

அணுத் துகள் இயற்பியல், குவாண்டம் புலக் கோட்பாடு, திரவ-திட நிலையில் திரட்சிபெற்ற பொருள் இயற்பியல் போன்ற துறைகளில் கணிசமான பங்களிப்பைச் செலுத்திய பேராசிரியர் ஏ.பி.பாலச்சந்திரன், ஏப்ரல் 18 அன்று தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார். கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தின் சேலத்தில் பிறந்து வளர்ந்த பாலச்சந்திரன், பல ஆண்டுகாலம் அமெரிக்காவின் புகழ்மிக்க சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் மதிப்பு மிக்க ஜோயல் டோர்மன் ஸ்டீல் எமரிட்டஸ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பின்னர் இந்தியா திரும்பி கோவையில் வசித்து வந்தார். அவரது மறைவு அறிவியல் புலத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய இழப்பு.
இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டிஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு ஆய்வு நெறியாளராக இருந்து பயிற்றுவித்தவர் பாலச்சந்திரன். ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாடர்ன் பிசிக்ஸ் ஏ’ உள்பட முக்கியமான ஆய்வு வெளியீடுகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று, உலக இயற்பியல் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கினார். ஏழு ஆய்வு நூல்களையும் 200 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிஉள்ளார்.