

பதின்ம வயது என்பது ஒரு விநோத ராட்டினம். அது எப்படிச் சுழலும் என யாராலும் கண்டறிய முடியாது. மனதின் ரகசிய ஜன்னல்கள் பதிமூன்று, பதினான்கு வயதில் திறந்துகொள்கின்றன. அதன் வழியே காணும் காட்சிகள் ஆசையைத் தூண்டுகின்றன. அந்தப் பருவத்தில் பெரியவர்கள் உலகிற்கும் சிறார் உலகிற்கும் நடுவில் ஊசலாட ஆரம்பிக்கிறார்கள்.
அந்த வயதில்தான் கண்ணாடியோடு நெருக்கம் கொள்ளத் தொடங்குகிறார்கள். கண்ணாடியோ குற்றவுணர்வைத் தூண்டுகிறது. நான் அழகாக இருக்கிறேனா, எனத் திரும்பத் திரும்பக் கண்ணாடியிடம் கேட்கிறார்கள். கண்ணாடி பதில் சொல்வதில்லை. அதன் மௌனம் உண்மையைப் புரியவைக்கிறது. தன்னை உலகம் பார்க்கிறது என்பதையும், தான் உலகத்தைப் பார்க்கிறேன் என்பதையும் அந்த வயதில் நன்றாக உணர்கிறார்கள். அதுவரை கையில் வைத்து விளையாடிய பொம்மைகளைத் தூக்கி எறிந்து விட்டு விருப்பமான ஆணையோ, பெண்ணையோ உடன் வைத்து ஆசைமொழி பேசி விளையாட ஆசைப்படுகிறார்கள்.