Published : 20 Jun 2018 08:58 AM
Last Updated : 20 Jun 2018 08:58 AM

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: கோரிக்கையின் நியாயம் என்ன?

டெ

ல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று டெல்லி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரிக்கும் முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. டெல்லியில் துணை நிலை ஆளுநர், அரசு நிர்வாகப் பணிகளில் தலையிடுவதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் கூறிவரும் நிலையில், புதுச்சேரியிலும் இதேபோன்ற பிரச்சினை நிலவுவதால், அரசுத் திட்டங்கள் மறுதலிக்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப்படுகின்றன என்று நாராயணசாமி முன்வைக்கும் புகார்கள் பல விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன.

டெல்லியைப் பொறுத்தவரை, காவல் துறை உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் மத்திய அரசின் வசம் இருப்பதால், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது அதை யார் கையாள்வது என்பதில் ஏற்கெனவே குழப்பங்கள் நீடிக்கின்றன. டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ், ஆஆக சட்ட மன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுக் கூட்டங்களில் பங்கேற்பதை ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்துவருகிறார்கள் என்று குற்றம்சாட்டும் கேஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகத்தின் வரவேற்பறையில் தங்கிப் போராட்டம் நடத்திவருகிறார். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாகக் குரல்கள் எழுந்திருக்கும் நிலையில், முழுமையான மாநில அந்தஸ்து கோரும் ஒன்றியப் பிரதேசங்களின் குரல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பெரும்பாலும், பிரிட்டன் அல்லாத பிற நாடுகளின் ஆளுகையின்கீழ் இருந்த பகுதிகளும், பிரத்யேகமான பண்பாட்டு, கலாச்சாரத்தைக் கொண்ட பகுதிகளும்தான் ஒன்றியப் பிரதேசங்களாக இருக்கின்றன. அந்தப் பகுதிகளின் கலாச்சார ஓர்மையைக் காப்பது என்ற நோக்கில், மத்திய அரசின் சிறப்புக் கவனம் இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், முழு நிர்வாக அதிகாரத்தை யும் மத்திய அரசு தனது கையில் வைத்துக்கொண்டிருக்கும்பட்சத்தில் டெல்லியிலும் புதுச்சேரியிலும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட மன்றங்களின் உண்மையான அதிகாரம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

அரசியல் சட்டக் கூறு 2 மற்றும் 3-ன்படி எந்த ஒரு மாநிலத் தைப் பிரிப்பதற்கும், புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதன்படிதான், மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாகின.

ஒன்றியப் பிரதேசமாக இருந்த கோவா - டையூ டாமன் பிரிக்கப்பட்டு, கோவா தனி மாநிலமானதும் இப்படித்தான். அதன் அடிப் படையிலேயே சட்ட மன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் தலை நகரப் பிரதேசமான டெல்லியும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி யும் மாநில அந்தஸ்தைக் கோருகின்றன. ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாக அமைப்பு தொடர்பான மத்திய அரசின் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதையே இந்த விவாதங்கள் வலியுறுத்துகின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x