Last Updated : 12 Jul, 2018 08:37 AM

 

Published : 12 Jul 2018 08:37 AM
Last Updated : 12 Jul 2018 08:37 AM

கால்பந்து தொடரும் காதல் கதை!

சி

லி எழுத்தாளர் இஸபெல் அயந்தேயின் வரிகள் இவை: “ஒருவேளை காதலைத் தேடுவதற்காகவே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் காதலைக் கண்டடையவும், தொலைக்கவும்… ஒவ்வொரு காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். ஒவ்வொரு காதல் முடிவுறும் பொழுதும், ஒரு புதிய காயத்தைப் பெறுகிறோம். நான் பெருமைக்குரிய தழும்புகளைப் பெற்றிருக்கிறேன்.”

பல ட்விஸ்ட்டுகளோடு கால்பந்தாட்ட உலகக் கோப்பை பயணித்துக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா, பிரேசில் முதலான நாடுகளைக் கடந்து ரசிகர்கள் விரும்பும் அணிகள் தோற்றுப்போக, யாருமே எதிர்பார்க்காத அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி யிருக்கின்றன. ‘பெட்டிங் நடக்கிறது’, ‘கிளப் மேட்ச்சில் காசுக்காக விளையாடும்போது காட்டும் ஆர்வம் உலகக் கோப்பையில் இல்லை’ என எத்தனை சர்ச்சைகள் கிளம்பினாலும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத் தோடு கண்டுகளிக்கிறார்கள். கண்ணீர் விட்டு அழு கிறார்கள். கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டை ரசிப்பது ஒரு இனிய காட்சி அனுபவம். ரத்தம் சொட்டச்சொட்ட கிளாடியேட்டர்களை மோதவிட்டு ரசித்த பண்டைய ரோம நாகரிகத்திலிருந்து, சிறு ஃபவுலைக்கூட அனு மதிக்காத இன்றைய கால்பந்தாட்டத்தை ரசிக்கும் நாகரிக சமூகம் வரை, மாபெரும் நேரடிக் காட்சி அனுபவங்களை விரும்புகிறார்கள். அதனை நேரடிச் செயலாக, நாமே விளையாடிப் பார்ப்பது முற்றிலும் வேறான அனுபவம். ஏறத்தாழ, ஒரு மனித உறவின் அனைத்து இன்ப, துன்ப சாத்தியப்பாடுகளையும் உடைய அனுபவம். எனக்கும் கால்பந்துக்குமான காதல் உறவும் அப்படி ஒரு கதைதான்.

விழியில் விழுந்து காலில் வளர்ந்த உறவே..

கால்பந்துடனான எனது முதல் நினைவு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்துடன் துவங்கியது. எனக்கு ஏழு வயது இருக்கலாம். என்னுடைய அப்பா என்னை ஒரு மேட்ச்சுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பா மாத்திரமல்லாமல் மொத்த கேலரியும் செய்த ஆரவாரம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.

வெகுகாலம் கழித்துத்தான் கால்பந்து விளையாடினேன். கிரிக்கெட் விளையாடப் பயன்படும் சிறிய ரப்பர் பந்துதான் எங்களது ஃபுட்பால். கொஞ்சம் கொஞ்சமாக ரப்பர் பந்து ஃபுட்பாலில் கோல் போடும் திறன் பெற்றவனானேன். அது உண்டாக்கிய மகிழ்ச்சியும், கர்வமும் மேலும் மேலும் கால்பந்து ஆர்வத்தை முடுக்கிவிட்டது.

பின்னர், பிடி ஆசிரியர் ஃபுட்பால் கொண்டுவந்தார். எங்கள் வகுப்பு மாணவிகள் மைதானத்தைக் கடந்துசெல்லும்போது நாங்கள் அடித்த ஷாட்டுகளும், கோல்களும் நாங்கள்தான் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறவர்கள் எனும் இறுமாப்பை ஏற்படுத்தின. கால்பந்தையே ஏன் வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது எனும் எண்ணம் பரவசத்தை ஏற்படுத்தியது. அதனை அமல்படுத்த முயன்ற அடுத்த சில ஆண்டுகளில் ஒரு புதிய உலகத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. ஆம், அது வேறு ஒரு உலகம். பலரும் அறியாத உலகம்.

