

சட்டமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, மும்மொழிக் கொள்கை தொடர்பாக உருவான சர்ச்சை, நிதிநிலை அறிக்கையின் தொனியையும் உள்ளடக்கத்தையும் வடிவமைத்திருக்கிறது.
இரண்டாவதாக, அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் அரசியல்ரீதியிலான பரிசீலனைகள் நிதிநிலை அறிக்கைக்கு மற்றொரு எல்லையை நிர்ணயித்துள்ளன. மத்திய அரசுடனான பிணக்கு - நிதி இழப்பு ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு, கல்வி, வீட்டுவசதி போன்ற திட்டங்களுக்கு மாநில வருவாயைச் செலவிடுவதன் மூலம், இந்த நிதிநிலை அறிக்கையில் அரசியல் ரீதியாகச் சில வியூக செலவினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.