Last Updated : 03 Jul, 2018 09:21 AM

 

Published : 03 Jul 2018 09:21 AM
Last Updated : 03 Jul 2018 09:21 AM

ஜிஎஸ்டியின் ஓராண்டு: உடைந்துவிட்ட வரிச் சங்கிலி!

டந்த ஆண்டு ஜூலை 1-ல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டுக் கூட்டத்தில் ‘பொதுச் சரக்கு - சேவை வரி’ (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டபோது, அதைப் புதிய சுதந்திரமாகவே கொண்டாடினர். ஜிஎஸ்டி அறிமுகமாகி ஓராண்டு நிறைவுறும் தருணத்தில் இது என்ன சாதனைகளைச் செய்தது என்ற கேள்வி எழுகிறது. எந்தச் சீர்திருத்தத்திலும் உடனடியாகப் பலனை எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் சிக்கலான சீர்திருத்தம் அமலாகும்போது பல குறைபாடுகள் ஏற்படுவது சகஜம். ஆனால், ஒரு கேள்விக்கு நிச்சயம் பதில் தேவை. பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறதா?

பொதுச் சரக்கு-சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டால் தொழில், வர்த்தக நடைமுறைகள் எளிதாகிவிடும், சந்தைகள் திறமையாகச் செயல்படும், வரி வருவாய் அதிகரிக்கும், பொருட்களின் விலை குறையும் என்று கூறப்பட்டது. வரி வருவாய் அதிகரித்தால் அரசால் நிறைய சேவைகளை அளிக்க முடியும் என்றனர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டால், எல்லோருக்கும் எல்லா பலனும் கிடைத்துவிடும் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது.

தொடரும் சிக்கல்கள்

ஆனால் இன்னமும்கூட தொழில், வர்த்தக நிறுவனங் கள் தங்களுடைய வேலையை எளிதாகச் செய்யும் வகையில் ஜிஎஸ்டி நடைமுறைகள் இல்லை. ஒரு சிலர் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு ஓரளவுக்கு ஈடுகொடுக்கின்றனர். ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் முன்கூட்டியே விவாதிக்கப்பட்டு முடிவுசெய்யப்படவில்லை, எந்தெந்தப் பண்டங் களுக்கு எவ்வளவு என்பது வெகு தாமதமாகத்தான் இறுதிசெய்யப்பட்டது. தொழில் துறையால் உரிய காலத்தில் விலையை நிர்ணயிக்க முடியாதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அப்படியே தொடர்கின்றன. ‘பொதுச் சரக்கு-சேவை வரி வலையமைப்பு’ (ஜிஎஸ்டிஎன்) கணினி மென்பொருள், கோடிக்கணக்கான வரிப் பதிவுகளைக் கையாள முடியாமல் திணறத் தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான கணக்குகளை வலை யமைப்பில் ஏற்ற வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு தொழில் அல்லது வர்த்தகமும் மாதந்தோறும் 10-ம் நாளில் ஒரு படிவத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும், 15-வது நாளில் அதைச் சரிபார்க்க வேண்டும், மூன்றாவது படிவத்தை 20-வது நாளில் மீண்டும் பதிவேற்ற வேண்டும். 15-வது நாளில் பதிவேற்றப்பட வேண்டிய படிவம் அந்தத் தொழிலுக்கு சப்ளையர்கள் தரும் தரவுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள். 17 வரிகளுக்குப் பதிலாக ஒரே வரிதான். ஆனால், பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது என்று கூறினாலும் எளிமைப்படுத்துவது தொடரவேயில்லை.

ரூ.20 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விற்றுமுதல் உள்ள சிறு வணிகங்கள் சந்தித்த பிரச்சினைகள் தனி. பின்னர், இந்த வரம்பு ரூ.1.5 கோடி வரை உயர்த்தப்பட்டது. அவர்களால் இடுபொருள் வரிக் கழிவுக் கணக்கை (ஐடிசி) தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, அவர் களிடம் வாங்குவோர், அந்தச் சிறு வணிகர்கள் செலுத்தியிருக்க வேண்டிய வரியைச் செலுத்த வேண்டியதாயிற்று. இந்தச் சிறு வணிகர்கள் மாநிலங்களுக்கு இடையில் விற்க அனுமதியில்லை. எனவே, பக்கத்து மாநில எல்லைகளுக்கு அருகில் இருப்பவர்களுடைய வணிகம் குறுகிவிட்டது. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, சிறு நிறுவனங்களும் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன.