வண்ண வண்ண டிரங்குப் பெட்டிகளின் உலகம்

கால்பந்து, கூடைப்பந்து முதலான பல்வேறு விளையாட்டுகளையும் ‘ஊக்குவிக்கும்’ பொருட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்ட விளையாட்டு விடுதிக்கான தேர்வில் கலந்துகொண்டேன். மதுரை விடுதியில் எனக்கு இடம் கிடைத்தது. 8-ம் வகுப்பில் டிரங்குப் பெட்டியோடு விடுதிக்குச் சென்றுசேர்ந்தேன்.

மதுரை, மேலூர், சேலம், திண்டுக்கல், ஈரோடு, கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி என பல ஊர்களிலிருந்தும் வந்துசேர்ந்திருந்த விதவிதமான வண்ண டிரங்குப் பெட்டிகள், கிடைத்த இடத்தில் தத்தமது கட்டில்களுக்கு அருகே சுவரோரமாக வைக்கப்பட்டிருக்கும். டிரங்குப் பெட்டிகளின் அளவும், தரமும், வண்ணமும், அவற்றின் உள்ளிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் அளவும், தரமும், வண்ணமும், ஒருவரது சாதி மற்றும் வர்க்க அடையாளம் என்பது வெகு காலத்துக்கு என் சிந்தனைக்கு எட்டவில்லை. அந்த ஒவ்வொரு டிரங்குப் பெட்டிக்கும் ஒரு கதை இருந்தது. அதைத் திறந்து கேட்பது, உங்கள் டிரங்குப் பெட்டியைத் திறப்பதற்கு உதவக் கூடியது.

அங்கே பல்வேறு விளையாட்டுகளை விளையாட வந்திருந்த பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் நூற்றில் தொண்ணூறு பேருக்கு அது வெறும் விளையாட்டல்ல. தத்தமது வீடுகளில் துரத்தும் வறுமையிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான துருப்புச் சீட்டு. இலவச உணவு, இலவச விளையாட்டு ஆடைகள், காலணிகள், இலவசக் கல்வி - இவற்றின் மூலம் கால்பந்தாட்டத்தைக் கற்று விளையாடி, எப்படியாவது ஒரு அரசு வேலை பெறுவதன் மூலம், நடுத்தர வர்க்கத்துக்குத் தாவிவிடுவதே ஒரே கனவு. எனவே காலையும், மாலையும் மணிக்கணக்கில் ஓடுவதும், விளையாடுவதும் நடக்கும். பின்னர், பள்ளிக்குச் சென்று வகுப்புகளில் உறங்குவோம். பெரும்பாலானோர் படிப்பால் பிரயோசனமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். எப்படியாவது ஒரு சப்- ஜூனியர் மேட்ச்சாவது விளையாட முடியாதா என்பது மாத்திரம்தான் லட்சியம்.

பயிற்சியாளர்களோ பெரும்பாலும் கடனுக்குப் பணியாற்றுபவர்கள். விதிவிலக்காக, எங்களைக் கால்பந்து மீது நேசம்கொள்ளச் செய்த ஒரு பயிற்சியாளர் (பெயர் மறந்துவிட்டது) வாராது வந்த மாமணிபோல வந்தார். அற்புதமான மனிதர். எங்களை ஏறத்தாழ குரங்குகளைப் போல ஆட்டுவித்தார். எங்களது அனைத்து வழக்கமான விளையாட்டுப் பயிற்சி முறைகளையும் அடியோடு மாற்றினார். எங்களுக் குள் அணி உணர்வை வளர்த்தெடுத்தார். துவக்கத்தில் அவர் மீது ஆத்திரம் இருந்தது. அவர் எங்களது விளையாட்டை மேம்படுத்திவிட்டார் என்பதை மெல்ல உணர ஆரம்பித்தோம். பல ஊர்களுக்கும் சென்று வெற்றிவாகை சூடினோம். திடீரென ஒரு நாள், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் பழைய செக்குமாடுகளாக மாறினோம்.

