Published : 07 Jun 2018 09:33 AM
Last Updated : 07 Jun 2018 09:33 AM

தொகுதிகள் மறு ஒதுக்கீடு: இந்தியா என்ன செய்யப்போகிறது?

ரி விதித்தல், பிரதிநிதித்துவம். இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பான விவாதங்கள்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக ஜனநாயக வளர்ச்சிக்குக் காரணங்களாக இருந்துவருகின்றன. உலகிலேயே மிகவும் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவிலும் சமீபத்திய மாதங்களில் இவ்விரு அம்சங்கள் தொடர்பாகப் புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில் 2020 மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் குடியுரிமையை முக்கியப் பொருளாக்கிக் கணக் கெடுக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள முடிவை, பல்வேறு மாநிலங்களும் நகரங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் உள்ள 435 தொகுதிகளை, மக்கள்தொகையில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப மறு ஒதுக்கீடு செய்கிறது அரசு. இதைப் பின்பற்றியே அமெரிக்க அதிபரைத் தேர்வுசெய்யும் 538 ‘வாக்காளர் தொகுதி’யும் (எலக்டோரல் காலேஜ்) மறு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்தத் தொகுதிதான் சமூக சேவை, சமூக வளர்ச்சி, அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கிறது. குடிமக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவுசெய்தால், குடியுரிமை பெறாமல் வேலை செய்வோர் அதிகம் உள்ள மாநிலங்கள் கடுமையான பாதிப்பு களுக்கு உள்ளாகும்.

இந்தியாவில், 15-வது நிதிக் குழுவின் பரிந்துரை களுக்கு, 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக 2011 மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்வது என்ற மத்திய அரசின் முடிவால், மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் பெரிதாகிவிட்டது. மக்கள்தொகையில் குறைவாக இருப்பதுடன், மத்திய வரி வருவாய் தொகுப்புக்கு அதிகம் பங்களிப்பு செய்வதும் இந்த மாநிலங்கள்தான். 2031 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகள் நாடு முழுவதும் மாற்றியமைக்கப்படவுள்ளன. அப்போது மக்கள்தொகை அதிகமுள்ள உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும்.

இரு ஜனநாயக நாடுகளிலும் அரசுகளின் புதிய முடிவுகளால் கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவின் நிலை, மக்களின் குடியுரிமைத் தன்மை, அடையாளம், மொழி - மதங்களில் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் ஓரங்கட்டப்படக்கூடிய ஆபத்து தொடர்பாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குகளின் உண்மை மதிப்பு?

ஜனநாயகத்தின் இன்னொரு அம்சம், ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்பது. அமெரிக்காவில், 20-வது நூற்றாண்டின் முதல் பாதியில் வேகமாக நாடு நகர்மயமாவது கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் ஊரக வாக்காளர்கள், நகர்ப்புற வாக்காளர்களைவிட அதிக அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தனர். 1960-களுக்குப் பிறகுதான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கமாகிவருகிறது.

இந்தியாவில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை, எல்லோருடைய வாக்குக்கும் சம மதிப்பு என்பது அரசியல் சட்டத்தின் அங்கமாகவே இருந்துவருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி கள் வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 2026-ல் இனி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறும் வரை 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில்தான் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை வரையறுத்தால், சில மாநிலங்களுக்குத் தொகுதி இழப்புகள் ஏற்படும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதன் விளைவு விபரீதமானது. கேரளத்தில் 17 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது ஒரு மக்களவைத் தொகுதி என்றால், ராஜஸ்தானில் 27 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது ஒரு மக்களவைத் தொகுதி!

மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டுதான் மக்களவைத் தொகுதிகள் என்றால், அரசியல் அதிகாரம் இனி உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்குச் சென்றுவிடும். 2031-க்குப் பிறகு கேரளம் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 6-ஐ இழந்துவிடும். தமிழ்நாடு 39 தொகுதிகளில் 11 தொகுதிகளை இழக்கும். அமெரிக்காவில் 2020-க்குப் பிறகு அரசியல் அதிகாரம் நியூயார்க் - மிச்சிகன் மாநிலங்களிடமிருந்து டெக்சாஸ் - வாஷிங்டன் மாநிலங்களுக்குச் சென்றுவிடும்.

பதற்றத்தில் மாநிலங்கள்

மாநிலங்களுக்கு இடையே வரி வருவாய் வசூலிலும் சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடுவதிலும் கடும் போட்டி தொடங்கியிருக்கிறது. சந்தைப் பொருளாதாரம் இவற்றுக்குக் கடும் சவாலாக இருக்கிறது. 2015 முதல் இந்திய மாநிலங்களை, தொழில்தொடங்க செய்துதரும் வசதிகளின் அடிப்படையில் பட்டியலிடுகின்றனர். இதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தனது இரண்டாவது தலைமையகத்தை எந்த மாநிலத்தில் திறப்பது என்பதற்குப் போட்டியையே ஏற்படுத்திவிட்டது. தொழில் முதலீட்டை ஈர்க்க சலுகை அளிக்கும் மாநிலங்கள், தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பொருளாதாரத்தில் வலுவற்ற மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும்போது பதற்றமடைகின்றன.

இந்நிலையில், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இப்போது நிலவும் ‘அதி தீவிர தேசியத்துவம்’ பதற்றத்தைத்தான் அதிகப்படுத்துகிறது. நாட்டின் பூர்வகுடிகள் யார், அரசின் வளங்களைப் பெறுவதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்பதெல்லாம் இப்போது தீவிர மாக விவாதிக்கப்படுகின்றன. இந்த விவாதங்கள்தான் 2014-ல் இந்தியாவிலும் 2016-ல் அமெரிக்காவிலும் தேர்தலில் எதிரொலித்தது. இரு நாடுகளிலும் மத்திய அரசு கள் தொடங்கிய பல திட்டங்கள், பேரினவாத உரிமைகளை வலியுறுத்துவதைப் போலவே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவம், வரி விதிப்பது தொடர்பான புதிய விவாதங்கள் பழைய புண்களைக் கீறிப் பார்க்கவே உதவுகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய, அனை வருக்கும் பிரதிநிதித்துவம் தருகிற, எல்லாவித சிறுபான்மை மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிற தேசிய சமூகத்தை உருவாக்குவதுதான் இரு நாடுகளுக்கும் முன்னால் இருக்கும் சவால்.

தமிழில்: சாரி,

‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x