Last Updated : 15 Jun, 2018 09:46 AM

 

Published : 15 Jun 2018 09:46 AM
Last Updated : 15 Jun 2018 09:46 AM

ட்ரம்ப் – கிம் சந்திப்பு: ஒரு புதிய தொடக்கம்!

மார்க் ட்வெய்ன், “புனைவைக்காட்டிலும் நிஜம் விநோதமானது. ஏனெனில், புனைவு என்பது சாத்தியக்கூறுகளுக்கு நெருக்கமானது. நிஜம் அப்படி அல்ல” என்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில், ஜூன் 12-ல் சிங்கப்பூரில் நடந்த சந்திப்பைவிட சிறப்பான விஷயம் எதுவும் இல்லை. இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களுக்கும் வெற்றிகரமாகப் பங்கெடுத்ததன் பின்னணியில், ‘ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சிகளில்கூட இல்லாத அளவுக்கு சஸ்பென்ஸும் நாடகீய நிகழ்வுகளும் நிறைந்த விறுவிறுப்பான அத்தியாயம் உண்டு.

18 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமும், 13 லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவமும் (இதில் 28,500 பேர் தென் கொரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள்) கொண்ட, உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரான ட்ரம்பும், 40 பில்லியன் டாலருக்கும் குறைவான பொருளாதாரமும், 12 லட்சம் பேர் கொண்ட ராணுவமும், அணுசக்தியும் கொண்ட சர்வாதிகார நாடான வட கொரியாவின் மூன்றாவது தலைமுறைத் தலைவரான, 34 வயதான கிம் ஜோங் உன்னும் வழக்கத்துக்கு மாறான ஒரு ஜோடிதான்.

சோதனையும் சவால்களும்

சில மாதங்களுக்கு முன்னர், அணு சோதனைத் திட்டங்களையும், ஏவுகணைப் பரிசோதனைகளையும் வட கொரியா அதிகரித்துவந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் வார்த்தைப்போர் நடத்திவந்த நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் அணுகுண்டு தாக்குதல் நடத்திக்கொள்ளுமோ என்று அச்சப்படும் சூழல் உருவானது. 2017 செப்டம்பரில் ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்திய வட கொரியா அதை வெப்ப அணுக்கரு குண்டு (ஹைட்ரஜன் குண்டு) என்று அறிவித்தது கூடுதல் அதிர்வுகளை உருவாக்கியது. கிம் நடத்திய பரிசோதனைகளில் குறைந்தபட்சம் மூன்று சோதனைகள் வெற்றியடைந்ததுடன், அவை ஆயுதப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டன. இதன் மூலம், அமெரிக்கா மீதே நேரடித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வட கொரியா முன்னேறிவருவது தெளிவானது.

“இதுவரை உலகம் பார்த்திராத அளவுக்கு உக்கிரமான தாக்குதலை வட கொரியா எதிர்கொள்ள நேரும்” என்று எச்சரித்தார் ட்ரம்ப். இதையடுத்து, குவாம் தீவே (பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமானது) பற்றியெரியும்” என்று பதிலடி கொடுத்தார் கிம். ட்ரம்போ, “ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது” என்று எச்சரித்தார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் பலமுறை கூட்டப்பட்டது. வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் இறுகின. “தன்னையும் தனது ஆட்சியையும் அழித்துக்கொள்ளும் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் ராக்கெட் மனிதர்” என்று கிம்மைப் பற்றி குறிப்பிட்டார் ட்ரம்ப். “மனநிலை பாதிக்கப்பட்ட அமெரிக்கக் கிழத்தை வழிக்குக் கொண்டுவருவேன்” என்று சூளுரைத்தார் கிம்.

கிம் ஆற்றிய புத்தாண்டு உரை ஒரு மாற்றத்தைத் தொடங்கிவைத்தது. அணுசக்தி தடுப்புத் திறனை வட கொரியா அடைந்துவிட்டதாகவும், (பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தவிருந்த நிலையில்) தென் கொரியாவுடனான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் கிம் குறிப்பிட்டார். அதன் பிறகு விஷயங்கள் வேகமாக நடந்தேறின.

