Published : 01 May 2018 10:01 am

Updated : 01 May 2018 10:49 am

 

Published : 01 May 2018 10:01 AM
Last Updated : 01 May 2018 10:49 AM

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

21

ரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும். இறுதியாக, அது பீத்தோவனின் சிம்பனியைப் போல சக்தி கொண்டிருக்க வேண்டும்: அதாவது பெரும் மக்கள் திரள் அனுபவித்துக்கொண்டிருக்கும் தேவையில்லாத துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எதிர்காலம் ஒன்றின் முகவர்களாக மாற அது நம்மைத் தூண்ட வேண்டும்; தான் கொண்டிருக்கும் அசலான விடுதலைக்கான சாத்தியத்தை மனிதகுலம் உணர்வதற்கான உந்துதலை அது தர வேண்டும்.

46 லிவர்பூல் தெரு, லண்டன் என்ற முகவரியில் 1848 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் அளவுக்கு வேறு எந்த அறிக்கையும் மேற்குறிப்பிட்டவற்றை ஒருங்கே இதுவரை சாதித்ததில்லை. இரண்டு இளம் ஜெர்மானியர்கள் சேர்ந்து எழுதிய அறிக்கை அது. ஒருவர் கார்ல் மார்க்ஸ், 29 வயது தத்துவவாதி. இன்னொருவர் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸ், வயது 28, மான்செஸ்டர் ஆலைக்கு வாரிசுதாரர்.

எழுத்து வன்மை

அரசியல் சித்தாந்தப் படைப்பு என்ற வகையில் இந்த அறிக்கைக்கு நிகராக வேறெதையும் சொல்ல முடியாது. இதன் பிரசித்திபெற்ற தொடக்க வரிகளுக்கு ஷேக்ஸ்பியரின் எழுத்துவன்மை உண்டு. (ஐரோப்பாவை ஒரு பேய் பீடித்திருக்கிறது, கம்யூனிஸம் எனும் பேய்). கொல்லப்பட்ட தன் அப்பாவின் ஆவியைச் சந்திக்கும் ஹாம்லெட்டின் நிலைக்கு வாசகரும் தள்ளப்படுகிறார்: ‘ஏற்கெனவே இருக்கும் சமூக அமைப்போடு நான் ஒத்துப்போகவா? அல்லது, தற்போதைய சூழலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, அப்படி அதை எதிர்ப்பதன் மூலம், முற்றிலும் புதிதான, துணிவு மிகுந்த ஒரு உலகத்துக்கு வழிகாட்டவா?’ என்ற கேள்விகள் வாசகருக்கு எழும்.

