Last Updated : 14 Jul, 2018 08:49 AM

 

Published : 14 Jul 2018 08:49 AM
Last Updated : 14 Jul 2018 08:49 AM

பிரமிள் இலக்கியத்தின் லட்சிய உருவம்: கால சுப்ரமணியம் பேட்டி

டைப்பூக்கம், விமர்சனம் இரண்டிலும் தமிழில் உச்சம்தொட்ட மேதமைகளில் ஒருவர் பிரமிள். நண்பர், பதிப்பாளர், பாதுகாவலர் என்று பிரமிளின் நிழலாக அவரது காலம் முழுவதும் தொடர்ந்தவர் கால சுப்ரமணியம். பிரமிளின் அத்தனை எழுத்துகளையும் நூலாக்கும் அவருடைய கனவு தமிழின் கனவும்கூட. இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரிடம் பேசினேன்.

பிரமிள் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனார்? அவருடனான உங்கள் நட்பு எப்படி இருந்தது?

1973-76ல் கோவையில் பட்டப்படிப்பின்போது பல சிறுபத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. பிரமிளின் விமர்சனக் கட்டுரைகளும் இலக்கிய அரசியல் எழுத்துகளும் அப்போதுதான் படிக்க வாய்த்தது. பிரமிளின் விமர்சன எழுத்துக்களை வியந்து, பிறகுதான் அவரது கவிதைக்குச் சென்றேன். அவரது ‘கண்ணாடியுள்ளிருந்து’, ‘கைப்பிடியளவு கடல்’ கவிதைத் தொகுப்புகளைப் படித்துப் பிரமித்தேன்.

நான் ‘கொல்லிப்பாவை’க்கு எழுதிய கடிதம் ஒன்றை அதன் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன், பிரமிளுக்கு அனுப்பியிருந்தார். அதற்கு ஒரு நீண்ட பதில் கடிதத்தை எனக்கு எழுதினார் பிரமிள். “இனிமேல் எழுதுவதில் அவநம்பிக்கை கொண்டிருந்த நான், இனி உங்களுக்காகவே எழுதலாம் போலிருக்கிறதே?” என்று ஒரு வரியும் இருந்தது. அதுவரை எங்கும் தனியாகச் சென்றிராத நான் சென்னை வந்து அவரைப் பார்த்துப் பழகினேன். அவருடைய எழுத்துகள் வெளிவர உதவினேன்.

‘படிமம்’ இலக்கியத் தொகுப்பு, ‘மேல் நோக்கிய பயணம்’ கவிதைத் தொகுப்பு என்பவற்றைத் தொடர்ந்து அவருக்காகவே ‘லயம்’ சிறுபத்திரிகை, ‘லயம்’ வெளியீடு ஆரம்பித்தேன். சொன்னதுபோல், அவர் பிறகு எழுதியதையெல்லாம் எனக்கு அனுப்பிவைக்கத் தொடங்கிவிட்டார்.

நான் பத்து ஆண்டுகளுக்குமேல் கௌரவ விரிவுரையாளராக மிகக் குறைந்த ஊதியத்தில் இருந்து, மிகத் தாமதமாக 1998-ல் அரசுக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கிய காலத்துக்கு முன் 1996 இறுதியிலேயே அவர் மறைந்துவிட்டார். எனவே, குறைந்த அளவிலேயே அவரை வெளியிட முடிந்தது. பிறகு லயம், அடையாளம், வம்சி, நற்றிணை, நவீன விருட்சம், அம்ருதா, தமிழோசை மூலம் பல நூல்கள் வெளிவந்தன. என்றாலும், வெளிவராதவை ஆயிரம் பக்கங்களில் இருந்தன. அவையெல்லாம் காலவரிசையில் தொகுக்கப்பட்டுதான் ஆறு நூல்களாக இப்போது வெளிவந்துள்ளன.

எழுத்தாளர்-வாசகர் உறவாக ஆரம்பித்த பிரமிளின் நெருக்கம், பின்பு அவரது நெருங்கிய நண்பராக, அபிமானியாக, ஆய்வாளராக, பதிப்பாளராகவெல்லாம் உருமாறியது. பிற்காலத்தில் அவருக்கு இலக்கியம் சாராத சில நண்பர்களின் உதவி இருந்தது. நான் முன்னெடுக்காவிட்டாலும் யாராவது அவரை வெளிக்கொண்டுவந்திருப்பார்கள்.

கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகம், கதை, ஓவியம், மொழிபெயர்ப்பு எனப் பன்முகம் கொண்டவர் பிரமிள். உங்களுக்கு அவரது எந்த வகைமை மீது ஈடுபாடு அதிகம்?

நான் அவருடைய விமர்சன ஆற்றலிலிருந்துதான் கவிதையைச் சென்றடைந்தேன். அவரது எல்லா வகைமைகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. இது கவிதை, விமர்சனம், புனைகதை ஆகியவற்றில் அதிகம். ஆன்மிகம்தான் பிரமிளின் பிரதான அக்கறை.