தீர்க்கமற்ற தீர்வுகள்

இந்தப் பிரச்சினைகள் உடனுக்குடன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஜிஎஸ்டி பேரவைக் கூட்டத்தில் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இந்நடவடிக்கைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகக் குழப்பங்களை அதிகப்படுத்தியுள்ளன. ஜிஎஸ்டியின் முக்கிய அங்கம் என்று கருதப்பட்ட சில, நிறுத்திவைக்கப்பட்டன அல்லது நிரந்தரமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு ‘இ-வே பில்’ என்று அழைக்கப்படும் ‘மின் வணிகப் போக்குவரத்து ரசீது’ நடைமுறை ‘2018 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்’ என்று அறிவிக்கப்பட்டது. உணவகங்களின் வரிவிகிதம் 5% ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இடுபொருள் வரிக் கழிவு அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே, புதுப்புது விளக்கங்களைப் பெற வேண்டியிருக்கிறது. சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.

விலைவாசி உயர்வுக்கும் ஜிஎஸ்டி காரணமாகிவிட்டது. காரணம், சேவைகள் மீதான வரி 15%-லிருந்து 18% ஆக உயர்ந்துவிட்டது. இடுபொருள் வரிக் கழிவும் (ஐடிசி) எதிர்பார்த்தபடி விலை குறைய உதவவில்லை. உணவகங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஐடிசி விலக்கப்பட்டு வேறு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னொரு உதாரணம். ஐடிசி பிரிவைத் தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் ‘அதிக லாப விலைக்கு எதிரான சட்டத்தை’ அரசு இயற்றியிருக்கிறது. இச்சட்டத்தைத் தொழில் துறை கடுமையாக எதிர்க்கிறது. அரசால் இதை அமல்படுத்த முடியாமல் இருக்கிறது. அத்தியாவசியப் பண்டங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு தரப்பட்டிருந்தாலும் அடிப்படையான பண்டங்களின் விலையும், சேவை வரியும் உயர்வதால் எல்லாவற்றின் விலையும் உயர்கிறது.

டீசல் அல்லது லாரி விலை உயரும்போது போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது. புன்செய் தானியங்கள், காய்கறிகள் விலை உயர்வு இதற்கு நல்ல உதாரணம்.

தவறான வடிவமைப்பு

ஜிஎஸ்டி 0%, 5%, 12%, 18%, 28% என்று இருக்கிறது. தங்கத்துக்கும் தங்க நகைகளுக்கும் தனி வரிவிகிதம். பெட்ரோலியப் பண்டங்களும் மதுபான வகைகளும் ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டுவரப்படவில்லை. மின்சாரம், மனை வணிகமும் இதில் சேரவில்லை. இப்படியாக பலதரப்பட்ட வரிவிகிதங்களும் விலக்குகளும் இருப்பதால் ஒன்றன் மீது ஒன்றாக வரிச் சுமை கூடுவது தொடர்கிறது.

மூலப்பொருளிலிருந்து இறுதிப்பொருள் அல்லது சேவை வரி நீளும் வகையில் ஜிஎஸ்டி வரி இந்தியாவில் இல்லை. இது பல இடங்களில் துண்டுதுண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு கொள்கை இலக்குகளை நிறைவேற்ற அரசு முற்பட்டதால், இது முழுமையானதாக இல்லை. ஏழைகள் நுகரும் பண்டங்களுக்கும், சிறு தொழில் அல்லது வியாபாரம் கையாளும் பண்டங்களுக் கும் வரி விலக்கு தரப்பட்டிருக்கிறது. ‘பிஎம்டபிள்யு காருக்கும் செருப்புக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது’ என்று நிதியமைச்சர் கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கது.

1991-ல் வரிவிதிப்பு தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைவிட பெரிய மாற்றங்களை இந்த ஜிஎஸ்டி கொண்டுவந்துவிடவில்லை. ஏழைகள் நலனுக்காக அரசு அதிகம் செலவழிக்கும் வகையில் அதிக வரி வருவாயை யும் ஜிஎஸ்டி தரவில்லை. அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளைச் சேதப்படுத்திவிட்டதால், உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் கடுமையாகப் பாதித்துவிட்டது. இதன் விளைவு, பொருளாதார வளர்ச்சியிலும் தெரிகிறது. மிகவும் சிக்கலான பொருளாதாரத்தில் சிக்கலான வரி நிர்வாக நடைமுறையை அறிமுகப்படுத்தியால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒருசில நன்மைகளைத் தவிர சரியான திசையில் நமது பொருளாதாரம் நகராமல் இருப்பதற்குத் தவறாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டியும் முக்கியமான காரணம்!

- அருண் குமார்,

டெல்லியில் உள்ள சமூக அறிவியல் கழகத்தில் மால்கம் எஸ்.ஆதிசேஷய்யா இருக்கைப் பேராசிரியர்.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x