

நதிக்கு காது இருக்கிறதா, நதி நம்மோடு பேசக்கூடியதா? ஆமாம் என்கிறார்கள் கங்கை நதிக்கரையோர விவசாயிகள்; படகோட்டிகள். அவர்கள் தாயை வணங்குவது போலக் கங்கையை வணங்குகிறார்கள். அவர்களின் பிறப்பும் இறப்பும் கங்கையோடு தொடர்புகொண்டது. விவசாயிகள் நதியைத் தாயாக வழிபடுவது மரபு. ஆனால், ஒரு குஸ்தி பயில்வான் கங்கை நதியைத் தனது தாயாகக் கருதுகிறான்; அன்றாடம் கங்கையை வழிபடுகிறான். நதியின் நீர் எல்லோருக்கும் பொதுவானது. நதியோர விவசாயிகளைக் கங்கைத்தாயே வாழ வைக்கிறாள். ஆகவே அவர்கள் ஜமீன்தாரின் கட்டுபாடுகளுக்கு அடங்கத் தேவையில்லை என்று அந்தப் பயில்வான் வாதிடுகிறான்.
விளைச்சலில் பங்கு கேட்கும் ஜமீன்தாருக்கு எதிராகப் போராடும் அவன், பகையைச் சம்பாதித்துச்சிறைக்குப் போகிறான். அங்கு அவன் எழுந்திருக்கும்போதோ, உட்காரும்போதோ, தூங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, வாயிலிருந்து ‘கங்கா அம்மா’ என்ற ஒரே வார்த்தை மட்டும்தான் தொடர்ந்து வெளிப்படுகிறது. மட்டுரூ என்ற குஸ்தி பயில்வானின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கங்கைத்தாய்’ நாவலை இந்தி எழுத்தாளரான பைரவ் பிரசாத் குப்தா எழுதியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சரஸ்வதி ராம்னாத் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.