Published : 08 Jun 2018 09:06 AM
Last Updated : 08 Jun 2018 09:06 AM

ஐஏஎஸ் தேர்வில் அரசு குறுக்கிடலாமா?

ந்தியாவின் குடிமைப் பணித் தேர்வு, உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்று என்று ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் லாண்ட் பிரிச்செட் 2010-ல் கூறியிருந்தார். “இந்திய ஆட்சிப் பணி என்பது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு இணையான கடினமான தேர்வையும் தேர்வுமுறையையும் கடந்து வெற்றிபெற்ற அதிகாரிகள் நிறைந்தது” என்றார் அவர்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) மற்றும் 20 பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதனிலைத் தேர்வு, பிறகு முதன்மைத் தேர்வு. அரசியல் அழுத்தங்களைத் தவிர்க்கும் வகையில், வெளிப்படையான நடைமுறைகள் மூலம் சிறந்த தேர்வாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை யூபிஎஸ்சி சிறப்பாகவே செய்துவருகிறது.

குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் முசெளரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அரசுப் பயிற்சி மையத்தில், 15 வாரங்கள் பயிற்சி பெற்ற பிறகு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், விண்ணப்பங்களில் முன்வைத்துள்ள விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் எந்தெந்த மாநிலங்களில் பணிபுரியலாம் என்றும் என்னென்ன பணிகளை அவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் தீர்மானிக்கப்படும். இதுதான் இதுவரையிலான நடைமுறை. மத்திய அரசு முன்வைத்திருக்கும் பரிந்துரையின்படி, இனி முசெளரி அரசுப் பயிற்சி மையத்தின் மதிப்பெண்களுக்காக - அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த யோசனை பரிசீலனையில்தான் இருக்கிறது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்கிறது அரசு. ஆனால், இது சட்டபூர்வமாகச் சரியானதல்ல என்றும், நிர்வாக ரீதியில் சாத்தியங்கள் இல்லாதது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, அரசியல் சட்டக் கூறுகள் 315 முதல் 323 வரை - மத்திய மற்றும் மாநிலங்களுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றிக் குறிப்பிடுகின்றன. ‘மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பணிகளுக்குத் தேர்வு நடத்துவது என்பது, சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநிலங்களுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் கடமை’ என்று அரசியல் சட்டக்கூறு 320(1) கூறுகிறது. எனவே, குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடத்தும் கடமை முழுக்க முழுக்க யூபிஎஸ்சியைச் சேர்ந்தது. அரசுப் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் மதிப்பெண்ணையும் சேர்த்துதான், எந்த மாநிலத்தில் என்ன பதவி வழங்கப்படும் எனும் நிலை உருவானால், அந்தப் பயிற்சி மையம் யூபிஎஸ்சியின் விரிவுபடுத்தப்பட்ட கிளை என்று அர்த்தமாகும். ஆனால், அரசியல் சட்டப்படி உண்மையில் அப்படி அல்ல. எனவே, அரசின் முயற்சி அரசியல் சட்டக் கூறு 320(1)-ஐ மீறுகிறது.

இரண்டாவதாக, யூபிஎஸ்சியின் தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் அரசியல் சட்டத்தின் அடிப் படையில் பணிபுரிபவர்கள். அரசியல் சட்டக்கூறு 316 அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குகிறது. சட்டக் கூறு 319-ன்படி அவர்கள் இன்னொரு அலுவலகத்தில் பதவி வகிக்க முடியாது. இந்த அரசியல் சட்டப் பாதுகாப்புகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியும். ஆனால், அரசுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் என்பவர், அயல் பணியில் இருக்கும் அரசுப் பயிற்சி ஊழியர் மட்டுமே. அவர் எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் செய்யப்படலாம். மையத்தில் வகுப்பு நடத்து பவர்கள், அயல் பணியில் இருக்கும் அரசுப் பயிற்சி ஊழியர்கள் அல்லது கல்வியாளர்கள். இவர்களில் யாருமே யூபிஎஸ்சி உறுப்பினர்களைப் போல், அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றவர்கள் அல்ல. எனவே, அரசியல் கட்சிகள், மூத்த அதிகாரிகள் இவர்களிடம் அதிகாரம் செலுத்தி, தங்களுக்கு வேண்டிய மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் போட வைப்பது என்பது எளிது.

