Published : 15 Jun 2018 09:52 AM
Last Updated : 15 Jun 2018 09:52 AM

பசுமை வீடு காட்டும் பாதை!

சராசரி வீட்டின் இலக்கணங்களுக்கு வெளியில் நிற்கிறது ‘விஷ்வ ஷ்யாமளம்’

மடிப்பாக்கத்தில் அந்த வீட்டைக் கடப்பவர்கள் மலைத்து நிற்கிறார்கள். மொத்தம் 100 ஜன்னல்களுடன் காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்துவழியும் அந்த வீட்டின் பெயர் ‘விஷ்வ ஷ்யாமளம்’. சூழலியல் ப்ளாட்டினம் தர வரிசை பரிசு பெற்ற அந்தப் பசுமை வீட்டை உருவாக்கியவர் கிருஷ்ண மோகன் ராவ்.

தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் எரிசக்தியை, இயற்கை வளங்களை எப்படி சேமிப்பது, எப்படி மாற்று சக்தியாகப் பயன்படுத்துவது என்று கற்றுத்தரும் பணியை மேற்கொண்டிருக்கிறார் இவர். பெரிய நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சென்று, அங்கு கவனமின்றி வீணடிக்கப்படும் மின்சாரம், எரிசக்தி, நீர், ஏன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியாகும் வெப்பக் காற்றைக்கூட உபயோகிக்க முடியும் என்று யோசனை வழங்குகிறார்.

அரசு மின் இணைப்பு, நீர்க் குழாய் இணைப்பு, நகராட்சியின் கழிவுநீர்க் குழாய் வெளியேற்றும் இணைப்பு என்று எதுவும் இல்லாமல், ஒரு சராசரி வீட்டின் இலக்கணங்களுக்கு வெளியில் நிற்கிறது ‘விஷ்வ ஷ்யாமளம்’. இப்படி ஒரு வீட்டை உருவாக்க அவரை உந்தித்தள்ளியது எது? “இயற்கையை ஒட்டிய வாழ்வுக்கான அடங்காத தாகம்” என்கிறார் கிருஷ்ண மோகன். முற்றிலும் பசுமை வீட்டை நிர்மாணிக்க வேண்டுமென்றால், கட்டிட வரைபடத்திலேயே அதற்காகத் திட்டமிட வேண்டும் என்று சொல்லும் இவர், “வெளிச்சம், நீர் மேலாண்மை, குறைவான மின் சக்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு, குப்பைகளை உரமாக்கும் மறுசுழற்சி முறை என்று எல்லாவற்றையும் நமது வீட்டில் சாத்தியமாக்க முடியும்” என்கிறார்.

GH (2)100

சிறப்புகள் என்னென்ன?

மூன்று தளங்கள் கொண்ட ‘விஷ்வ ஷ்யாமளம்’ வீட்டில், சுவருக்காக அடுக்கப்படும் செங்கற்களின் நடுவே சிமெண்ட் பூச்சுப் பூசாமல் வெற்றிடத்தை உருவாக்கி அங்கு காற்று நிரப்பப்பட்டிருக்கிறது. அதனால், வெப்பம் சுவர் வழியே உள்ளே நுழையும் முன் வெற்றிடத்தில் நிரம்பிவிடுவதால் வீட்டினுள் அதிக வெப்பம் இருப்பதில்லை. அனைத்து இடங்களிலும் இரு ஜன்னல்கள் எதிரெதிரே அமைந்துதிருப்பதுபோலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன்னலை ஒட்டிய ‘சன் ஷேடு’கள் இரண்டு அடி அதிகம் நீளமாக அமைக்கப்பட்டிருப்பதால், வீட்டில் வெளிச்சம் அதிகம், வெப்பம் குறைவு!

மழை நீர் சேமிப்பைக் கொண்டே ஒரு வீடு தன்னிறைவு அடைய முடியும் என்பதைச் சாத்தியமாக்கியுள்ளார். 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி இருந்தாலும் அதில் பாதி அளவு நீரிலேயே இவரது குடும்பத்தினரின் நீர்த் தேவை நிறைவு பெற்றுவிடுகிறது. மழைக்காலத்தில் சேமிக்கப்படும் நீரில் பெருமளவு நிலத்தடி நீராக மாறிவிடுகிறது. ஒரு சராசரி மனிதரின் ஒரு நாளைய நீர்த் தேவை என்பது 135 லிட்டர். ஒரு துளி நீரைக்கூட வீணாக்காமல், அதை மறுசுழற்சிசெய்து தேவைக்கேற்பப் பயன்படுத்தும் வகையில் இந்த வீட்டை வடிவமைத்திருக்கிறார் கிருஷ்ண மோகன். வீட்டில் கழிவுநீராக எதுவும் வெளியேறுவதில்லை. கூழாங்கல், மணல் வழியாக மூன்று முறை சுத்திகரிக்கப்பட்டு அருந்துவதற்கு சுத்தமான, சுவையான நீர் கிடைக்கிறது. இத்தனை அம்சங்கள் கொண்ட வீட்டை ஓராண்டுக்குள் கட்டிமுடித்திருக்கிறார்.

