Last Updated : 11 Jun, 2018 09:26 AM

 

Published : 11 Jun 2018 09:26 AM
Last Updated : 11 Jun 2018 09:26 AM

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரே சாமி!

ந்த ஆட்சி ஒரு மாதம்கூட நீடிக்காது என்ற கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு, ஸ்திரமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் பழனிசாமி. தினகரனின் ஆட்சிக் கவிழ்ப்பு மிரட்டல், ஓ.பன்னீர்செல்வத்தின் ‘தர்மயுத்தம் 1’ - ‘ஈகோ யுத்தம் 2’, திமுகவின் அணி திரட்டல் எதுவும் தன் நாற்காலியை அசைக்காமல் பார்த்துக்கொள்கிறார் பழனிசாமி. இன்னொரு ஜெயலலிதாவாக அவர் முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி போகிற ஊர்களில் எல்லாம் பெரிய போலீஸ் படை குவிகிறது. ஏன் இவ்வளவு போலீஸ் என்று கேட்டால், “ஜெயலலிதா வந்தால் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வீர்களோ, அது எனக்கும் அப்படியே தொடர வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு” என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். ஜெயலலிதாவுக்கு இருந்த அச்சுறுத்தல் இவருக்கும் இருக்கிறதா, அவரைப் போலவே மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டுமா என்ற கேள்வி களுக்கெல்லாம் பதில் அளிக்க யாரும் இல்லை.

பன்னீர்செல்வம் செய்த பெருந்தவறு

அவர் பங்கேற்ற ஆரம்ப கால அரசு விழாக்களுக்கும், இன்றைய அரசு விழாக்களுக்குமே ஏராளமான வித்தியாசங்கள். சிவகாசியில் கடந்த அக்டோபரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பழனிசாமி வந்தபோது, அவரோடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கார் மட்டுமே வந்தது. மற்றவை எல்லாம் பாதுகாப்பு வாகனங்களே. பின்னால் வந்த ஓபிஎஸ் காருடன் 100-க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்களின் வண்டிகள் அணிவகுத்தன. இப்போது நிலைமை தலைகீழ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் ‘தனிப் பெரும் தலைவர்’ ஆக உருவெடுத்த பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் இணைகையில் செய்த தவறுகளே பழனிசாமியின் பலமாகிவிட்டன என்கிறார்கள் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். “கட்சி எனக்கு, ஆட்சி உனக்கு என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்திருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆட்சியில் துணை முதல்வர் பதவியை எடுத்துக்கொண்டு, கட்சி யில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனி சாமிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். அப்படியே அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தாலும்கூட நியமனங்கள், அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் தனக்கே என்பதையாவது அவர் உறுதிப் படுத்தியிருக்கலாம். அங்கேயும் கோட்டைவிட்டுவிட்டார். ஆக, ஆட்சியிலும் கட்சியிலும் பழனிசாமி கை ஓங்கிவிட்டது” என்கிறார்கள்.

சர்வ அதிகாரம் படைத்த நபர்

அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பழனி சாமி ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். கட்சியிலும் அதேநிலை. “தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சிப் பதவியோ, வேறு அரசு சம்பந்தப்பட்ட பதவி களையோ பெற்றுத்தர முடியாமல் போனதால், பன்னீர்செல்வம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் இப்போது எடப்பாடிப் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்” என்கிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

திறப்பு விழாக்களுக்கான ரிமோட் பட்டனைக்கூட இருவரும் சேர்ந்தே அழுத்திய நிலை மாறி, இப்போது பன்னீர்செல்வம் இல்லாமலேயே அரசு விழாக்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. அதிமுகவில் சர்வ அதிகாரம் படைத்த நபராக பழனிசாமி பரிணமித்துவிட்டார். தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவி வாங்குவதற்காக, உள்ளிருந்தே யுத்தம் நடத்திப்பார்த்தார் பன்னீர்செல்வம். கடைசியில் ரவீந்திரநாத்துக்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார் பழனிசாமி.

கொங்கு செல்வாக்கு

தமிழ்நாட்டில் பெரும் சாதியைச் சேர்ந்தவர் ஒருவர் முதல்வராவதும், கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் காமராஜர் காலத்துக்குப் பின் இப்போது நடக்கிறது. அதனால், கொங்கு பிராந்தியத் தில் தன் செல்வாக்கை உயர்த்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “ஒரே ஆண்டில் பல திட்டங்களை இங்கே கொண்டுவந்திருக்கிறார் முதல்வர். சென்னை - சேலம் ஆறுவழிச் சாலைத் திட்டம், கோவை மாநகராட்சிக்கு 100 கோடி நிதி என்று வேலைகள் ஜரூராக நடக்கின்றன. கொங்கு மண்டல நிர்வாகிகளும் முழுக்க முதல்வர் பக்கம் இருக் கிறார்கள்” என்கிறார்கள். மறுபக்கம் பன்னீர்செல்வமோ அவருடைய சொந்த பிராந்தியத்தில் இப்படி வேலைகள் எதுவும் செய்வதாகவும் தெரியவில்லை. அவர் பகுதி கட்சி நிர்வாகிகளையும் அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

18 எம்எல்ஏ வழக்கு

இப்போதைக்கு பழனிசாமி தலைக்கு மேல் தொங்கும் ஒரே கத்தி என்றால், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மட்டுமே. மத்திய அரசின் தயவால் தீர்ப்பைத் தள்ளிப்போட முடியுமே தவிர, தடுக்க முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறார். தீர்ப்பு பாதகமாக வந்தாலும்கூட, ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க திவாகரனைத் தயார்படுத்திவிட்டார் என்ற கூற்றை மறுப்பதற்கில்லை. ஆனால், பழனிசாமி அதிமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். “அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் முத்தையா, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் எல்லாம் எங்கள் அணிக்கு வந்து ஒரு வருடமாகிறது. இது வரையில் அந்தப் பதவிக்கு வேறு யாரையும் ஏன் பழனிசாமியால் நியமிக்க முடியவில்லை. நியமித்தால், அந்த கோஷ்டி மோதல் கட்சியோடு ஆட்சியை யும் உலுக்கிவிடும் என்று பயப்படுகிறார். இந்த ஆட்சி ஓடுவதற்கு ஒரே காரணம், பாஜகவின் ஆதரவும், திட்டப் பணிகளில் கிடைக்கிற கமிஷன் முறையாகப் பங்கிடப்படுவதும்தான். ஆட்சி போனால் கட்சி முழுக்க எங்கள் பக்கம் நகர்ந்துவிடும்” என்கிறார்கள்.

ஜெயலலிதாவோடு ஒப்பிடுகையில், பழனிசாமி எளிதில் அணுகும் முதல்வராக இருக்கிறார் என்பது அமைச்சர்களின் கருத்து. ஆனால், அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்கள் “இப்போதே அவர் ஜெயலலிதா மாதிரி நடந்துகொள்கிறார். ஜெயலலிதாவுக்குக் கிடைத்த சக்தி மக்களிடமிருந்து கிடைத்தது. இவருக்கு அப்படியா? ஆனால், இப்போதைக்கு வேறு வழியில்லை” என்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி முதலாண்டில் ஒரு விஷயத்தை நிகழ்த்திவிட்டார் பழனிசாமி. பன்னீர்செல்வத்தைக் காலிசெய்துவிட்டார். கட்சி - ஆட்சி இரண்டிலுமே அவர் கை நாளுக்கு நாள் ஓங்குகிறது என்பதே உண்மை!

கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x