Last Updated : 19 Jul, 2018 09:31 AM

 

Published : 19 Jul 2018 09:31 AM
Last Updated : 19 Jul 2018 09:31 AM

உயர் கல்வி ஆணையத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன?

சமூக நீதி, சம நீதியைவிட ‘தகுதி மட்டுமே’ என்ற கருத்தாக்கத்தை உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு முன்வைக்கிறது.  அ.குமரேசன்பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. (பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் விலக்கல்) சட்டம்-2018 என்பதாக ஒரு சட்ட முன்வரைவு கடந்த ஜூன் 28-ல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாகப் பொதுமக்கள் கருத்துக் கூற ஜூலை 7 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. நாடு முழுவதும் தாக்கம் செலுத்தக்கூடிய, கல்விக் களத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கை தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்து சொல்லிவிட வேண்டும் என்று அவசரப்படுத்துவது சரிதானா? அந்த அவசரத்தின் பின்னணி என்ன?

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதுதான் யூஜிசி. 1956-ல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய யுஜிசி சட்டம் அதனை ஒரு சட்டபூர்வ அமைப்பாக ஆக்கியது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு நிதி பெறும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வித் திட்டங்களுக்கான செலவு, ஆசிரியர்கள் ஊதியம், மாணவர்களுக்கான ஆய்வு வசதிகள் உட்பட அவற்றின் செயல்பாடுகளுக்காகச் சீரான முறையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கச் செய்வது யூஜிசியின் நோக்கம்.

தேவையில்லாத தலையீடு

அந்தச் செயல்பாடுகளையும் தர நிலைகளையும் மதிப்பீடு செய்வது, குறைகளைக் கண்டறிந்து களையெடுக்க வலியுறுத்துவது, மேம்படுத்த உதவுவது ஆகியவையும் இதன் பணிகளாகும். மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றுக்கான மைய அமைப்புகளும் உள்ளன. தற்போதைய முன்வரைவுச் சட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துக்கட்டிவிட்டு, உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றையும் தனது அதிகாரச் சாட்டையின் கீழ் கொண்டுவருகிற ஆணையம் ஒன்றை ஏற்படுத்த வழிசெய்கிறது.

மத்திய அரசு ஏற்படுத்த விரும்புகிற புதிய ஆணையத்துக்கு, நிதி ஒதுக்கீடு பொறுப்போ, கல்வி நிறுவனங்களை ஆய்வுசெய்கிற கடமையோ கிடையாது. வெறும் நிர்வாக அதிகாரம் மட்டுமே கொண்டதாக ஒரு நிறுவனம் கல்விச் செயல்பாடுகளில் தலையிட்டுக்கொண்டிருக்கும் என்றால், அது எப்படிப்பட்ட முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்பது எவரும் ஊகிக்கத்தக்கதே.

இந்திய அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை, மத்திய அரசின் அதிகாரப் பட்டியல், மாநில அரசின் அதிகாரப் பட்டியல் என வரையறுக்கிறது. ஒரு மாநில எல்லையோடு சுருங்கிவிடாத, நிறுவனங்களை மத்திய அரசு இணைக்கலாம், முறைப்படுத்தலாம், தேவைப்பட்டால் கலைக்கலாம். ஆனால், இதனை வகைப்படுத்திய முன்னோர், தெளிவான கண்ணோட்டத்துடன், மத்திய அரசின் இந்த இணைக்கலாம், முறைப்படுத்தலாம், கலைக்கலாம் என்ற அதிகாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களை உட்படுத்தவில்லை. பல்கலைக்கழகங்களை இது உள்ளடக்கியதல்ல என்றே மத்திய அரசுப் பட்டியலின் இடுகை 44 கூறுகிறது. மாநில அரசுப் பட்டியலின் இடுகை 32, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மாநில அளவிலான நிறுவனங்கள் யாவும் அந்தந்த மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்று அறிவிக்கிறது.

மாநில உரிமைகளை மீறும் செயல்

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் முன்வரைவுச் சட்டம் சொல்வது என்ன? “அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, நாடாளுமன்றத்தின் எந்த ஒரு சட்டத்தின் கீழும், மாநில சட்டமன்றத்தின் எந்த ஒரு சட்டத்தின் கீழும் நிறுவப்பட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், அரசாங்கத்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்துவதாகும்’ என்று கூறுகிறது. எந்தக் கல்வி நிறுவனத்தையும் மூடுவதற்கு ஆணையத்துக்குச் சுயேச்சையான அதிகாரத்தை அளிக்கிற இந்த முன்வரைவுச் சட்டம், அரசமைப்புச் சாசனத்தின் மேற்படி பட்டியல்களை அழிக்கிறது. கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குலைக்கிறது. மாநில உரிமைகளில் அத்துமீறி நுழைகிறது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் கேடு இப்போது இன்னும் அப்பட்டமாகத் தெரிகிறது.

தொடக்கப் பள்ளிக்கான வாய்ப்புகள்கூடச் சீராக அமையாத ஒரு நாட்டில், ஒரே நிர்வாக ஏற்பாட்டில் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது என்பது சமத்துவமான கல்வி வளர்ச்சி என்பதை வெறும் கனவாக மாற்றிவிடும். சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகங்களின் தலைமுறைகள் உயர் கல்வியில் தலைதூக்குவதற்கான வாய்ப்பைப் பறித்துவிடும்.

எதன் அடையாளம் இது?

வெளிப்படைத்தன்மை இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவின் உண்மை நோக்கம்தான் என்ன? சமூக நீதி, சம நீதி என்ற லட்சியங்களைக் கேலிக்குரியதாக்கிவிட்டு, ‘தகுதி மட்டுமே’ என்ற கருத்தாக்கத்தை உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு முன்னுக்கு வைக்கிறது. முற்றிலும் சந்தைத் தேவைகளை மட்டுமே, அதற்கேற்பத் தலைமுறைகளை வார்த்து வெளியே அனுப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கருத்தாக்கம் இது. உலக வர்த்தக அமைப்பு (உட்டோ) இப்படிச் சந்தைத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கிற கல்வி ஏற்பாடுகளைத்தான் தனது உறுப்பு நாடுகளுக்கு வற்புறுத்துகிறது. இந்திய அரசு அதை ஏற்றுக்கொண்டதன் அடையாளம் அல்லவா இது என்று கேட்கிறார்கள் கல்விக் களப் போராளிகள்.

ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பின் பல வடிவங்களில் ஒன்றாக சமீபத்தில் ஒரே நாடு.. ஒரே தேர்தல் என்று கிளப்பிவிடப்பட்டுள்ளது. தற்போது ஓசையின்றி இப்படியொரு ஆணையத்தைப் புகுத்தும் முயற்சி. கல்வி உரிமை, பன்முகப் பண்பாட்டு உரிமை, மாநில உரிமை என்ற போராட்டப் பதாகையின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவைப் பாதுகாப்போம் என்ற முழக்கமும் இணைய வேண்டியிருக்கிறது!

- அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: kumaresanasak@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x