Published : 13 Jul 2018 08:32 AM
Last Updated : 13 Jul 2018 08:32 AM

கல்விச் சிற்பி காமராஜர்

உலகமே பள்ளிக்கூடம்

காமராஜர், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே அவரது தந்தை குமாரசாமி காலமானார். குடும்பம் வறுமைக்கு ஆளாகியது. ஆறாவது வகுப்பு படிக்கும்போதே பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டார். உறவினர்களின் கடைகளில் உதவியாளாக வேலைசெய்தார். அந்தக் கடைகளுக்கு வருபவர்கள் விவாதித்துக்கொள்ளும் அரசியல் விவகாரங்களின் மீது அவருக்கு ஆர்வம் பிறந்தது. அந்த விவாதங்களைக் கூர்ந்து கவனித்தார். செய்தித்தாள்களைப் படித்து அன்றாடம் அரசியல் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டார். அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். தான் அறிந்த அரசியல் கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தவறியதில்லை. இப்படித்தான் பள்ளிக்கூடங்களுக்கு வெளியே ஒரு தலைவர் உருவெடுத்தார்

விவசாயத்துக்கும் ஏற்றம்

 காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் விவசாய வளர்ச்சிக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தார். விவசாய மேம்பாட்டுக்கு அவர் மேற்கொண்ட பணிகளில் முக்கியமானவை பாசனத் திட்டங்கள். கீழ்பவானி, மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய், ஆரணியாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, காவிரி கழிமுக வடிகால், புள்ளம்பாடி வாய்க்கால், புதிய கட்டளைக் கால்வாய், வீடூர் நீர்த்தேக்கம், கொடையாறு வாய்க்கால், நெய்யாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு ஆகிய நீர்ப்பாசன திட்டங்களால் தமிழகத்தின் பல பகுதிகளையும் வளமாக்கினார் காமராஜர்.

தமிழ்த் தொண்டு

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து ஆரவாரமில்லாமல் தமிழ்ப் பணியாற்றினார். கலைச்சொல் அகராதி அவர் ஆட்சியின்போதுதான் வெளியானது. நிதிநிலை அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் பொற்காலம்

காமராஜர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்காலங்களில் ஒன்று. விவசாயத் துறையின் வளர்ச்சிக்காகப் பாசன வசதி மேம்படுத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. காமராஜரால் தமிழகத்து மக்கள் அடைந்த பயன்கள் பல. அவற்றில் எப்போதும் முதல் இடத்தைப் பிடிப்பது கல்வித் துறை மேம்பாட்டில் அவர் முன்னெடுத்த செயல்பாடுகள்.

7d1ba38b4830184mrjpg100

காமராஜரின் ஆட்சிக்கு முந்தைய காலத்தில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை அவர் மீண்டும் திறந்துவைத்தார். அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கையால் மட்டும் எல்லோருக்கும் கல்வி கொடுக்க இயலாது என்பதால் மேலும் 14 ஆயிரம் பள்ளிகளைப் புதிதாகத் திறந்தார். மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு மதியஉணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவருடைய ஆட்சியில்தான் அதிகளவில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வட்டியில்லாத கடன் கொடுக்கவும் வழிவகைகள் செய்தார்.

தலைவர்களின் தலைவர்

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் அதற்குப் பரிசாக ஆட்சியதிகாரத்தைத் தொடர்ந்து வகிப்பது கூடாது, கட்சிக்காக உழைக்க வேண்டும் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும் என்றார். அவருடைய திட்டத்தை நேரு மகிழ்ச்சியோடு வரவேற்றார். வெறும் யோசனையோடு நிற்காமல் தானே முன்னுதாரணராகப் பதவியைத் துறந்து கட்சிப் பணியில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைமையே அவரிடம் வந்தது. அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் நேரு உடல்நலம் குன்றி காலமானார். நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்குத் தீர்வுகண்டவர் காமராஜர். லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார் காமராஜர். சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபோதும் பிரதமர் பதவியை நோக்கி தான் நகராமல் இந்திராவை நகர்த்தினார்.

கட்சிக்குள்ளும் போராட்டம்

காங்கிரஸ் கட்சியில் 1919-ல் காமராஜர் ஒரு தொண்டராக இணைந்தார். அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். இடைப்பட்ட காலத்தில், உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியில் தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது தலைமறைவாக இருந்து பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் தன்னுடைய வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் சிறையில் இருந்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் அனைவருமே போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்தான். அதற்காக ஆங்கிலேய ஆட்சியில் சிறைத்தண்டனையைப் பரிசாகப் பெற்றவர்கள்தான். அதுவே சுதந்திர இந்தியாவில் அவர்கள் அரசுப் பதவிகளைப் பெறவும் காரணமாயிற்று. காமராஜர் ஆங்கிலேய ஆட்சியோடும் எதிர்க்கட்சியினரோடும் மட்டும் போராடவில்லை. சொந்தக் கட்சிக்குள்ளும் பல்வேறு தரப்புகளோடு அவர் போராடிக்கொண்டிருந்தார். கட்சியில் அவர் எதிர்கொண்ட எதிரி ராஜாஜி. சர்வபலமிக்க ஆளுமை. ராஜாஜியை வீழ்த்தியதுதான் அரசியலில் காமராஜரின் பெரிய சாதனை.