மூன்றாவது, முசெளரி பயிற்சி மையத்தில் 400 பேருக்கு மேல் பயிற்சி வகுப்பில் சேர்ந்தால், அவர்கள் பிற நகரங்களில் உள்ள மையங்களில் சேர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே முசெளரி அரசுப் பயிற்சி மையத்தில் வகுப்பெடுப்பவர்களின் எண்ணிக்கை 12. அதாவது, பயிற்சி அளிப்பவர்கள் - பெறுபவர்கள் விகிதம் குறைவு. இந் நிலையில், அரசின் புதிய முயற்சி காரணமாக, மையங்களில் பயிற்சி பெறுபவர்களை முறையாக மதிப்பிடுவதற்கான வாய்ப்பு குறைவு. குடிமைப் பணித் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்களின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கும் என்பதால், இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவது என்பது அரசின் புதிய யோசனையால் பாதிப்பைச் சந்திக்கும்.

நான்காவதாக, ஒவ்வொரு ஆண்டும் குடிமைப் பணித் தேர்வுகளில் 600 முதல் 1,000 பேர் வரை தேர்வாகும் நிலையில், இவர்களில், ஐபிஎஸ் அல்லது க்ரூப் ஏ-வுக்குத் தகுதி பெறுபவர்களில் 60 முதல் 70% பேர் முசெளரி அரசுப் பயிற்சி மையத்தில் சேர்வதில்லை. இவர்கள், மீண்டும் குடிமைப் பணி (பிரதான) தேர்வு எழுத தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். பயிற்சி மையங்களுக்குச் சென்றே ஆக வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால், அவர்கள் மீண்டும் தேர்வெழுதும் வாய்ப்பை மறுப்பது என்றாகிவிடும்.

இந்திய குடிமைப் பணியின் இரும்புச் சட்டகம் துருப் பிடித்துவிட்டது என்பதையோ, அது சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையோ யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், குடிமைப் பணிக்கான ஆள் சேர்ப்பு விஷயம்தான் சீர்திருத்தப்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது மத்திய அரசின் புதிய யோசனை. குடிமைப் பணி தொடர்பான உண்மையான பிரச்சினைகள், ஆள் சேர்ப்பு தொடர்பானவை அல்ல. அரசு அமைப்பில் ஒரு அதிகாரி சேர்ந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதில் தான் இருக்கிறது நிஜமான பிரச்சினை. தகுதியைவிடவும், பணிந்துபோவது, அரசியல் தொடர்புகள், குறிப்பிட்ட சமூகம்/சாதி சார்ந்த செல்வாக்கை முதன்மையாகக் கோரும் ஒரு அமைப்பில், பணியில் பிரகாசிக்கக்கூடிய சிறந்த அதிகாரிகூடத் தனது தனித்தன்மையை இழந்துவிடுவார்.

அங்கு முடிவுகள் எடுக்காவிட்டாலோ, செயல்படாமல் இருந்தாலோ யாரும் தண்டிக்கப்படப்போவதில்லை. மாறாக, அதிகமான முடிவுகளை எடுத்து, சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளுக்குத்தான் பிரச்சினையில் சிக்கும் வாய்ப்பு அதிகம். நேர்மையைப் பற்றிப் பேசினாலும், முற்றிலுமாக அழுகிப்போயிருக்கும் இந்த அமைப்பு, அதற்கேற்பத் தங்களை வளைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கோருகிறது - இல்லையென்றால், வெளியேற நிர்ப்பந்திக்கிறது. ஒரு அதிகாரி என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறார் என்பதை வைத்து அல்ல; அவரது மேலதிகாரியின் சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்தே அந்த அதிகாரியின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன. சர்தார் படேல் சொன்னதுபோல், ஒருவர் தனது மனதைத் திறந்து வெளிப்படையாகப் பேசும் சுதந்திரத்தைக் கையாள்கிறார் என்றால், அவருக்குத் தொல்லைகள் உருவாகும் என்று அர்த்தம். நியாயமற்ற வகையில், தண்டனை அடிப்படையிலான பணியிட மாற்றங்கள் கிடைப்பது என்பது வழக்கமாகிவிடும். ஏற்கெனவே, கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆள்சேர்ப்பு முறையைச் சிதைப்பதைக் காட்டிலும், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தான் அரசு செய்ய வேண்டிய விஷயம்!

- கே.அசோக் வர்தன் ஷெட்டி,

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x