வெள்ளத்தில் தப்பிய வீடு

வீட்டைச் சுற்றிலும் பசுமையாக செடி, கொடிகள் வளர்க்கிறார். தென்னை மட்டை நார்களும் மணலும் கலந்த கலவையில் செடிகள் நடப்பட்டு இருப்பதால், கிடைக்கும் நீரில் ஒரு சொட்டைக்கூட வீணாக்காமல் அவை கடும் கோடையில்கூட ஈரத்தைச் சுமந்து சிரிக்கின்றன. சென்னை வெள்ளத்தின்போது தெருவே நீரில் மிதந்துகொண்டிருக்க, இவரது வீட்டில் ஒரு துளி நீர்கூடத் தேங்காமல் அனைத்தும் நிலத்தடிநீராக சேகரமாகிவிட்டது.

இயற்கை வெளிச்சம் வீட்டுக்குள் பெருமளவு விழுமாறு கட்டமைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலும் பகலில் மின் விளக்குகளோ, குளிர்சாதனப் பெட்டியோ தேவைப்படுவதில்லை. வீட்டின் அனைத்து மின்சாதனங்களும் குறைந்த மின் சக்தியை உறிஞ்சும், உமிழும் உபகரணங்களால் ஆனவை. தரைத்தளத்தில் இருக்கும் இவரது அலுவலகத்திலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்தும் சூரியசக்தி மின்சக்தியில் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், இங்கு மின் இணைப்புக்குத் தேவை ஏற்படவே இல்லை. மீதமாகும் மின்சாரம் ‘இன்வெர்ட்ட’ரில் சேமிக்கப்படுகிறது

எதுவும் வீணில்லை

கிருஷ்ண மோகன் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, தேவையற்ற குப்பை என்று எதுவும் இல்லை. நம்மால் ஒதுக்கப்படும் பொருட்கள் எல்லாம், உண்மையில் சரியான இடத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளாத செல்வம் என்று நம்புகிறார்கள். வீடு கட்டப்பட்டபோது மீதமான மண், கட்டுமான சாதனங்களையும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தியிருக்கிறார். மொட்டைமாடியின் தளம், படிகள் போன்றவை மீதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான். மீதமான மரப் பொருட்களைக் கொண்டு, அழகான அறைகலன்கள் செய்து அசத்தியிருக்கிறார். தேக்கு மரப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அழகும், வலிமையான, நீடித்த உறுதியும் கொண்ட இந்த வீட்டை உருவாக்க, வெளிநாட்டுப் பொருட்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை.

முற்றிலும் ஒரு பசுமை வீட்டை அமைப்பதும், அதற்கேற்றவாறு மற்ற அமைப்புகளை நிர்மாணிப்பதற்கும் ஆரம்ப முதலீடு 18% அதிகம் தேவை. ஆறு மாதங்கள் அதிக காலமும் செலவாகும். ஆனால், இயற்கையை ஒட்டிய பெருவாழ்வை வாழ்வதென்பது ஒரு வரம் போன்றது. அதற்கு இணையான மகிழ்ச்சியும், நிறைவும் வேறெதிலும் இல்லை என்று கிருஷ்ண மோகன், அவரது மனைவி உமா தேவி, மகள் நிவேதிதா மூவரும் பெருமையுடன் சொல்கிறார்கள். இதுபோன்று 100% பசுமை வீடு அமைப்பதென்பது ‘ஃப்ளாட்’ முறைக் கட்டிடங்களில் சாத்தியமா? “ஆரம்பத்திலேயே சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் ஓரளவு தன்னிறைவும், உறுதியும், எந்த சூழலையும் தாங்கி சமாளிக்கக்கூடிய நீடித்த வலிமை கொண்ட வீட்டை நிர்மாணிக்க முடியும்” என்கிறார் கிருஷ்ண மோகன். இயற்கையைக் கொண்டாடும் இதுபோன்ற வீடுகளை உருவாக்குவது என்பது இயற்கையை ஒட்டிய வாழ்வு என்பதுடன் முடிந்துவிடுவதில்லை, நாம் இந்தப் பூமிக்குச் செலுத்தும் நன்றிக்கடன் அது!

லதா அருணாச்சலம், எழுத்தாளர்.

தொடர்புக்கு: lathaarun1989@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x