Published : 29 Jun 2018 09:02 AM
Last Updated : 29 Jun 2018 09:02 AM

குறைந்த கட்டணம்... உலகத் தர சேவை கிடைத்தால் ஆயிரம் எய்ம்ஸ் வந்தாலும் வரவேற்போம்: வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் உறுதி

துரையில் எய்ம்ஸ் மருத்துவனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம், மதுரையில் உள்ள பல பெரிய மருத்துவமனைகள் தங்களுக்கு தொழில்ரீதியாக பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளன. இதற்கு நேர்மாறாக, எய்ம்ஸ் என்ற பேச்சு வந்ததுமுதலே, அது மதுரைக்குத்தான் வரவேண்டும் என்றும், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் மதுரையில் முதல்முறையாக தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி நடத்திவரும் வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம். அவருடனான நேர்காணல் இது.

மதுரையில் தொடங்கப்பட்ட தங்களுடைய முதல் தனியார் மருத்துவக் கல்லூரி, வெற்றிகரமாக இயங்கு கிறதா?

லாபத்தை இன்னும் எட்டவில்லை. லாபம் மட்டுமே குறிக்கோளாக இருந் தால் சென்னையில்தான் தொடங்கியிருப்பேன். நான் பிறந்த மண், இப்பகுதி சாதாரண மக்களுக்கு முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையில் தொடங்கினேன்.

‘நீட்’ தேர்வு வந்தது சரிதானா?

இனி போட்டி இல்லாமல் எதுவும் நடக்காது. ஏற்கெனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ரயில்வே என எல்லாவற்றுக்குமே போட்டித் தேர்வு உள்ளது. தற்போது மருத்துவத்துக்கு ‘நீட்’ வந்துள்ளது. மாணவர்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். ‘நீட்’ மட்டுமல்ல; வேறு பல போட்டித் தேர்வுகளும் வந்துதான் தீரும். இது காலத்தின் கட்டாயம்.

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் திருப்திகரமாக அமையவில்லையே?

‘நீட்’ பற்றி பூதாகரமாகச் சொல்லி, அது நிச்சயமாக வராது என எதிர்மறையாகவும் சொல்லிவிட்டனர். இதை நம்பிய மாணவர்கள் இதில் அக்கறை செலுத்தவில்லை. இதனால்தான் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் குறைந்தது. பிஹார், மத்தியபிரதேசத்தைவிட தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். ‘நீ’ட்’ உறுதி என்றாகிவிட்டதால் இனி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

‘நீட்’ தோல்வியால் தற்கொலை நடக்கிறதே?

எதிலுமே நல்லது, கெட்டது இருக்கத்தான் செய்யும். கெட்டதை சந்திப்போர் மாற்று தீர்வு கண்டு, போராடித்தான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். தொழில் நஷ்டத்தால் கூட சிலர் தற்கொலை செய்துகொள்ளக் கூடும். இதற்காக புதிய தொழிலே தொடங்கக்கூடாது என்று சொல்ல முடியுமா? எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது.

தொழில்ரீதியாக போட்டியாள ரான எய்ம்ஸை வரவேற்பது ஏன்?

எய்ம்ஸ் போல் நிறைய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மதுரைக்கு வரவேண்டும். இதனால் தொழிலில் போட்டி ஏற்பட்டு, தரத்தை உயர்த்துவோம். கட்டணத்தை குறைப்போம். இந்தப் பலன்கள் நேரடியாக பாமர மக்களுக்குப் போய் சேரும். அது எய்ம்ஸ் வடிவில் வருகிறது. இன்னும் ஆயிரம் எய்ம்ஸ் வந்தாலும் வரவேற்போம். அப்போதும், எங்களுக்கு நிச்சயமாக எந்த பாதிப்பும் வராது. அந்த அளவுக்கு தரத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எய்ம்ஸால் வேறு என்ன நன்மை ஏற்படும்?

மதுரை மருத்துவ நகராக வளரும். அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர்.

இனி மற்ற மருத்துவமனை களுக் கும் சுற்றுலாப் பயணிகளாக வந்து மருத்துவம் பார்த்துத் திரும்புவர். மருத்துவ உப தொழில்கள் நிறைய வரும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

உங்கள் காலத்து கல்விமுறையுடன் தற்போதைய கல்விமுறையை ஒப்பீடு செய்யுங்களேன்?

அப்போது நுண்ணறிவு (I.q) குறைவு. அணுகுமுறை (attitude) மிக அதிகம். இப்போது நுண்ணறிவு அதிகம். அணுகுமுறை இல்லை. அன்றைக்கு எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் தங்களின் வாழ்க்கை அனு பவங்களை அடிப்படையாக வைத்து கற்றுத் தந்தனர்.

தோல்வி என்ற பயம் இருந்ததால் படித்தோம். ஆசிரியரை மதித்தோம். தற்போது, கிராமக் கல்விமுறை நன்றாக இல்லை. நிறைய படித்துவிட்டுத்தான் ஆசிரியர்கள் வகுப்புக்குள்ளே செல்ல வேண்டும். இன்றைய ஆசிரியர்களுக்கு நிறைய பயிற்சிகள் தேவை. அதை வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை எப்படி சாத்தியம் ஆகிறது?

