Last Updated : 11 May, 2018 08:50 AM

 

Published : 11 May 2018 08:50 AM
Last Updated : 11 May 2018 08:50 AM

பூச்சிக்கொல்லிக்கு முடிவுரை எழுதும் பழங்குடியினர்!

பூ

ச்சிக்கொல்லியே இல்லாமல் சாகுபடிசெய்து அசத்தியிருக்கிறார்கள் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலுள்ள கன்னியம்பேட்டா கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள். காவடம், சித்தாளூர் காயக்குன்னூ, நடவாயலுக்கு அருகேயுள்ள இடங்களில் 16 ஏக்கர் குத்தகை நிலத்தில் பீன்ஸ், பாகற்காய், தக்காளி, புடலங்காய், பச்சைமிளகாய் என பத்துவிதமான காய்கறிகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஜனவரியில், மத்திய அரசின் உதவியோடு பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் காய்கறிகள் ஊக்குவிப்புத் திட்டம் நிறுவப்பட்டது. ரூ. 9.64 லட்சம் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ஐந்து தன்னார்வக் குழுக்களும் செயல்பட்டுவருகிறார்கள். இதில், மூன்று மகளிர் குழுக்கள் அடக்கம். ஒவ்வொரு குழுவிலும் 10-லிருந்து 14 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குத்தகைப் பணம், விதைகள், சாண எரு, பம்ப் செட், விவசாய உபகரணங்கள், கூலி என எல்லா செலவுக்கும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையே பொறுப்பேற்றுக்கொள்கிறது. “விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவதால் இங்கே விளையும் காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார் காவடம் பணியர்கள் குடியிருப்பின் பழங்குடிகள் தலைவர் ஏ.காவலன்.

“இந்தப் பருவ விளைச்சலில் ரூ.15 லட்சம் ஆதாயம் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். கடந்த இரண்டு மாதத்தில் 64 குடும்பங்களுக்கு 60 நாட்களும் எங்களால் வேலை தர முடிந்தது. கிடைக்கும் வருமானத்தை மீண்டும் இதிலேயே முதலீடுசெய்யவிருக்கிறோம். இதன் மூலம், பழங்குடியின மக்களுக்கு நிலையான வருமானத்தை வழங்க முடியும்” என்கிறார் கனியம்பேட்டா கிராம பஞ்சாயத்தின் பழங்குடியின விரிவாக்க அதிகாரி என்.ஜே.ரெஜி. பூச்சிக்கொல்லி இல்லா உலகுக்கு வழிகாட்டும் பழங்குடியின மக்களுக்கு வந்தனங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x