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் 5 கிலோ மீட்டர் நடந்துவந்து பாடம் சொல்லித்தர ஆலிவலம் தொடக்கப் பள்ளி மீண்டும் இயங்கியது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1965-ல் ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தார் முத்தரசன். அந்த ஆண்டில் மாநிலம் முழுவதும் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நெருப்பு, இந்தப் பள்ளியிலும் பற்றிக்கொள்ள, முத்தரசன் உள்ளிட்ட மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். பள்ளிக்கு அருகிலிருந்த ரயில், தபால் நிலைய பெயர்ப் பலகைகளிலிருந்த இந்தி எழுத்துகளை அழித்தனர். போராட்டம் தீவிரமானதால் பள்ளிக்கு ஒருமாத காலம் விடுமுறை விடப்பட்டது.

காந்தி இயக்கச் செயலாளர்

ஆலிவலம் வட்டார கிராமங்களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியை நடத்தியபோது, உண்டியல் வசூலாக ரூ.500 கிடைத்தது. உடனே, காந்தி மக்கள் மன்றத்தைத் தொடங்கிய முத்தரசன், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து அந்த நிதியைக் கொண்டு குளம், வாய்க்கால்களை மராமத்து செய்தார். தூய்மைப் பணியையும் ஒருங்கிணைத்தார். மன்றத்தின் சார்பில் அரசியல், சமூக விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தினார்.

17 ஆண்டு காலச் செயலாளர்

1970-ல் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்தரசன். 1971-ல் திருத்துறைப்பூண்டி வேட்பாளராக மணலி கந்தசாமி போட்டியிட்டபோது, வெறும் டீயை மட்டும் குடித்துவிட்டு ஒன்றியம் முழுக்க ஜீப்பில் மைக் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தவர் முத்தரசன். ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், பொருளாளர் என்று படிப்படியாக முன்னேறிய அவர், 1984-ல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளரானார். 1997-ல் திருவாரூரில் அச்சங்கத்தின் மாநிலச் செயலாளரானவர், 17 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். காத்தமுத்து, நல்லகண்ணு, டி.ராஜா, பி.எஸ்.எல்லப்பன் போன்றோர் வகித்த பொறுப்பு அது.

‘ஜனசக்தி’ வாசிப்பு

அந்தக் காலகட்டத்தில் ஆலிவலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் இருந்தது. அந்த ஊர் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ், இளம் தோழர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுபவர். உள்ளூர் டீக்கடையில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் ‘ஜனசக்தி’ பத்திரிகையைச் சத்தமாக வாசித்துக்காட்டும் பொறுப்பைப் பள்ளி மாணவர்களிடம் ஒப்படைத்தார் அவர். அதில் முத்தரசனின் ஆர்வத்தைப் பார்த்து, ‘அஜய் குமார் கோஷ் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்’ என்ற புத்தகத்தை வழங்கி படிக்கச் சொன்னார். முத்தரசனுக்குச் சித்தாந்த வகுப்பெடுத்தவர் கோவிந்தராஜ். பின்னாளில் அதே ‘ஜனசக்தி’யில் தர்க்கபூர்வமான கட்டுரையாளராக முத்தரசன் உருவெடுப்பதற்கான விதை ஊன்றப்பட்டது அப்போதுதான்.

கவர்ந்திழுத்த கம்யூனிஸ்ட் கட்சி

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது பள்ளி செல்வதை நிறுத்தியவர், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றோரின் வாழ்க்கையையும், சுதந்திரப் போராட்டத்தையும் படித்தார். கம்யூனிஸ்ட் உறுப்பினராகும் உத்வேகம் வந்தது. திருத்துறைப்பூண்டியில் இருந்த கட்சியின் ஒன்றியக் குழு அலுவலகத்தில் அவரைச் சேர்த்துவிட்டார் கோவிந்தராஜ். அலுவலகத்துக்கு வரும் தலைவர்களுக்கு டீ, காபி, வெற்றிலைப் பாக்கு வாங்கித்தருவது, பத்திரிகைகளை ஒழுங்குபடுத்துவதுதான் முத்தரசனின் பணியாக இருந்தது. 18 வயதானதும், (1969) கட்சியின் பயிற்சி உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டவர், ஆறு மாதப் பயிற்சிக்குப் பின் கட்சி உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்

கடின உழைப்பும், மூத்த தலைவர்களின் நன்மதிப்பும் அவரை மாநிலச் செயலாளர் பொறுப்பை நோக்கி நகர்த்தியது. 2015-ல் கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு இவரும், சி.மகேந்திரனும் போட்டியிட இவரது பெயரை முன்மொழிந்தவர் தா.பாண்டியன். அந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன், இந்தாண்டு மன்னார்குடியில் நடந்த மாநாட்டில் இரண்டாவது முறையாக அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நில மீட்புப் போராட்டம்

நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, அதிகப்படியான நிலத்தை மீட்டு நிலமற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதில் அரசு மெத்தனம் காட்டியது. இதைக் கண்டித்து 1970 ஆகஸ்ட்டில் தமிழகம் முழுவதும் நில மீட்புப் போராட்டத்தை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தலைவர்கள் பலர் முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்யப்பட்டபோதும், தடையை மீறி 300 பேருடன் சென்று நெடும்பலம் சாமியப்ப முதலியாரின் நிலத்தில் செங்கொடியை நாட்டி கைதானார் முத்தரசன். மீண்டும் ஒரு மாதம் சிறைவாசம்.

கீழவெண்மணி சம்பவமும் கைதும்

முத்தரசன் உறுப்பினரான நேரத்தில், கீழவெண்மணி பிரச்சினை உச்சத்தில் இருந்தது. அந்தச் சம்பவம் குறித்து விசாரித்த கணபதியா பிள்ளையின் பரிந்துரைகளில், “அரசுத் துறையில் கடைநிலை ஊழியருக்குக் கிடைக்கிற ஊதியமாவது, விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் கூலி நிர்ணயம் செய்ய வேண்டும்” என்பது முக்கியமானது. அதை நடைமுறைப்படுத்தக் கோரி 1969-ல் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றுக் கைதான 5,000 பேரில் முத்தரசனும் ஒருவர். தோழர்களுடன் திருச்சி சிறையில் இருந்த ஒரு மாத காலமும் அவரை மேலும் செதுக்கியது. இதே ஆண்டில் கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில், தா.பாண்டியனை முதன்முதலில் சந்தித்தார்.

காத்திருக்கும் சவால்

2016 தேர்தலின்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியதில் முத்தரசனுக்கும் முக்கியப் பங்குண்டு என்றாலும், அத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்சி அந்தஸ்தை மீட்க இம்முறை கட்சியை வெற்றிப்பாதையை நோக்கி திருப்பவும் தமிழகத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்பி, எம்எல்ஏக்களை வெற்றிபெற வைக்கவும் வேண்டிய கூட்டுப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கிறார் முத்தரசன்!

தொகுப்பு: கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x