சென்னையின் இலக்கியத் திருத்தலங்கள்
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை சென்னைப் புத்தகக் காட்சி மட்டும்தான் சென்னையின் இலக்கியத் திருத்தலமாக இருந்தது. புத்தகக் கடையைப் பொறுத்தவரை தி.நகரில் நர்மதா பதிப்பகத்தால் தொடங்கப்பட்ட நியூ புக் லேண்ட்ஸ்தான் தீவிர இலக்கியப் புத்தகங்களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம். பரிசல் செந்தில்நாதன் புத்தகங்களை சைக்கிள் ஓட்டமாக விற்றுக்கொண்டிருந்தார். ஆனால், இன்றைக்கு சென்னையில் இலக்கியங்களுக்கான திருத்தலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியிருக்கிறது. தேவநேயப் பாவணர் நூலகக் கட்டிடத்திலும் புக் பாய்ண்ட்டிலும்தான் பெரும்பாலும் கூட்டங்கள் நடைபெறும். இன்றைக்கு அதுவும் விரிவடைந்துள்ளது.
புத்தகக் காட்சி நடைபெறும் ஜனவரி மாதம் தவிர்த்து, மற்ற மாதங்களில் இலக்கியச் சந்திப்பு என்பது மிக அரிதான விஷயமாகத்தான் இருந்தது. தொடர் இலக்கியச் சந்திப்புகளுக்கான வெற்றிடம் இருந்துவந்தது. சமீபத்தில் அதிகரித்துள்ள இலக்கிய வாசிப்பு, அதற்கான மையங்கள் உருவாக வேண்டிய தேவையை உணர்த்தியது. இதற்கான தொடக்கப்புள்ளி டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனிடம் இருந்து வந்தது. இலக்கிய வாசகரான இவர் 2009இல் இந்தக் கடையைத் தொடங்கினார். இன்றைக்கு இலக்கியவாதிகள், சினிமா கலைஞர்கள் தினந்தோறும் கூடும் திருத்தலமாக டிஸ்கவரி புக் பேலஸ் விளங்குகிறது. கே.கே.நகர் முனுசாமி சாலையின் முன்பகுதியில் உள்ள டிஸ்கவரி புத்தகக் கடை வளாகத்தில் தேநீரகம், இளைப்பாறுவதற்கான வசதி, வெளி அரங்கம், உள் அரங்கங்கள் என முழுமையான இலக்கிய மையமாக உள்ளது. ஆகுதி போன்ற இலக்கிய அமைப்புகள் இங்கு வாரந்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்திவருகின்றன.
இணையப் புத்தக விற்பனையில் ஈடுபட்டுவரும் தடாகம் பதிப்பகத்தினர் பனுவல் என்னும் பெயரில் திருவான்மியூரில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினர். இக்கடை கணினித் துறையில் பணியாற்றிவரும் இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ளது. பனுவல் என்னும் பெயரில் இணையப் புத்தக விற்பனையைச் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததன் தொடர்ச்சியாக, அதே பெயரில் இந்தப் புத்தகக் கடை தொடங்கப்பட்டது. வாசக சந்திப்பிற்கான இடம் வேண்டும் என முன்திட்டத்துடனே தனி அரங்குடன் இந்தக் கடை தொடங்கப்பட்டது.
வேளச்சேரியில் யாவரும் பதிப்பகம், பி ஃபார் புக்ஸ் என்கிற பெயரில் ஒரு கடையைத் தொடங்கியது. இந்தக் கடை வேளச்சேரி பகுதி வாசகர்களுக்கான மையமாக இருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பகம், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு எதிரில் விற்பனை மையத்தைத் தொடங்கியது. இங்கும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு இதுவும் இலக்கிய மையமாக ஆகியுள்ளது.
இவை அல்லாமல், வளசரவாக்கத்தில் உள்ள கூகை திரைப்பட இயக்க மையமும் ஒரு கூடுகைக்கான இடமாக உள்ளது. திரைப்படங்கள் குறித்த விமர்சனம், புத்தக விமர்சனம், நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் இங்கே தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றம் இலக்கியக் கூடுகைக்கான முக்கியமான இடமாக உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், அகரமுதல்வன், நரன், லஷ்மி சரவணக்குமார் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இங்குதான் பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு எதிரில் உள்ள இக்சா மையமும் இலக்கியக் கூட்டங்களுக்கான இடமாக இருக்கிறது. தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தின் அரும்பு அரங்கும் கோடம்பாக்கம் பதிப்புக் குழுமப் படைப்பு அரங்கும் இந்த வகையில் குறிப்பிடத்தகுந்தவை. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கு, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் அரங்கு ஆகியவற்றில் இப்போது கூட்டங்கள் நடைபெறுகின்றன. நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி நூலகத்தில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி, அதையும் ஓர் இலக்கிய மையமாக சால்ட் பதிப்பகம் ஆக்கிவிட்டது.
அறிவியலின் வளர்ச்சியால் மனிதத் தொடர்பு என்பதே அருகிப் போய்விட்டது. சந்திப்புகள், உரையாடல்கள் என அனைத்தும் நவீன அறிவியல் கருவிகளின் துணைகொண்டு நடைபெறுகின்றன. இச்சூழலில், முப்பது பேர் கூடிச் சந்திப்பதே ஓர் அரிய நிகழ்வுதான். ஒரு சுதந்திரமான சமூகத்திற்குக் கலந்துரையாடலும் வாசிப்பும் அவசியம். சென்னையின் புதிய திருத்தலங்கள் இதைச் சாத்தியப்படுத்தி வருகின்றன எனலாம்.