சோஷலிசப் பொருளாதாரம்

அன்றாடம் காலையும், மாலையும் இரண்டு மணி நேரம் விளையாடும் எங்களை வாட்டிவதைத்த விஷயம் பசி. ஆனால், எங்களுக்குக் கிடைக்கும் உணவின் தரமோ ‘வயிற்றுக்குப் பிரச்சினையில்லை’ ரகம். ஆனால், இலவச உணவில் குற்றம் சொல்லும் அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகளாக இல்லாத காரணத்தால் நாங்கள் உணவின் அளவை அதிகரிக்க எங்களுக்குள் போராடுவோம்.

எளிமையான வழிதான். அன்றாடம் கிடைக்கும் முட்டையையும், வாரம் ஒருநாள் கிடைக்கும் மாட்டுக் கறியையும் பந்தயமாக வைத்து கூடைப்பந்து விளையாடுவோம். அதன் மூலம், ‘திறமைக்கேற்ப பந்தயம், திறமைக்கேற்ப உணவு’ என எங்களுக்குப் புரிந்த சோஷலிச உணவுப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்தோம். மற்றபடி, எந்த ஒரு அரசு மாணவர் விடுதியிலும் நாம் காணக் கிடைக்கும் ‘மேம்பாட்டு’ அம்சங்களான கழிப்பிட வசதியின்மை, சகிக்க முடியாத குளியலறைகள், ஜெயில் வார்டனையொத்த சீனியர்களின் அராஜகங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் குழப்பங்கள், சீரழிவுகள் என அனைத்தும் தட்டுப்பாடின்றி தாராளமாகவே புழங்கின.

பயிற்சியாளர்கள், விடுதி வார்டன், மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆகியோர் எங்கள் மீது செலுத்திய அதிகாரம், செய்த ஊழல்கள் ஆகியவை பற்றி பல பக்கங்கள் எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் இப்போது தான் சற்றே புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வயதிலோ, ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை கிடைக்கும் மட்டன் பிரியாணிக்குத் தவம் கிடப்போம். வார்டனே பிரியாணி சமைத்துப் பரிமாறுவார் என்பதால், அவரைத் தெய்வமாகப் பார்ப்போம். கைப்பட சமைத்த பிரியாணிக்கும், கைப்பட வழங்கும் இலவசத் தொலைக்காட்சிக்கும், இலவச மடிக் கணினிக்கும் பெருகி ஓடும் அன்பு மட்டுமே அடிப்படை என்று தெரியாத நாங்கள், பிரியாணி எடுத்த எங்கள் புறங்கையை நக்குவோம்.

பின்னாளில், பழங்குடிச் சிறுவர்களின் மேம்பாட்டுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளுக்குச் செல்ல நேர்ந்தபோது, அங்கே சின்னஞ்சிறு சிறுவர்கள் வாழும் சூழலைக் கண்டபோது, நான் வாழ்ந்த கருணை இல்லம், அவர்களது கருணை இல்லத்தைவிட மேம்பட்டதாகவே இருந்தது என்பதை உணர்ந்தேன். அந்தச் சிறுவர்கள் அங்கேயே வளர்ந்து, படித்து, பின்னர் பத்மா சேஷாத்ரி, வேலம்மாள் மாணவர்களோடு போட்டியிட்டு நீட் தேர்வெழுதி, மருத்துவர்களாக வலம்வருவார்கள் என எண்ணியபோது, இந்த ஒட்டுமொத்த சமூக அமைப்பின் கருணையும் தொண்டையை அடைத்தது.

நினைவில் ததும்பும் பால்யம்

அன்றைய எனது விடுதி சகாக்கள் ஈரோடு காந்தி, கோவை சிவக்குமார், நாகர்கோவில் லாட்வின், ரூஃபஸ், தருமபுரி ஜெயப்பிரகாஷ் ஆகியோரெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் தத்தமது விளையாட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்களா என்றும் தெரியவில்லை. குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் நிச்சயம் மாபெரும் கால்பந்தாட்ட வீரனாக வருவான் என நான் உறுதிப்பட நம்பினேன். ஸ்டாப்பர்-பேக்காக டிஃபென்ஸில் விளையாடுவதையே அவன் விரும்பினான். அவன் மாத்திரம் களத்தில் இருந்தால், கோல் கீப்பர் உட்பட நாங்கள் எல்லாரும் மேலே சென்று விளையாடலாம். அவனைத் தாண்டி ஒரு பால்கூட எங்களது கோல் போஸ்ட்டை நெருங்க முடியாது.