மார்க்ஸ், எங்கெல்ஸின் காலகட்டத்தைச் சேர்ந்த வாசகர்களுக்கு இது ஒன்றும் ஐரோப்பாவின் அறிவுஜீவி வட்டங்களில் மட்டும் விவாதிக்கப்படும் பிரச்சினையாக இல்லை. அவர்களின் அறிக்கையானது செயலில் இறங்குவதற்கான ஓர் அறைகூவல், இந்தப் பேயின் மந்திரத்துக்குச் செவிசாய்ப்பதால் பெரும்பாலும் தண்டனைக்குள்ளாக வேண்டிவரும், சில சமயங்களில், நீண்ட சிறைவாசத்துக்கும் ஆளாக வேண்டிவரும். இன்றும் இதைப் போன்ற பிரச்சினை இளைஞர்களை எதிர்கொண்டிருக்கிறது: தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ள முடியாததும் சிதைவுற்றுக்கொண்டிருப்பதுமான சமூக அமைப்பு; நிலைபெற்றுவிட்ட அந்த அமைப்பை ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துவதா, அல்லது ஒன்றாகச் சேர்ந்து வேலைபார்ப்பதற்கு, விளையாடுவதற்கு, வாழ்வதற்குப் புதிய வழிமுறைகளைத் தேடி, தனிப்பட்ட இழப்புகளுக்கு ஆளாகும்படி, இந்தச் சமூக அமைப்பை எதிர்ப்பதா? அரசியல் அரங்கிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. என்றாலும், கம்யூனிஸ அறிக்கையின் ஆதார சக்தியாக இருக்கும் கம்யூனிஸத்தின் உத்வேகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது கடினம் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியும் எல்லையைத் தாண்டி சிந்திப்பதுதான் எந்தவொரு அறிக்கையின் இலக்காக இருக்கும். ஆனால், தங்கள் காலத்துக்கு 150 ஆண்டுகள் தாண்டி வரக்கூடிய யுகத்தைப் பற்றித் தெளிவாகச் சித்தரிப்பதிலும், தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் முரண்பாடுகளையும் தெரிவுகளையும் ஆய்வுசெய்வதிலும் மார்க்ஸும் எங்கெல்ஸும் அடைந்திருக்கும் வெற்றி நமக்கு வியப்பூட்டுவது. 1840-களின் பிற்பகுதியில் முதலாளித்துவமானது தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தது; மேலும், அந்தந்த பிராந்தியங்களை மட்டும் சார்ந்ததாகவும், சிதறுண்டதாகவும், துணிவற்றதாகவும் இருந்தது. எனினும், மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்கள் பார்வையைத் தூரமாக வீசினார்கள்; உலகளாவியதாகவும் நிதிச்சந்தை சார்ந்ததாகவும் இரும்புப்பிடி கொண்டதாகவும் பல்வேறு வகைகள் கொண்டதாகவும் இருக்கும் நம் காலத்திய முதலாளித்துவத்தை அவர்கள் முன்பே கண்டு சொன்னார்கள். அவர்கள் கண்டு சொன்ன மிருகம் 1991-க்குப் பிறகுதான் உயிர்பெற்று உலவ ஆரம்பித்தது. அதே தருணத்தில்தான் அமைப்பானது மார்க்ஸிஸத்தின் மரணத்தையும் வரலாற்றின் முடிவையும் அறிவித்துக்கொண்டிருந்தது.

கணிப்பு தவறாகவில்லை

கம்யூனிஸ்ட் அறிக்கையின் கணிப்பு தோற்றுப்போய்விட்டது என்று வெகுகாலமாக மிகைப்படுத்தப்பட்டுவந்தது. “முதலீடானது எங்கெங்கும் தஞ்சம் புகும், எங்கெங்கும் நிலைகொள்ளும், எங்கெங்கும் தொடர்புகளை நிறுவும்” என்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் பிரதானமான கணிப்பை இடதுசாரி பொருளாதார அறிஞர்கள்கூட விமர்சித்தார்கள். மூன்றாம் உலக நாடுகளின் துயர நிலையை உதாரணமாகக் காட்டி ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய தனது கேந்திரங்களைத் தாண்டி கிளைபரப்பும் முன்பே முதலீடு தனது துடிப்பை இழந்துவிட்டது என்று அவர்கள் விவாதித்தார்கள்.

நடைமுறையில் அவர்கள் கூறியது சரிதான்: ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இயங்கும் ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பானிய பெருநிறுவனங்கள் அங்கே முதலாளித்துவத்தைப் பரப்புவதற்குப் பதிலாக அங்குள்ள வளங்களை உறிஞ்சிக்கொள்ளும் காலனிய பாத்திரத்தையே ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன. இந்த நாடுகளில் முதலாளித்துவரீதியலான முன்னேற்றத்தை அந்த நிறுவனங்கள் ஏற்படுத்தவில்லை (‘எல்லா நாடுகளையும், சிறிதும் நாகரிக வளர்ச்சி அடையாத நாடுகளையும் உட்பட உள்ளடக்கும்’ என்ற அறிக்கையின் வரிகளை இதற்கு உதாரணம் காட்டுகிறார்கள்.) மாறாக, வளர்ச்சியின்மையின் வளர்ச்சியையே மூன்றாம் உலக நாடுகளில் அந்நிய முதலீடு உற்பத்திசெய்துகொண்டிருக்கிறது என்று அவர்கள் வாதிட்டார்கள். முதல் என்பது மூலைமுடுக்கெல்லாம் பரவக்கூடிய திறன் கொண்டது என்று அதன் மீது கம்யூனிஸ்ட் அறிக்கை அதீத நம்பிக்கை வைத்தது என்று அவர்கள் கருதினார்கள். “உலகச் சந்தையின் சுரண்டல்” என்பது “பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஒவ்வொரு நாட்டிலும் பல்கலாச்சாரத் தன்மையை (காஸ்மோபாலிட்டன்) வழங்கும்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைத்த கணிப்பை மார்க்ஸிய சிந்தனை கொண்டவர்கள் உட்பட பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தினார்கள்.

