Published : 07 Jul 2018 09:56 AM
Last Updated : 07 Jul 2018 09:56 AM

சாரம் இழக்கிறதா சாகித்ய அகாடமி?

ந்திய மொழிகளில் வெளிவரும் சமகால இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் சாளரமாக விளங்குவது சாகித்ய அகாடமி பதிப்பிக்கும் நூல்கள். சமீப காலமாக அகாடமி வெளியிட்டுவரும் நூல்களின் தலைப்புகளும் உள்ளடக்கங்களும் அந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நொறுங்கச்செய்யும் வகையில் அமைந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இலக்கியத்தின் இடத்தை பல்கலைக்கழக பாணியிலான ஆய்வுக் கட்டுரைகள் ஆக்ரமித்துவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழில் இலக்கிய வாசிப்புக்குள் அடியெடுத்துவைக்கும் இளம்வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நூல்களில் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமி வெளியிட்ட இலக்கிய நூல்களுக்கு முதன்மை இடம் உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடும் இலக்கிய நூல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. தற்போது இலக்கியம் அல்லாத மற்ற வகை நூல்களுக்கே நேஷனல் புக் டிரஸ்ட் அதிக முக்கியத்துவம் தருகிறது. எனவே, இந்திய அளவிலான இலக்கியத்தை அறிந்துகொள்ள தற்போதைய ஒரே வாய்ப்பு சாகித்ய அகாடமி வெளியிடும் நூல்கள் மட்டுமே.

சாகித்ய அகாடமி வெளியிட்டுவரும் இந்திய மொழிகளின் இலக்கிய வரலாற்று நூல்களின் வரிசையும், ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னோடி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறுபட்ட கலாச்சாரங்களைத் தமிழ் இலக்கிய வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கின்றன. அதேபோல மற்ற மொழிகளில் வெளிவரும் முக்கிய இலக்கியப் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு இடையே தமிழில் நேரடியாக எழுதப்படும் நூல்களையும் சாகித்ய அகாடமி வெளியிடுகிறது.

தற்போது தமிழில் நேரடியாக வெளிவந்துகொண்டிருக்கும் நூல்களின் தலைப்புகள், சமகாலத்தில் தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இலக்கியச் சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு அதை மட்டுப்படுத்திவிடும் வகையிலும் இருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகவும், முழு நீள ஆய்வுக் கட்டுரைகளாகவுமே பெரும்பாலான நூல்கள் இருக்கின்றன. இலக்கியத் துறையிலும் ஆராய்ச்சியின் பங்களிப்பு அவசியமானதுதான். ஆனால், அந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழின் இலக்கிய மேம்பாட்டுக்கு உதவும்வகையிலும் வழிகாட்டும்வகையிலும் இருக்க வேண்டும். சாகித்ய அகாடமியின் சமீபத்திய வெளியீடுகளோ, பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகளின் வடிவத்தில் அமைந்திருக்கிறதேயொழிய, அவற்றின் உள்ளடக்கம், அவதானிப்புகள் எதிலும் புதுமைகள் இல்லை.

சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழுவில் தமிழ்ப் பேராசிரியர்கள் இடம்பெறுவதன் நோக்கம், கட்டற்ற படைப்பூக்கம் கொண்ட இலக்கியவாதிகளோடு ஆய்வு முறைமையைக் கடைபிடிக்கும் கல்விப்புலத்தினரும் கைகோக்க வேண்டும் என்பதுதான். உணர்ச்சியும் அறிவும் ஒன்றுசேரும்போது இலக்கியம் முழுமைபெறும். ஆனால், இன்று சாகித்ய அகாடமியில் ஆலோசகர்களாக இருக்கும் பேராசிரியர்களின் பிரசுர வேட்கை, இலக்கிய படைப்பாக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பிக்கும் நிறுவனமாக அகாடமியை மாற்றியிருக்கிறது. இதற்கு முன்பும் பேராசிரியர்கள் ஆலோசகர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்தளவுக்கு நிலை தவறியதில்லை. சாகித்ய அகாடமி வெளியீடுகளில் இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது அறிவுபூர்வமான அவதானிப்புகளை மட்டுமே, வெட்டி ஒட்டிய தகவல் தொகுப்புகளையல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x