விடுதியிலிருந்த இரண்டு வருடங்களில், கால்பந்து விளையாட்டில் எனது திறமை குறித்த யதார்த்தமான புரிதல் ஏற்பட்டது. மேலும் கல்வியில் நான் கொண்டிருந்த ஆர்வத்துக்கு விடுதி உகந்த சூழலாகவும் இல்லை. எனவே, விடுதியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தேன். என்னோடு விளையாட்டு விடுதியில் விளையாடிய நண்பர்களோடு ஒப்பிட்டால், நான் ஒரு கற்றுக்குட்டி மட்டுமே என்பதை உணர்கிறேன். வருடா வருடம் தூத்தூரிலிருந்து விடுதிக்கு வந்திறங்கும் அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத மீனவச் சிறுவர்கள், எவராலும் பிடிக்கவே முடியாத பிரான்ஸின் இம்பாப்பேபோல ஓடும் சிவகங்கை லோகு அண்ணன், சிரித்தபடி இடது காலால் பந்தை மெஸ்ஸிபோல லாகவமாகக் கடத்திச்செல்லும் தூத்துக்குடி அமிர்தராஜ்.. இப்படிப் பலரையும் நினைத்துக்கொள்வேன்.

உடல் எடை கூடி ஓடுவதே சிரமமாகிவிட்ட இந்நாட்களில், எனது மகனோடு அடிக்கடி கால்பந்து விளையாடுகிறேன். இப்போதும் பந்தைத் தொட்டவுடன் அது ஒட்டிப் பழகிய நாய்க்குட்டிபோல என் கால்களின் மேல் இஷ்டம்போலத் துள்ளி விளையாடுகிறது. யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்கான நிர்ப்பந்தங்களற்று சுதந்திரமாக பந்தைக் கடத்துகையில் உள்ளூர எழும்பும் மகிழ்ச்சியை என்னால் காதல் என்ற சொல்லால் மாத்திரமே குறிப்பிட முடிகிறது.

கால்பந்து வெறுமனே விளையாட்டல்ல!

“நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும்” எனும் விவேகானந்தரின் பொன்மொழி பிரபலமானது. கால்பந்தாட்டத்தை ஆடும்போது நீங்கள் சொர்க்கம் என்பதான ஏதோ ஒன்றை உணர முடியும். கால்பந்தாட்டம், உண்மையில் உங்களுக்கு எதிராக நீங்கள் நடத்தும் போராட்டம். ஆனால், அதனை நீங்கள் தனியாக நடத்த முடியாது. உங்கள் அணியோடு இணைந்து மற்றவர்கள் உருவாக்கும் சாதக பாதகங்களை ஏற்று, அதேவேளையில் உங்களது இயலாமை, அச்சம், வலி எனும் அனைத்துப் பலவீனங்களையும் வெல்வதற்கான போராட்டம்.

என்னதான் எதிர் அணியினர் எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டாலும், முரட்டுத்தனமான ஃபவுல்களில் ஈடுபட்டு உங்கள் அணியினரைக் காயப்படுத்தினாலும், அறிவார்ந்த நடுவர்கள்கூட எதிர் அணியின் பக்கம் சாய்ந்து ஆஃப்சைட் காட்டினாலும், இறுதி விசில் வரை விடாப்பிடியாக விளையாடுவதுதான் போராட்டத்தின் சாரம். வலியதே வெல்லும் எனும் இயற்கையின் அடிப்படைச் சாரமும் அதுதான். வெல்லும் இறுதி நொடி வரை எது வலியது என்பது சார்பியலின்படி தற்காலிகமானது!

- சரவணராஜா, ஐடி ஊழியர்.

தொடர்புக்கு: saravanaraja.b@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x