தாமதமாக என்றாலும் இறுதியில் கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைத்த கணிப்பு சரியானது என்றே நிரூபணமானது. அதன் கணிப்பு சரிதான் என்று நிரூபணமாவதற்கு சோவியத் யூனியனின் சிதைவும், இந்திய, சீனத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் முதலாளித்துவத்தின் தொழிலாளர் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டதும் நிகழ வேண்டிவந்தது. உண்மையில், முதலீடு முழுமையாக உலகமயமாவதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையை ஏற்றுக்கொண்டிருந்த அரசுகள் சுக்குநூறாக உடைக்கப்பட வேண்டும். வரலாற்றுக்கு இதைவிட சுவையான முரண் வேறேதும் கிடைக்குமா என்ன?

அச்சுறுத்தும் தொழில்நுட்பம்

இன்று, கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படிக்கும் எவரும் நம்முடையதைப் போன்ற ஒரு உலகத்தின் சித்தரிப்பையே கண்டு வியப்படைவார்கள்; அதாவது தொழில்நுட்பப் புதுமை யுகத்தின் விளிம்பில் அச்சத்துடன் தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருக்கும் உலகம். இந்த அறிக்கையின் காலத்தில் நிலப்பிரபுத்துவ வாழ்க்கைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது நீராவி இயந்திரம்தான். இந்த இயந்திரகதியின் சக்கரத்துக்குள் குடியானவர்கள் சட்டென்று சிக்கிக்கொண்டார்கள்; சமூகத்தின் மீது நிலவுடைமையாளர்கள் கொண்டிருந்த அதிகாரத்தைப் புதுவிதமான எஜமானர்கள், தொழிற்சாலை முதலாளிகள், வணிகர்கள் அபகரித்துக்கொண்டார்கள். நம் காலத்திலோ செயற்கை அறிவு தொழில்நுட்பமும் தானியங்கித் தொழில்நுட்பமும் பெரும் அச்சுறுத்தல்களாக நமக்குத் தென்படுகின்றன; “மாறாமல் இருப்பதும், துரிதமாக உறைந்துபோவதுமான உறவுகளை” துடைத்தழித்துவிடுவதாக இந்தத் தொழில்நுட்பங்கள் நமக்கு வாக்குறுதி தருகின்றன.

“உற்பத்தி சாதனங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் புரட்சிகர மாற்றங்கள்... ஒட்டுமொத்த சமூக உறவுகளையும்” மாற்றியமைக்கின்றன என்று அறிக்கை கூறுகிறது. இதனால், “உற்பத்தி முறையில் தொடர்ந்து புதுப்புது மாற்றங்கள், எல்லா சமூகத் தரப்புகளிலும் தொடர்ச்சியான பிரச்சினைகள், நீடித்த குழப்பநிலை, பதற்றநிலை” ஏற்படும் என்கிறது அறிக்கை.

மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பொறுத்தவரை இந்த இடையூறு என்பது கொண்டாடப்பட வேண்டியது. இயந்திரங்களுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கும் அவற்றை வடிவமைத்து, இயக்கி, அவற்றோடு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பெரும் பிளவுக்கு ஆதாரமாக இருக்கும் நம் மிச்சசொச்ச மனச்சாய்வுகளைக் கடாசியெறிவதற்கு மனிதகுலத்துக்குத் தேவைப்படும் இறுதி உந்துதலுக்கான வினையூக்கியாக இந்த இடையூறுதான் செயல்படுகிறது. “எதுவெல்லாம் திடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் உருகி ஆவியாகும், எதுவெல்லாம் புனிதமோ அதுவெல்லாம் அவமதிப்புக்குள்ளாக்கப்படும்” என்று தொழில்நுட்பத்தின் விளைவை அவர்கள் கம்யூனிஸ அறிக்கையில் எழுதினார்கள்; “மேலும், மனிதன் இறுதியில் தீவிரமான மனநிலையுடன் தன் வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளையும், தன் இனத்தவருடனான உறவுகளையும் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறான்” என்று எழுதினார்கள். தொழில்நுட்ப மாற்றமானது நாம் கொண்டிருக்கும் முன்தீர்மானங்களையும் தவறான உறுதிப்பாடுகளையும் கலைத்துவிடுகிறது. அப்படிச் செய்வதன் மூலம், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவுகள் எவ்வளவு பரிதாபகரமானவை என்ற உண்மையைக் காண வேண்டும் என்று நம்மை வலியுறுத்தி, அதை நோக்கி நம்மை உதைத்துத் தள்ளி, உரக்கச் சொல்கிறது.

விரும்பத்தகாத விளைவுகள்

இன்று, இதே விதமான கருத்தை அச்சிலும் இணையத்திலும் உலகமயமாதலின் எதிர்ப்பாளர்கள் கோடிக் கணக்கான சொற்களில் வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். மிகமிக மோசமான வறுமையிலிருந்து ஓரளவு மோசமான வறுமை என்ற நிலைக்கு பல நூறு கோடிக் கணக்கானோரைக் கொண்டுவந்ததற்காக உலகமயமாதலைக் கொண்டாடும் அதே வேளையில் மதிப்புக்குரிய மேற்கத்திய செய்தித்தாள்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர், பேராயர்கள் ஏன் பெரும் பணக்கார நிதிநிறுவன முதலாளிகள்கூட, உலகமயமாதலின் விரும்பத்தகாத பின்விளைவுகளைப் பற்றி முறையீடுசெய்கின்றனர்: சகித்துக்கொள்ளவே முடியாத சமத்துவமின்மை, வெட்கக்கேடான பேராசை, பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற ஜனநாயகங்களை வங்கி நிறுவனங்களும் அதீதப் பணக்காரர்களும் கடத்திவைத்திருப்பது போன்றவைதான் இந்த விரும்பத்தகாத பின்விளைவுகள்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகருக்கு இது எதுவுமே வியப்பளிக்காது. “சமூகம் என்பதை ஒரு முழுமையாக வைத்துப் பார்க்கும்போது இரண்டு எதிரி முகாம்களாக, ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் நிற்கும் இருபெரும் வர்க்கங்களாக அது மேலும் மேலும் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது” என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

