Last Updated : 12 Aug, 2014 09:34 AM

 

Published : 12 Aug 2014 09:34 AM
Last Updated : 12 Aug 2014 09:34 AM

கடலில் பாவிய பூதக் கால்கள்!

பழவேற்காட்டில் கால் வைத்தபோது நல்ல பசி. ஒரு டீயைக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். சாமிப்பிள்ளை எனக்கு முன்னே போய்க்கொண்டிருந்தார்.

“ஐயா, கொஞ்சம் மெல்லமாப் போலாங்களா?”

“இதுக்கே அசந்துட்டா எப்பிடி? நெறையக் கேட்குறீங்க. ஆயிரம் வருசத்தைத் தாண்டிப் போவணும்ல? இந்த வேகம் எப்பிடிக் காணும்?” - சொல்லிக்கொண்டே காற்றில் தாவிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல், நான் என் நடையை ஓட்டமாக்க ஆரம்பித்தேன்.

தமிழகக் கடலோடிகள், இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கான ஆணிவேரை எனக்குப் பிடித்துக்காட்டியவர் சாமிப்பிள்ளை. எந்த ஒரு பிரச்சினைக்கும் வெறும் புறச்சூழல் காரணிகள் மட்டும் மூலகாரணங்களாக இருப்பதில்லை. சமூக உளவியலுக் கும் அதில் முக்கியமான ஒரு பங்கு இருக்கும். கடலோடிகள் விஷயத் தில் அதைச் சரியாக அடையாளம் காட்டியவர் சாமிப்பிள்ளை.

மீனவன் எனச் சொல்லாதே; கடலோடி எனப் பழகு!

“நீங்க மொதல்ல சரித்திரத்தைக் கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். அப்போதான் இங்கெ இருக்குற பிரச்சினைங்களுக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும். இப்பம் நீங்களாம் பத்திரிகைகள்ல கடக்கரை யில இருக்குற எங்களை என்னன்னு சொல்லி எழுதுறீங்க? பொத்தாம் பொதுவா மீனவன், மீனவச் சமூகம்னு எழுதுறீங்க இல்லையா? மொதல்ல அதுவே தப்பு. கடலோடிங்கிற வார்த்தைதாம் சரி.

பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கப்பப் படை வெச்சிருந் தவன் தமிழன்னு சொல்லுறம். ராசேந்திர சோழன மாரி கடலை செயிச்சவன் யாரு உண்டுன்னு பேசுறம். சரி, அவன் யாரை வெச்சு செயிச்சான்? அந்தக் கப்பப் படையில் இருந்தவம்லாம் யாரு? திரைகடல் ஓடியும் திரவியம் தேடினவம்னு பேசுறம்; அப்படிக் கப்பல்ல ஓடி வாணிபம் செஞ்சவன் யாரு? முத்துக்குளிச்ச பரம்பரைங்கிறோம்; கடல்ல மூழ்குனவம் யாரு? எல்லாமும் இந்தக் கடக்கரையைச் சேந்தவன்தானே? மீனு புடிக்ககுறதுங்குறது ஒரு கடலோடிக்குத் தெரிஞ்ச பல கலைகள்ல ஒண்ணு. ஒரு விவசாயியானவன் எத்தன வித்தைங்களயும் தொழில்நுட்பங்களையும் கத்துவெச்சிருக்கான்? அவன வெறும் நெல்லுக்காரன்னு சொல்றது கொச்ச இல்லயா? அப்பிடித்தான் ஒரு கடலோடிய மீனவன்னு சொல்லுறதும். இது மொத தப்பு. அடுத்த தப்பு, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற மாரி, கடலுக்குப் போறவனெல்லாம் கடலோடின்னு நம்புறது.

ஐயா, நம்ம கடக்கரையில உள்ள ஆதி பழங்குடி இனக்குழுக்கள் பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையர், கடையர் இப்பிடி 13 இனங்களுக்குள்ள அடங்கிடும். மொத்தமா, பரதவர் சமுதாயம்னு சொல்றோம்னு வெச்சுக்குங்களேன். பின்னாடி, அரபு வியாபாரிய நம்ம கடக்கரைக்கு வந்தப்போ, இஸ்லாம் வந்துச்சு. போர்ச்சுகீசிய பாதிரிமாருங்க வந்தப்போ கிறித்தவம் வந்துச்சு. தொழிலை வெச்சு இந்தச் சமுதாயங்கள் எல்லாம் பெருத்தப்போ, கடக்கரை மக்களோட இனக் குழுக்கள் எண்ணிக்கை இன்னும் பெருத்துச்சு. ஆனா, இந்த இனக்குழுக்கள் பழக்கங்கள்ல என்ன வேறுபாடுங்க இருந்தாலும், கடலைப் பொறுத்தவரைக்கும் அது எங்க அம்மா, சாமீ எல்லாம்.

சுய கட்டுப்பாடுகள்

இப்போ பாரம்பரியக் கடலோடிகளுக்குன்னு ஒரு சட்டதிட்டம் இருக்கு. கடலுக்குள்ள போறதுக்கும் கட்டுப்பாடு உண்டு, கடல்ல தொழில் பண்ணுறதுக்கும் கட்டுப்பாடு உண்டு. இந்தக் கட்டுப்பாடு எல்லாமே காலங்காலமா எங்க பெரியவங்க சொல்லிக்கொடுத்தது, நாங்களே வகுத்துக்கிட்டது.

