Published : 29 May 2018 07:18 AM
Last Updated : 29 May 2018 07:18 AM

6-ம் வகுப்பு: படக் கதைகள் பாடக் கதைகளாக...

றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் மூன்று புத்தகங்கள். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களை இணைத்து ஒரு தொகுதி, கணிதத்துக்கு மட்டும் தனித் தொகுதி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை இணைத்து ஒரு தொகுதி என முதல் பருவத்துக்கான மூன்று புத்தகங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

ஆக்கபூர்வமான அம்சங்கள்

. தமிழ்ப் பாடத்தின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து, அதன் பின்பு செய்யுள்கள், கடைசியில் உரைநடை என்ற பழைய முறை மாறியிருக்கிறது. கடவுள் வாழ்த்தின் இடத்தில் மொழிவாழ்த்து இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேன், இயற்கை, அறிவியல் தொழில்நுட்பம் என்று பாடங்கள் பகுக்கப்பட்டுள்ளன.

.பாட அறிமுகமும் கற்றல் நோக்கமும் ‘நுழையும் முன்’ என்ற தலைப்பிலும் செயல்பாட்டுப் பயிற்சிகள் ‘கற்பவை கற்றபின்’ என்ற தலைப்பிலும் அளிக்கப்பட்டுள்ளன. பாடப் பகுப்பு, உட்பிரிவு ஒவ்வொன்றுக்கும் தலைப்புகள் இடுவதிலும் தனிக் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

.செய்யுள், உரைநடைப் பகுதிகளைப் போல, இலக்கணப் பகுதிகளையும் குழந்தைகள் ஆர்வமாகப் படிக்கும் வகையில் யானை, ரயில் போன்ற உதாரணப் படங்களைச் சேர்த்திருப்பது நல்ல முயற்சி.

.ஆங்கிலப் பாடத்தில் கடல் ஆமைகள் பற்றிய பாடத்தில் இருபக்க வண்ணப் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருப்பது வித்தியாசமான முயற்சி.

.ஆங்கிலப் பாடத்தில் இடம்பெற்றுள்ள மரங்களைப் பற்றிய பகுதி, சுற்றுச்சூழல் கல்வியாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாடம் ஒன்று, பயன் இரண்டு! கணக்குப் பாடங்களை ஆசிரியர்கள், வழிகாட்டுநூல்களின் துணையின்றி மாணவர்களே கற்றுக்கொள்ளும் வகையில் புத்தகத்தின் இறுதியில் தீர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

.அறிவியல் பாட நூல்களில் பாட விளக்கங்களுக்கான படங்கள் ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் அளிக்கப்பட்டிருப்பது சிறப்பு. விசையும் இயக்கமும் பாடத்தில் காமிக்ஸ் கதை வடிவமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

.அறிவியல் பாடங்களுக்கான செயல்பாட்டுப் பயிற்சி வினாக்கள், கற்றலுக்கும் நடைமுறைப் பயன்பாட்டுக்கும் உள்ள தொடர்பினைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் இணைய வழிச் செயல்பாடு இணைக்கப்பட்டுள்ளது. ‘க்யூ ஆர்’(QR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான இணையப் பக்கங்களைப் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

.வரலாறு, புவியியல், குடிமையியல் பாடங்கள் இணைந்த சமூக அறிவியலில், நேரடி தகவல் தொகுப்பாக இல்லாமல் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திப் பாடங்களை வடிவமைத்திருக்கிறார்கள். வரலாற்றுப் பாடம், ஆறாம் வகுப்பு மாணவியான தமிழினி தனது அம்மாவோடு வீட்டிலும், பாட்டியுடன் அறிவியல் மையத்திலும், ஆசிரியர் மற்றும் சக மாணவர்களோடு வகுப்பறையிலும் உரையாடும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

.நில வரைபடங்கள் வெறும் கோடுகளாக மட்டுமின்றி விளக்கப்படங்களாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

.வரலாற்றுப் பாடத்தில் வரும் தமிழினியைப் போல, புவியியல் பாடத்தில் இனியாவும் யாழினியும் ஒரு பாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார்கள்.

.நில அமைப்பு, வாழ்வியல் முறை, சமயம், மொழி, பண்பாடு என்று இந்தியாவின் பன்முகத் தன்மையினை அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது குடிமையியலின் முதல் பாடம்.

.பாடங்களோடு தொடர்புள்ள முக்கியத் தகவல்களை உங்களுக்குத் தெரியுமா என்ற தலைப்பில் பக்கம்தோறும் பெட்டிச் செய்திகளாகக் கொடுக்கப்பட்டிருப்பது பாட நூல் வாசிப்பை பத்திரிகை படிப்பது போன்ற சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றியிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்...

. ‘கால்ப்பந்து’, ‘பார்போமா’ (பக்.35,58) என்பன போன்ற எழுத்துப் பிழைகள் அறிவியல் பாடங்களில் ஆங்காங்கே தென்படுகின்றன. மொழிப் பாடத்துக்கு எடுத்துக்கொள்ளும் அதே கவனத்தை மற்ற பாடங்களிலும் பின்பற்ற வேண்டும்.

.மொழிப் பாடங்கள், அறிவியல் பாடங்கள் என அனைத்திலும் ஒரே முகவுரையே இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடநூலுக்கும் அதன் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தும் வகையில் தனித்தனி முகவுரைகளை வெளியிட்டிருக்கலாம்.

ஆரவாரம் அற்ற

பண்பாட்டுப் புரட்சி

தமிழ்ப் பாடத்தில், ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘கிழவனும் கடலும்’ நாவலின் கதைச் சுருக்கம் படக்கதையாக இடம்பெற்றுள்ளது. நவீன இலக்கியங்களைக் குழந்தைகளுக்கேற்ற வகையில் அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

உணவுப்பொருட்களைப் பற்றிய ஆங்கிலப் பாடத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பக்க படக்கதையில் அம்மா பரிமாறிக்கொண்டிருக்கையில் அப்பா சமைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமூக விழிப்புணர்வையும் குடும்ப உறவுகளுக்கிடையே இருக்கவேண்டிய இணக்கத்தைப் பற்றியும் குழந்தைகளிடம் சொல்லிக்கொடுக்கும் இதுபோன்ற முயற்சிகள் ஆரவாரம் அற்ற பண்பாட்டுப் புரட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x