உற்பத்தி இயந்திரமயமாக்கப்பட்டதால் இயந்திர உரிமையாளர்களின் லாப விகிதம்தான் ஒரே நோக்கமாக மாறுகிறது; இதனால், சமூகமானது உழைப்பில் ஈடுபடாத பங்குதாரர்கள், உரிமையாளர்களாக இல்லாத கூலித்தொழிலாளர்கள் என்று இரு தரப்புகளாகப் பிளவுபடுகிறது. நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை அறைக்குள் இருக்கும் டைனசோர்தான், அது அழிந்துபோயே தீரும். அதே வேளையில், மற்ற அனைவரது வாழ்க்கையும் பாதுகாப்பற்ற கூலி-அடிமை முறை எனும் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும்போது அதீதப் பணக்காரர்கள் மேலும் மேலும் குற்றவுணர்வு கொண்டவர்களாகவும் மன அழுத்தம் கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள். உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட இந்தச் சிறுபான்மையினர் இந்த அளவுக்குப் பிளவுபட்டிருக்கும் சமூகங்களை ஆள்வதற்குத் தகுதியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் அப்போதே கணித்தார்கள். பாதுகாப்பு மிகுந்த உயர்தரக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தங்களை அடைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பதற்றத்தால் தாங்கள் பீடிக்கப்படுவதையும் தங்கள் செல்வச் செழிப்பைத் தங்களால் அனுபவிக்க முடியவில்லை என்பதையும் அவர்கள் கண்டுணர்வார்கள். அவர்களில் சிலர், அதாவது தங்களின் நீண்ட கால சுயநலன் அடிப்படையில் சிந்திக்கும் புத்திசாலிகள், மக்கள்நல அரசுதான் இருப்பதிலேயே சிறந்த ஆயுள்காப்பீட்டுத் திட்டம் என்பதைக் கண்டுகொள்வார்கள். எனினும், அவசியமான வரிகளைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஓய்வின்றி உழைப்பது அவர்களது இயல்பு என்று அறிக்கை விளக்குகிறது.

தற்காலத்தில் நாம் கண்கூடாகக் காண்பது இதைத்தானே! பாதுகாப்புணர்வு அற்றவர்களாக, எப்போதும் அதிருப்தியுடன் இருக்கும் குழுவான அதீதப் பணக்காரர்கள் தொடர்ந்து போதை மறுவாழ்வு மையங்களுக்குச் செல்கிறார்கள், சாமியார்களையும் மனநல மருத்துவர்களையும் விடாமல் சந்தித்து ஆறுதலையும் ஆலோசனைகளையும் பெறுகிறார்கள். இதற்கிடையில், மற்றவர்களெல்லாம் ஒரு வேளை உணவைப் பெறுவதற்காகவும், பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கும், ஒரு கடன் அட்டையிலிருந்து இன்னொரு கடன் அட்டைக்குத் தாவுவதற்கும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதற்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாமோ கவலையின்றி வாழ்பவர்கள்போலக் காட்டிக்கொள்கிறோம்; நமக்குப் பிடித்ததையே நாம் செய்துகொண்டிருக்கிறோம், செய்துகொண்டிருப்பது நமக்குப் பிடிக்கும் என்றும் கூறிக்கொள்கிறோம். எனினும் யதார்த்தத்தில், நாம் அழுது அழுது கண்கள் வீங்கித் தூங்கிப்போகிறோம்.கொடைவள்ளல்களும் அமைப்புசார்பான அரசியல்வாதிகளும் பொருளாதார அறிஞர்களும் இந்த சூழலுக்கு ஒரே மாதிரியாக எதிர்வினை புரிகிறார்கள். அறிகுறிகளைப் பற்றி மட்டும் (அதாவது ஊதிய ஏற்றத்தாழ்வு) கடுமையாக விமர்சிக்கிறார்கள்; காரணங்களைக் காணத் தவறிவிடுகிறார்கள் (அதாவது இயந்திரங்கள், நிலம், ஆதாரவளங்கள் போன்ற உடைமைகள் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் குவிந்தததன் விளைவான சுரண்டலை). இன்று செயலற்றுப்போய் நிற்கிறோம் என்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா என்ன?