இப்போ ஒரு பாரம்பரியக் கடலோடியோட வலைல சின்ன மீன் பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சினை நண்டு பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சங்குப் பூக்கள் உள்ள சங்கு சிக்கினா கடல்ல தூக்கி விட்டுருவான். இதெல்லாம் நாளைக்கி வர்ற நம்ம தலை முறைக்கு. நாம அழிச்சிடக் கூடாதுங்கிறது அடிப்படை.

சொந்த செலவில் சூனியம்

சுதந்திரத்துக்கு அப்புறம் என்னாச்சுன்னா, மீன் வளத்தை அதிகரிக்கிறேன்டா தம்பின்னு சொல்லி, அரசாங்கம் உள்ள நுழைஞ்சுச்சு. அதுவரைக்கும் பருத்தி நூலு, சணலு, தென்னை நாருன்னு வலை பின்னிக்கிட்டிருந்த மக்ககிட்ட நைலான் வலையைக் கொடுத்துச்சு. பிடிக்கிற மீனு தன் ஊரைச் சுத்தி; மிச்சம்பட்டது கருவாடுக்குன்னு ஓடிக்கிட்டிருந்தவன்கிட்ட ஐஸ் கட்டியைக் கொடுத்துச்சு. வெளியூருங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் மீனை எடுத்துக்கிட்டுப் போவ லாரிங்களை அனுப்புச்சு. நல்லா வசதியாப் போய் பெருவாரியா மீன் பிடிக்க விசைப்படகுகளை அறிமுகப் படுத்துச்சு. கூடவே, கடல்ல அடிமண் வரைக்கும் வாரி அள்ளுற மாரி இழுவை மடிகளையும் கொடுத்துச்சு.

இந்த இழுவை மடியோட கதை என்னான்னா, ரெண்டாம் ஒலகப் போர்ல கடலுக்கு அடியில எதிரிங்க போட்டுவைக்கிற குண்டுங்களை வாரி வெளியே எடுக்குறதுக்காகக் கொண்டுவந்த மடி இது. எப்பிடி ஒலகப் போருக்குப் பின்னாடி, வெடிமருந்து தயாரிச்சவனெல்லாம் தன் கம்பெனியை வெச்சு உரம் தயாரிக்கிறவனா ஆனானோ, அப்பிடி வெடிகுண்டை எடுக்குற மடியை வெச்சு, மீன் பிடிக்கச் சொல்லிக்கொடுத்தான். நம்மூரைக் கெடுத்ததுல நார்வேக்காரனுக்குப் பங்கு உண்டு.

இதெல்லாம் கடக்கரைக்கு வந்தவுடனே, வியாபாரத்துக்காக வெளி ஆளுங்களும் அதிகாரிமாருங்களும் கடக்கரைக்கு வந்தாங்க. இந்தப் பாரம்பரியக் கடலோடிகிட்ட இல்லாத முதலீடும் தொழில்நுட்பமும் அவங்ககிட்ட இருந்துச்சு. அவங்க கண்ணுக்கு, கடலு அம்மா மடியா தெரியல. தங்கச் சுரங்கமா தெரிஞ்சுது. அள்ள ஆரம்பிச்சாங்க. கடலோடி சமூகத்தையும் அள்ளப் பழக்கினாங்க.

பறிகொடுத்த பாரம்பரிய அறிவும் அறமும்

இப்பம் கடைசியில எங்கே வந்து நிக்குதுன்னு கேட்டா, இன்னைக்குக் கடலுக்குப் போவ ஒரு கடலோடிதான் தேவைன்னு இல்ல. உங்ககிட்ட விசைப்படகு இருந்து, நவீனத் தொழில்நுட்பம் தெரிஞ்சா நீங்களும் போவலாம். காத்து தெரிய வேணாம், நீவாடு தெரிய வேணாம், மீன் குறி தெரிய வேணாம். எல்லாத்துக்கும் கருவி வந்தாச்சு. அதனால, கடலுக்குப் போற ஆளுங்க இன்னைக்கு ரெண்டா பிரிஞ்சு நிக்குறாங்க. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க. இன்னொண்ணு, தொழில்முறை கடலோடிங்க. இந்த ரெண்டாவது ஆளுங்களோட எண்ணிக்கை ரொம்பக் கொறைச்ச. ஆனா, அவங்க கையிலதான் இன்னைக்குத் தொழில் இருக்கு, கடக்கரை இருக்கு, கடல் இருக்கு.

இப்பிடி வெளியிலேர்ந்து வந்து கடலைப் பார்த்து சுரங்கமா நெனைச்சவங்க கொண்டாந்ததுதான் அனல் மின்நிலையங்கள்ல ஆரம்பிச்சி, கனிம மணல் ஆலை, அணு உலை வரைக்கும்.

நீங்க எங்க வேணா போங்க, எந்தப் பிரச்சினையை வேணா எழுதுங்க. கடல்ல நடக்குற மாற்றங்களுக்கான அடிப்படை இதுதான் பார்த்துங்க!”

அநாயாசமாக ஒரு பெரும் கதையைச் சொல்லிவிட்டு, வெற்றிலையை எடுத்து, அதன் முதுகில் சுண்ணாம்பைத் தடவ ஆரம்பித்தார் சாமிப்பிள்ளை.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x