

“பழ விளையாட்டு முடிஞ்சுது. நாம் மறுபடியும் பெர்சப்ட்ரானைப் பத்திப் பார்க்கலாமா?” என்று காரியத்திலேயே கண்ணாக இருந்தது செய்மெய். சரி என்றேன். ஃபிராங்க் ரோசன்பிளாட் கதைக்குத் திரும்பினோம். “இப்போது நாம் உரையாடிக்கொண்டிருக்கிற விஷயம் சற்றுச் சிக்கலாக இருக்கலாம், நான் முன்னும் பின்னுமாகக் கதை சொல்வதாக நினைக்க வேண்டாம். முதலில் புரிபடாத விஷயங்கள், அப்புறம் புரியும். சரியா?” என்று கேட்டது. ஆமோதித்தேன்.
“பெர்சப்ட்ரானை ஒரு ‘மின்சாரக் கண்ண’னாக உருவாக்கினார் ஃபிராங்க். வெறும் சூத்திரமாக அல்லாமல், இயந்திரப் பரிசோதனைகளையே செய்து பார்த்தார். 1958இல் அவர் மேற்கொண்ட ஒரு பரிசோதனையைப் பற்றிப் பார்ப்போம். அமெரிக்கக் கப்பற்படை அலுவலகம் அந்த ஆராய்ச்சிக்குப் பின்புலமாக இருந்தது.