நம்பிக்கையின் ஆதாரம்

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் அதிவேகத்தில் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் ஒருவருக்கொருவர் அறிவார்த்தமான, நாகரிகமான முறையில் நமக்குள் எப்படி உறவாட வேண்டும் என்பதை முடிவெடுத்தாக வேண்டிய தருணத்தை நெருங்கியிருக்கிறோம். வேலைசெய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குப் பின்னாலும் அதன் காரணமாக ஏற்படும் ஒடுக்குமுறை நிறைந்த சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னாலும் இனியும் நாம் ஒளிந்துகொள்ள முடியாது. இந்த அலங்கோலத்துக்கு ஊடாகப் பார்க்கவும் அதிருப்தியிலிருந்து தப்பித்து, ‘ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான வளர்ச்சி என்பது எல்லோருக்குமான சுதந்திரமான வளர்ச்சி என்பதன் அடிப்படை’யாக இருக்கும் புதுவித சமூக ஏற்பாடுகளைச் சென்றடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் கண்டுகொள்ளவும் கம்யூனிஸ்ட் அறிக்கை 21-ம் நூற்றாண்டு வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த இலக்கை எப்படி அடைவது என்பதற்கான வரைபடத்தை இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை எனினும், நிராகரிக்கவே முடியாத வகையில் நம்பிக்கையின் ஆதாரமாக இந்த அறிக்கை விளங்குகிறது.

நம்மைப் பரவசப்படுத்தும், ஊக்கப்படுத்தும், வெட்கித் தலைகுனிய வைக்கும் ஆற்றலை இந்த அறிக்கை 1848-ல் வெளியானபோது கொண்டிருந்ததைப் போலவே தற்போதும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம், காலத்தின் வரலாறு அளவுக்கு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டங்களும் பழமையானவை என்பதால்தான். மார்க்ஸும் எங்கெல்ஸும் இதை துணிச்சலான ஒருசில வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்: “இதுவரையிலான சமூகத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே.”

சரி, இந்த அறிக்கையின் அடிப்படைதான் என்ன? நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அனைவரும், வரலாறு அரசியல் போன்றவற்றின்மீது ஏன் அக்கறை செலுத்த வேண்டும்?

மகிழ்ச்சியும் சுதந்திரமும்

மார்க்ஸும் எங்கெல்ஸும் மிகவும் எளிமையான இந்தப் பதிலையே தங்கள் அறிக்கையின் அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கிறார்கள்: அசலான மனித மகிழ்ச்சியும் அதற்குத் துணையாக இருக்கும் நியாயமான சுதந்திரமும். அவர்களைப் பொறுத்தவரை இவைதான் மிகவும் முக்கியமானவை. உற்பத்திசெய்பவர்களுக்கும் உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பெரும் பிளவுதான் அவர்களின் அலசலுக்கு மிகவும் முக்கியமான மையம். முதலுக்கும் கூலி அடைப்படையிலான உடலுழைப்புக்கும் இடையிலான பிரச்சினைக்குரிய உறவு என்பது நமது வேலையை நாம் அனுபவித்துச் செய்வதிலிருந்தும், உற்பத்திசெய்யும் பொருட்களை அனுபவித்து உற்பத்திசெய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கிறது. முதலாளிகளையும் தொழிலாளர்களையும், பணக்காரர்களையும் ஏழைகளையும் சிந்தனையற்ற பகடைக்காய்களாக மாற்றுகிறது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளால் இந்தப் பகடைக்காய்கள் அர்த்தமேயற்ற ஒரு இயந்திர வாழ்க்கையை நோக்கித் தள்ளப்படுகின்றன.

சரி, இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நமக்கு அரசியல் ஏன் தேவைப்படுகிறது? இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸின் பதில் இதுதான்: இந்த முட்டாள்தனத்தை நாம் தனிநபர்களாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது; ஏனெனில், இந்த முட்டாள்தனத்துக்கு மாற்று மருந்தை உற்பத்திசெய்யும் எந்தச் சந்தையும் ஒருபோதும் உருவாகப்போவதில்லை. கூட்டான, ஜனநாயக அரசியல் செயல்பாடுதான் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு. இதற்காக நாம் எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் கண்விழித்து உழைக்கலாம்.

- யானிஸ் வரூஃபக்கீஸ், பொருளாதார அறிஞர்,

கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர்.

© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author