மார்ச் மாதம், தென் கொரியாவின் மூத்த அதிகாரிகள் வட கொரியாவுக்குச் சென்றனர். வட கொரியாவுக்கு எதிரான ராணுவரீதியான மிரட்டல்கள் குறைக்கப்பட்டால், ஆட்சிக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் குறித்துப் பேசத் தயாராக இருப்பதாக கிம் குறிப்பிட்டார். ஏப்ரல் 27-ல் பன்முன்ஜோமில் இரண்டு கொரியத் தலைவர்களுக்கும் இடையிலான உச்சி மாநாடு நடக்கவிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், ஏப்ரல் 21-ல், ஏவுகணைப் பரிசோதனைக் கட்டுப்பாட்டை அதிகாரபூர்வமாக அறிவித்தது வட கொரியா. பன்முன்ஜோம் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்தது.

இதுதொடர்பாக, அமெரிக்காவுக்கு முழுமையான தகவல்களைத் தென் கொரிய அதிகாரிகள் அளித்ததைத் தொடர்ந்து, கிம்மைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

பழைய வரலாறு

இதற்கு முன்னரே, வட கொரியாவின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாகப் பேச அமெரிக்கா முயற்சிசெய்தது. அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப்போவதாக வட கொரியா மிரட்டியதைத் தொடர்ந்து, முதன்முதலாக 1994-ல் இரு நாடுகளுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், 2002-ல் வட கொரியாவைத் தீய சக்தி என்று ஜார்ஜ் புஷ் அரசு விமர்சித்ததைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ரத்தானது. அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து வட கொரியா வெளியேறியது. 2004-ல் அணு ஆயுத நீக்கம் தொடர்பாகக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கொண்டுவந்ததால், இந்த முயற்சி சீர்குலைந்தது.

2006-ல் வட கொரியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதைத் தொடர்ந்து சூழல் மாறிவிட்டது. வட கொரியாவின் திறன் கணிசமாக அதிகரித்தது. இது தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் கவலை அளித்தது. தென் கொரியாவில் ஏவுகணைத் தடுப்புப் படைகளை அமெரிக்கா நிறுத்திவைத்திருப்பதால் சீனாவும் கவலையடைந்தது. இந்தச் சூழலில்தான் மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

காத்திருக்கும் சவால்கள்

ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் வட கொரியாவிடம் முழுமையான, மாற்ற முடியாத நடவடிக்கைகளை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. வட கொரியாவோ, நிலையான அரசுக்கு பாதுகாப்பு, பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்கு பெற விரும்புகிறது. சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் விரும்புகிறது. சீனா, நடுநிலை வகிப்பதை நீட்டிக்க விரும்புகிறது. தென் கொரியா பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பும் அதேசமயம், அமெரிக்காவின் படைகள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தொடர வேண்டும் என்றும் நினைக்கிறது. இவற்றுக்கெல்லாம் காலமும், தொடர்ச்சியான பேச்சுவார்த்தையும் தேவை!

சிங்கப்பூரில் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் விரிவான தகவல்கள் இல்லை. ஆனால், அரசியல் உறுதிப்பாடு இருக்கிறது. அணுசக்தி விவகாரத்தை மட்டுமே பேசுவது என்றில்லாமல், 1953 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மாற்றாக, நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுடன், அணு ஆயுத நீக்கத்துக்கு முன் நிபந்தனையாக வட கொரிய அரசுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுவதுதான் அமெரிக்க – வட கொரிய உறவின் புதிய தொடக்கத்தை சாத்தியப்படுத்தும் என்பதை இந்த ஒப்பந்தம் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

உச்சி மாநாடுகளின் முடிவுகள் கலவையானவை. 1972-ல், சீனத் தலைவர் மா சே துங்குடனான முதல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்ஸன் சீனா சென்றது, உலக அரசியல் சக்திகளின் அமைப்பை மாற்றியது. அதன் தாக்கம் இன்றுவரை எதிரொலிக்கிறது. 1986-ல் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சேவை ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் சந்தித்ததையடுத்து, எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

எனினும், நடைமுறை அரசியலே வென்றது. ட்ரம்ப் – கிம் சந்திப்பைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை எப்படி விரிவடையும் என்று கணிப்பது கடினம். ஆனால், இது ஒரு புதிய தொடக்கம்!

தி இந்து ஆங்கிலம்,

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x