Published : 24 Jul 2018 09:37 AM
Last Updated : 24 Jul 2018 09:37 AM

பாய்ந்துவரும் காவிரி... அடுத்த குறுவைக்காவது வழிபிறக்கட்டும்!

மேட்டூர் அணையின் பதினாறு கண்களும் திறக்கப்பட்டுள்ளன. பாய்ந்துவருகிறாள் காவிரி. நாற்று இட்டு, இது குறுவை நடவுசெய்ய வேண்டிய பருவம். இனிமேல் வழியில்லை, கடந்த மாதங்களில்  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, கர்நாடகம் ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை வழங்கியிருந்தால், சிறிய அளவிலாவது குறுவை பயிரிட்டிருக்கலாம். காலம் கடந்துவிட்டது.

கவலையின் பத்தாண்டுகள்

காவிரிப் படுகை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யாத காலங்களில்கூட, பல லட்சம் ஏக்கர்களில்  குறுவை சாகுபடி நடந்தது. காவிரியில் நீர் இல்லாவிட்டாலும்கூட, நிலத்தடி நீர் குறையாமல் இருந்ததுதான் காரணம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் குறுவை சாகுபடியும் பொய்த்து, சம்பாவும் கேள்விக்குறியாகியுள்ளது. 1960-களில்  தஞ்சை தொடங்கி, தெற்கே கோடியக்கரை வரை 20 அடியில் எங்கே கைப்பிடி பம்பு அமைத்தாலும் நல்ல குடிநீரைப் பருக முடியும். இன்று டெல்டாவில் ஒரு விவசாயி குடிநீருக்கு அல்லது பாசனத்துக்கு நல்ல நீர் ஊற்றைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், ரூ. 10 லட்சம் வரை செலவழிக்க வேண்டும்.  அப்படிச் செலவுசெய்தாலும் நன்னீர் ஓட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சிலர் இதனால் கடன்பட்டதுதான் மிச்சம்.

மானியம் மட்டும் போதுமா?

பருவ மழை பொய்த்துப்போன நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்வதற்கு வசதியாக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ரூ. 56 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 12 மணி நேர மும்முனை மின்சாரம், இடுபொருட்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், உரங்கள், தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்கள்  போன்றவை 100%  மானியத்தில் வழங்கப்படும் எனவும் இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

மின்சாரம் மற்றும் இடுபொருட்களைத் தருவதாக அறிவித்துவிட்டால் மட்டும் போதுமா?  காவிரிப் படுகை மாவட்டங்களில் சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரே இல்லை. அதற்கு மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டாமா? மழைக் காலங்களில் வீணாகும் நீரையும், காவிரியில் எதிர்பாராதவகையில் திறந்துவிடப்படும் நீரையும் சேமிக்கச் சிறிய அளவிலான தடுப்பணைகள் குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

அது தாலுக்கா அளவில் அமையும்படி வரையறை செய்ய வேண்டும். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி  தற்போது அமைத்துள்ள காவிரி வாரியத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது.  அதன் தலைவர்  மசூத் உசேன் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்தாகவும், புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதாகவும்  தெரிவித்தார்.

 அவரின் கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தாலும் வாரியத்துக்கு உத்தரவிடுவதற்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளதா, அழுத்தம் கொடுத்து தங்களது முடிவை நிறைவேற்றவும் முடியுமா என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

நீர் சேமிப்புக்குத் திட்டம் தேவை

முதல் கூட்டத்தில் காவிரி ஆணையத் தலைவர், ஜூன் மாதத்துக்குத் தமிழகத்துக்கு வந்துள்ள தண்ணீர்  அளவைக் கழித்துவிட்டு, எஞ்சிய நீரை வழங்குமாறு  அறிவுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்ட நீரை கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டதாக ஆணையத்தில் தெரிவித்து கணக்குக் காட்டியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு உருவானது.  இப்போதும்கூட கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. உபரி கசிவுகளைத்தான் வெளியேற்றி வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் மேட்டூரின் நீர்மட்டம் உயர்ந்து, அதன் காரணமாகவே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தமிழக அரசு இனிமேலாவது வல்லுநர்களைக் கொண்டு காவிரிப் படுகையில் நீர் சேமிப்புக்கான புதிய திட்டங்களை உருவாக்கினால் மட்டுமே குறுவை சாகுபடியை மீட்டெடுக்க முடியும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x