மக்கள் நலனே முக்கியம்

விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. எனவே, பணம் இருப்பவர்களும் பதவியை விரும்புபவர்களும் அந்தக் கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், காமராஜரோ பதவிகளைப் பெறுவதைக் காட்டிலும் மக்களுக்கு உழைப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். அவரது நம்பிக்கையும் முயற்சியும் வீண்போகவில்லை. மக்களுக்காக உழைத்த அவரைப் பதவிகள் தானாகவே தேடிவந்தன. தமிழகத்தின் முதலமைச்சராக 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது கட்சியில் தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களையும்கூட தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அரசியல் பகையைக் காட்டிலும் மக்கள்நலனே முதன்மையானது என்பதில் அவர் காட்டிய உறுதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஆவடி காட்டிய சோஷலிசப் பாதை

ஆவடியில் மாபெரும் காங்கிரஸ் மாநாட்டை 10.1.1955-ல் நடத்தினார் காமராஜர். வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும், தேசத்தின் அரிய வளங்களை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தவும் சோஷலிசம்தான் உற்ற கொள்கை என்று தீர்மானித்திருந்தது காங்கிரஸ். பெரம்பூரில் ரயில்பெட்டித் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, திருவெறும்பூரில் பெல் ஆலை, ஆவடி ராணுவ டாங்க் தொழிற்சாலை எல்லாம் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்டதுதான்.

சென்னை கிண்டி, விருதுநகர், கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, நாகர்கோவில், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்பேட்டைகளும் தொடங்கப்பட்டன. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற அண்ணாவின் முழக்கத்துக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய நிலையிலிருந்த காமராஜர், காங்கிரஸின் புதிய தீர்மானத்தை அதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார்.

மின்உற்பத்தியில் தன்னிறைவு

காமராஜர் காலத்தில் தொழிற்சாலைகள் அதிகம் திறக்கப்பட முக்கியக் காரணமாக இருந்தது ஆலைகளுக்கு வேண்டிய மின்சாரத்தைத் தடையின்றித் தர முடிந்ததுதான். அன்றைக்கிருந்த நீர்வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி பெரியாறு, குந்தா நீர் மின்னுற்பத்தி திட்டங்களை அமல்படுத்தினார். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை அகழ்ந்தெடுக்கும் நிறுவனத்தை அமைத்ததுடன் அனல் மின் நிலையங்களுக்கும் வழிகோலினார்.

தேர்ந்த வாசகர்

காமராஜர் ஆங்கிலம் அறிவார். இந்தியும் பேசுவார். ஆனால், ஆங்கிலம் இந்தியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வெளியேதான். பத்திரிகைகளைக் காலையில் எழுந்தவுடன் படித்துவிடுவதும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு நடவடிக்கை எடுப்பதும் அவர் கடைபிடித்த ஒழுங்குகளில் ஒன்று. வெகுஜன பத்திரிகைகள் மட்டுமின்றி சிறுபத்திரிகைகளையும் விடாமல் வாசித்தவர். ஹெரால்டு லாஸ்கி எழுதிய அரசியல் இலக்கணம் (எ கிராமர் ஆஃப் பாலிடிக்ஸ்) அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம். ஒவ்வொரு பக்கத்தையும் அவர் அடிக்கோடிட்டுப் படித்திருக்கிறார்.

திராவிடக் கட்சிகளுக்கு முன்னோடி

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டின் வரலாற்றைப் பார்ப்பவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் போக்கிலிருந்து மாறுபட்ட போக்கைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று சொல்வதுண்டு. உண்மையில், காமராஜர் காலத்திலேயே அது தொடங்கிவிட்டது. தேசிய அளவில் காங்கிரஸ், நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதையாக தொழில் வளர்ச்சியை முன்னெடுத்தபோது காமராஜர் இங்கு அதில் சமூகநீதிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

பெரியாரோடு மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். திமுகவின் வளர்ச்சியைக் காட்டி பயமுறுத்தியே டெல்லியிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தார். பிற்பாடு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மூவரும் சொன்னபடி பலவகைகளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்களுக்குக் காமராஜர் முன்னோடியாக இருந்தார். தமிழக வரலாற்றில் மிக பயன்மிக்கதான ஆய்வுக்குரிய பகுதி காங்கிரஸை அழித்தொழிப்பதையே லட்சியமாகக் கொண்ட பெரியார், காமராஜருக்காக ஓட்டு கேட்டு ஊர்ஊராகப் பயணித்ததும், இந்திய தேசியத்துக்கு இங்கு பெரும் சவாலாக இருந்த பெரியாருடன் காமராஜர் இணைந்து பணியாற்றியதும்தான். தமிழக நலனே இருவரின் பிரதான நலனாக இருந்தது.

படங்கள்: ‘தி இந்து’ ஆவணக்காப்பகம்

தொகுப்பு: சாரி, சிவசு, கே.கே.மகேஷ், த.ராஜன்

வடிவமைப்பு: எஸ்.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x