வேலம்மாள் மருத்துவமனையை இரண்டாகப் பிரித்துவிட்டோம். ஒன்று இயலாதோருக்கு. பிரசவம் முதல் படுக்கை, உணவு, ஆலோசனை கட்டணம் எனப் பல மருத்துவ சேவைகள் இங்கு இலவசம். மற்றொன்று கட்டண சிகிச்சைப் பிரிவு. இருப்பவர்களிடம் இருந்து வாங்கி, இல்லாதோருக்கு செய்கிறோம். மேலும், பிரபலமான மருத்துவமனைகளை விட 40 சதவீதம்வரை கட்டணம் குறைத்து வாங்குகி றோம்.

கல்விமுறையில் என்ன மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்கள்?

அடிப்படைக் கல்வியே மாற வேண்டும். மதிப்பெண், தேர்ச்சிக்காக மட்டுமே கல்வி என்கிற நிலைமை இருக் கக் கூடாது.

வாழ்க்கைக்கு உதவும் வகையில் கல்வி இருக்க வேண்டும். தொழில் பொருளாதாரம், சமுதாய பங்களிப்பு, குறிக்கோள், உடல் ஆரோக்கியம், ஓய்வு, உறவுகள் என இந்த ஏழும் சேர்ந்ததுதான் முழு மனிதன். இதற்கு முழுமையாக பயன்படும் வகையில் இருப்பதுதான் முழுமையான கல்வி.

‘நீட்’ சேர்க்கையால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கப் பட்டுள்ளதா?

‘நீட்’ வந்ததற்கு பின் எங்களைப் போல் கல்லூரிகளுக்கு பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மைதான். மருத்துவ மாணவரின் கட்டணமாக, பல்கலைக்கழகத்துக்கு ரூ.23 லட்சம், கல்லூரிக்கு ரூ.4.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.12.50 லட்சம். என்ஆர்ஐ சீட்டுக்கு ரூ.23 லட்சம் என கட்டணம். அனைத்து கட்டணத்தையும் சேர்த்தாலும் ஆண்டு வருமானம் ரூ.14 கோடிதான் கிடைக்கும்.

அதேநேரம், பல்கலைக்கழகத்துக்கு 150 இடங்களில் ரூ.34 கோடிவரை கிடைக்கும். பல்கலைக்கழகத்தில் என்ஆர்ஐ சீட்டுகள் வரவில்லையெனில் அவர்களே நிரப்பிக்கொள்ளலாம் என்ற சலுகை உள்ளது. தனியார் கல்லூரிக்கு இந்தச் சலுகை யும் இல்லை. மருத்துவமனையை நன்றாகத் தரம் உயர்த்தி, இதன் வருவாயில் இருந்துதான் கல்லூரியை நடத்துகிறோம். எனது அனுபவத்தின்படி, எதிரிக்குக் கூட மருத்துவக் கல்லூரி தொடங்கி நடத்தும்படி அறிவுரை கூறவே மாட்டேன். இந்தத் தொழிலில் அவ்வளவு கஷ்டம்.

ஒவ்வொரு பெரிய திட்டங்களுக் கும் தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கி றதே?

ஒன்றை இழந்தால்தான், மற்றொன் றைப் பெற முடியும். விவசாய மின் இணைப்புக்கு மின் கம்பம் நட வேண்டுமானாலும் 10 சென்ட் நிலத்தை இழக்க வேண்டியிருக்கும். மின் மோட் டார் இயங்க வேண்டுமானால், மின் கம்பங்களை நட்டுத்தானே வரவேண்டும். சாலை வேண்டுமென்றால், சில இடங்களில் மரத்தை வெட்டித்தான் தீர வேண்டும். வெட்டும் ஒரு மரத்துக்கு நூறு மரங்கள் நடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் முன் னேற கட்டமைப்பு வசதி முக்கியம்.

பள்ளிகளைப் போலவே மருத்துவ மாணவர்களிடத்திலும் கட்டுப்பாடு விதிக்கிறீர்களே, இது சாத்தியமா?

வேலம்மாள் மருத்துவர்கள் படிப்பு, அறிவு, உடைகளில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிறோம். முகச் சவரம், உடை, தலைமுடி என ஒவ்வொன்றிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறோம். எங்களின் எஜமானர் நோயாளிகள்தான். அவர்களிடம் மருத்துவர் குறித்து உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும். இதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள் என அறிவுரைகளை வழங்குகிறோம். இதற்கு நல்ல பலன் இருக்கத்தான் செய்கிறது.

உங்களின் எண்ணப்படி, உங்கள் கல்வி நிறுவனங்களை கொண்டுவர முடிகிறதா?

எங்களிடம் 1.20 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். நாங்கள் நினைத்தபடி செய்ய முடிந்தால் எல்லாமே சாத்தியமாகும். ஆனால் அரசு விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டியுள்ளது. விடுமுறை விட வேண்டும், யாரையும் ஃபெயிலாக்கக் கூடாது, தவறுக்காக கண்டிக்கக்கூடாது, புகார் வந்தால் விசாரிக்காமலேயே ஆசிரியர், நிர்வா கம் மீது நடவடிக்கை என வந்துவிட்டது.

இந்த வட்டத்துக்குள் இருந்துதான் செயல்பட வேண்டும். இவ்வளவை யும் மீறித்தான் நாங்கள் சாதிக்கிறோம். அதனையே எங்கள் வெற்றியாகவும் கருதுகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x