Last Updated : 01 Jul, 2018 10:42 AM

 

Published : 01 Jul 2018 10:42 AM
Last Updated : 01 Jul 2018 10:42 AM

பதுங்கியிருக்கிறோம்... பயந்துவிடவில்லை!- மதுரையிலிருந்து மிரட்டும் சீமான்!

தினம் ஒரு பொதுக்கூட்டம், போராட்டம் என்றிருந்த சீமான், இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நிபந்தனை ஜாமீனில் மதுரையில் தங்கியிருக்கும் அவரைச் சந்திக்கச் சென்றோம்.

போராட்டம், மைக் இல்லாமல் எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?

கடந்த காலங்களிலும் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால், இது அசாதாரணமான சூழல். திரும்பிய திசையெல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கிற நேரத்தில், ஒவ்வொரு நொடியும் எனக்கு முக்கியம். இந்தத் தருணத்தில் இப்படித் திறந்தவெளிச் சிறையில் தள்ளிவிட்டார்கள். மக்களைச் சந்திக்க முடியவில்லை. தம்பிகளைப் பார்க்க முடியவில்லை. மே 18 தான் கடைசியாக மேடையேறினேன். ஆனாலும், பதுங்கியிருக்கிறோமே ஒழிய, பயந்துவிடவில்லை. பாய்வோம்.

ஒருகாலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான போராளியாகப் பேசப்பட்ட நீங்கள், இப்போது உள்ளூர் போராட்டங்களில் தீவிரமாக இருக்கிறீர்களே?

ஈழத்தில் அழித்தொழித்ததுபோல இங்கேயும் நம் நிலத்தை அபகரித்துக்கொணடு நம்மை ஒழிக்கப்பார்க்கிறார்கள். 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்களைச் சந்திக்க நானும், பியுஷ் மானுஷும் போனபோது, அம்மக்கள், “எங்களை விட்டுட்டுப் போயிடாதப்பா. எங்க பூமியைக் காப்பாத்திக் குடு” என்று என் கையைப் பிடித்துக்கொண்டு கதறினார்கள். அங்கு பேசியதற்காக என் மீது கொலை மிரட்டல் வழக்கு தொடுத்தார்கள். நான் மதுரையில் இருக்கும்போதே, வாடிப்பட்டி - திருமங்கலம் நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் அறிவிப்பு வருகிறது. தஞ்சை - மதுரை 8 வழிச்சாலையும் போடப்போகிறார்களாம். இதையெல்லாம் கேட்டது யார்? ஏற்கெனவே மதுரையிலிருந்து திருச்சி வழியாகத் தஞ்சாவூருக்கு நான்கு வழிச்சாலை இருக்கிறது. அது என்ன வண்டி நிறைஞ்சா போகிறது? குறுக்கும் நெடுக்குமாக நாய்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறன. விரைவுச் சாலைகளும், வானூர்தி நிலையங்களும் அமைத்துவிட்டால் நாடு வளர்ந்துவிடும் என்று நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை.

காங்கிரஸ் - திமுக ஆட்சியில் மாதக்கணக்கில் சிறையில் இருந்தவர் நீங்கள். அதைவிட இப்போதைய அடக்குமுறைகள் மோசமானதா?

அவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் மோடியும், எடப்பாடியும். அவர்களாவது தலைவர்களை மட்டும்தான் கைதுசெய்தார்கள். இவர்கள் என் இயக்கத்துத் தம்பிகளை எல்லாம் கைதுசெய்கிறார்கள். தூத்துக்குடியில் எங்கள் இயக்கத்தவரைத் தேடித்தேடி ஒவ்வொருத்தர் மீதும் 25 வழக்கு போடுகிறார்கள். 5 வழக்கில் பிணையெடுப்பதற்குள், மேற்கொண்டு 10 வழக்குகளைப் போடுகிறார்கள். “நாம் தமிழர் இயக்கத்தைவிட்டுப் போய்விடுகிறேன் என்று எழுதிக்கொடு, வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்” என்கிறார்கள். கட்சியைச் சின்னாபின்னமாக்கி, எங்கள் நடவடிக்கையை அடியோடு முடக்கி, மக்களுடனான எங்கள் தொடர்பை நிரந்தரமாகத் துண்டிப்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது நடக்காது!

உங்களைத் தேசத்துரோகி என்கிறார்களே?

ஒரு வார்த்தையைச் சொல்லும்போதே மக்களிடம் அச்சம் வர வேண்டும் என்று திட்டமிட்டே, சமூக விரோதி, மாவோயிஸ்ட், நக்சல், தேசத்துரோகி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது இந்த அரசு. என்னைப் பொறுத்தவரையில், இந்தத் தேசத்தின் சொத்தான வனங்களை வெட்டுவது, வளங்களைக் கொள்ளையடிப்பது, ஆற்று மணலை அள்ளி ஆற்றை கட்டாந்தரையாக்குவது, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதுதான் உண்மையான தேசத்துரோகம். சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளும் சரி, அதன் தலைவர்களும் சரி, முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதற்கு சேவை செய்கிற வெறும் தரகர்களாக இருக்க முடியுமே தவிர, மக்களுக்கு சேவை செய்கிற நல்லவர்களாக இருக்கவே முடியாது. தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் அறிவார்கள்.

நாம் தமிழர் கட்சி தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சாதித்தது என்ன, சறுக்கியது என்ன?

பெரிய பாரம்பரியம், அரசியல் பின்புலமிக்க இயக்கத்தில் இருந்து ஸ்டாலின், அன்புமணி, தினகரன்போல வந்தவர்கள் அல்ல நாங்கள். பிணவறையில் பிரசவித்தவர்கள், இனச்சாவிலிருந்து எழுந்துவந்தவர்கள் நாங்கள்.

பாமரர்களின் பிள்ளைகளான நாங்கள் ஏற்படுத்திய அளவுக்குத் தாக்கத்தை, கலகத்தை வேறு யாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியிருக்க முடியாது. தேர்தல் நேரத்தில் நாங்கள் வெளியிட்ட செயல்பாட்டு வரைவு அறிக்கையைப் படித்தாலே தெரியும், இதுபோல ஒரு லட்சியக்கூட்டம் இதுவரையில் பிறந்ததில்லை என்பது. ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததைத்தான் சறுக்கல் என்று சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு யுத்த தந்திரம். நான்கு பக்கமும் எதிரிகளைச் சூழவிட்டுவிட்டு யுத்த களத்தில் எந்த வீரனாலும் வெல்ல முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x