

அருணா ராய் - இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர். மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் (MKSS - தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வலுசேர்க்கும் அமைப்பு) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் தேசிய ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவர். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து...
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த உங்களைப் பொதுநலன் சார்ந்து பணியாற்றத் தூண்டியது எது? - டெல்லியில் என்னுடன் பணியாற்றிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் பசியைப் பற்றியும் வறுமையைப் பற்றியும் பேசியதில்லை. இடமாற்றமும் பதவி உயர்வும்தான் எப்போதுமே அவர்களது பேசுபொருளாக இருக்கும். ஊழலும் லஞ்சமும் மலிந்திருக்கும் இடத்தில் அதிகாரமும் உடன் சேரும்போது என்னவாகும்? அந்த அதிகாரமும் இடமும் தேவையில்லை என விலகினேன்.