

முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று அழைக்கப்படும் ‘தி லாஜிக்கல் தியரிஸ்ட்’ ஒரு விஷயத்தை நிரூபித்தது. அதாவது எண்களை மட்டுமல்ல; தர்க்கவியல் கோட்பாடுகளைக்கூட, குறியீட்டுப் பிரதிநிதித்துவ முறையில் அதனால் விளக்க முடிந்தது என்பதுதான். செயற்கை நுண்ணறிவு என்பது வழக்கமான கணினியிலிருந்து வித்தியாசப்படும் இடம் இங்கேதான் தொடங்குகிறது. உள்ளே எல்லாம் பூஜ்ஜியங்களாகவும் ஒன்றுகளாகவும் இருக்கலாம். ஆனால் வெளியே, இப்போது தத்துவவியல்கூட இயந்திரத்துக்கு இரையாகிவிட்டது!
“இது ஆச்சரியம்தான்!” என்று ஒப்புக்கொண்டேன். “அது மட்டுமல்ல. இந்த சின்ன மென்பொருளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு ஓர் ஆய்வுத் துறையாக உருவாகத் தொடங்கியது. மனித நுண்ணறிவு இருந்தால் தான் செய்ய முடியும் என்று கருதப்படும் ஒரு வேலையை இயந்திரங்களுக்கு நுண்ணறிவை வழங்கி அவற்றின் மூலமாகச் செய்துவிடலாம் என்கிற ஆசை, பேராசை, மெல்ல அறிவுலகில் பரவியது.