ஒருவர் ஏன் பிரமிளை வாசிக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

உலக இலக்கியத்தின், ஆன்மிகத்தின் ஆழ அகலங்கள் தெரிந்தவர் மட்டுமே, உச்சபட்சத்தைத் தெரிந்துகொள்ளும் அவசம் மிகுந்தவர் மட்டுமே பிரமிளின் முழுமையை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். பிரமிளின் கவிதைகள் வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமானவை. கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் பிரமிளை வாசித்துப் பார்க்க வேண்டும். அவர் கவிஞர்களின் கவிஞர் என்றும் பேசப்பட்டார். உலகத்தரத்திலான கவிதைகளைத் தமிழில் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் பிரமிளை வாசிக்க வேண்டும். தற்போது விமர்சனங்கள் என்பது மேலோட்டமானதாக, தங்கள் கொள்கை சார்ந்த அபிப்ராயம், பட்டியல் என்பதாகவே இருக்கிறது. ஆழமான பார்வையைப் பிரமிளிடம் பார்க்கலாம். விமர்சன நோக்கில் ஆழமான அஸ்திவாரங்கள் அமைத்தவர் பிரமிள். கதைகளி லும் புதுமைப்பித்தனுக்குப் பிறகாக வேறுவேறு விதங்களில் படைத்தது பிரமிள்தான்.

இலக்கிய அனுபவத்தின் சிகரச் சாதனைகள் பிரமிளுடையவை. அவரது வாழ்நாளில் மிகக் குறைந்த அங்கீகாரத்தையே பெற்றார். திட்டமிட்டு ஒதுக்கப்பட்டார். ஆனால், இப்போது இந்தத் தலைமுறை அவரை அறிய ஆவல் கொள்கிறது. ‘இந்து தமிழ்’ தனது இலக்கிய விழாவில் ‘பிரமிள் விருது’ என்ற பெயரில் வழங்கியும், அவரைப் பற்றி பல விதங்களில் கட்டுரைகள் வெளியிட்டும் பரவலான கவனத்துக்கு அவரைக் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்கு உரியது.

பிரமிள் முழுத் தொகுப்பையும் வாசிக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கிறது?

பிரமிள் குறித்து தமிழ்ச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சித்திரம் முழுமையானது அல்ல. அதுபோல, பத்து வருடங்களாகத் திரட்டி சேகரித்தவற்றைப் பிற பதிப்பகங்கள் வாயிலாகக் கொண்டுவந்திருந்தாலும் பிரமிளின் கடுமையான விமர்சனப்போக்கால் பதிப்பகம் சார்ந்த சிலருக்குச் சில விஷயங்கள் உவப்பாக இருப்பதில்லை.

அதனால், சில சமரசங்களைச் செய்ய நேர்ந்திருக்கிறது. பத்தாண்டுகள் இடைவிடாத முயற்சிக்குப் பின் ‘பிரமிள் படைப்புகள்’ என்ற 6 தொகுதிகள் அடங்கிய 3,400 பக்கங்கள் கொண்ட பிரமிளின் முழுமையான எழுத்துகள் இப்போது வெளிவந்துள்ளன. பிரமிளின் நிறைகுறைகளை முழுமையாக அறிந்துகொள்ள இந்த முழுத் தொகுப்பு உதவும். இந்தத் தொகுப்பு, தமிழின் பதிப்புச் சாதனைகளில் ஒன்று. கண்டு, கேட்டு, உண்டு உயிர்ப்பவர்கள் பாக்கியவான்கள்.

பிரமிள் அவரது பதிப்புரிமை முழுவதையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதை நிறைவேற்றிவிட்டதான திருப்தி உங்களுக்கு இருக்கிறதா?

நான்தான் அவருடைய பதிப்பாளன், சரிதை யாளன், தகுதியாளன் என்பதை அவர் எப்போதும் சொல்லிவந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய எழுத்துகளின் உரிமை, அவரது புத்தகச் சேகரிப்பு, கையெழுத்துப் பிரதிகள் போன்றவை தன் மறைவுக்குப் பின் என்னையே சேரும் என்பதை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்திட்டு தன் மேஜையில் வைத்திருந்தார்.

அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இவற்றை என்னிடம் சேர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அவரது நண்பர் மூலம் செய்துவைத்திருந்தார். இதற்காக மட்டும் நான் அவரது எழுத்துக்களை அவரது காலத்திலும் பிறகும் இன்றும் கொண்டுவரவில்லை. அவர் ஆளுமை மேலும் அவர் படைப்புகளின் மேலும் கொண்டிருக்கும் அபிமானமும் அவற்றின் தகுதிப்பாடும்தான் இதற்கு முழுமுதற் காரணம்.

பிரமிள் இறந்த பிறகு கையெழுத்துப் பிரதியாக இருந்தவற்றையும் வெளியிட்டிருக்கிறேன். நானே மெனக்கெட்டு தட்டச்சுசெய்து, வடிவமைத்துதான் பதிப்பகங்களிடம் கொடுத்திருக்கிறேன். பதிப்பகங்களிடமிருந்து, பெரிதாக எனது உழைப்புக்குப் பலன் கிடைத்தது கிடையாது. இப்போது நான் விரும்பிய வடிவமைப்பில் அவரது எல்லா படைப்புகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டுவந்திருப்பது மிகுந்த நிறைவைத் தருவதாக இருக்கிறது.

நாளை (ஜூலை 15) மாலை 5.30 மணியளவில் கோடம்பாக்கம்

எம்.எம். பிரிவியூ திரையரங்கில் ‘பிரமிள் படைப்புகள்’ வெளியீட்டு விழா. தொடர்புக்கு: 63836 75433

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x