Published : 05 May 2018 07:59 AM
Last Updated : 05 May 2018 07:59 AM

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பெருநிறுவனங்கள்!

பு

த்தக வாசிப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் பல்வேறு மட்டங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், புத்தகக் காதலர்கள் தங்கள் அலுவலகங்களிலேயே புத்தகங்களைத் தரிசிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் ‘காக்னிஸன்ட்’ உள்ளிட்ட பெருநிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள். இதற்கு அந்நிறுவனங்களும் துணைநிற்கின்றன என்பது வரவேற்கத்தக்க விஷயம்.

வாசகர்கள் இணைந்து வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ‘புத்தக வங்கி’ எனும் பெயரில் ஒரு திட்டத்தை, கடந்த சில வருடங்களாக நடத்திவருகிறார்கள் ‘காக்னிஸன்ட்’ ஊழியர்கள். புத்தகத்தைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தனது புத்தகப் பட்டியலை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோரது பட்டியலும் ஒரு பொதுவான இடத்தில் எல்லோரும் அணுகும்படி இருக்கும்.

ஒருவர் தான் வாசிக்க விரும்பும் புத்தகத்தை அந்தப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து பின் அதன் உரிமையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இப்படி அந்த வட்டத்துக்குள் ஒவ்வொருவரும் தங்களது புத்தகத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இதற்காக ஒரு பிரத்யேகச் செயலியை ‘காக்னிஸன்ட்’ நிறுவனமே உருவாக்கித் தந்திருக்கிறது.

தனியார் அல்லது அரசு அலுவலகங்களில் நூலகங்கள் இருப்பதென்பது இயலாத காரியம். அப்படி இருந்தாலும்கூட வாசகர்களின் ரசனைக்கேற்ற புத்தகங்கள் அதில் இடம்பெறுவது அரிது. எனவே, இப்படியான ஒரு சூழலை அங்கு பணிபுரிபவர்களே உருவாக்கும்போது நாளடைவில் பெரும் வாசிப்புச்சூழல் அங்கே உருவாகும். முதலில் புத்தகம் பரிமாறிக்கொள்பவர்கள் அப்புத்தகங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்குவார்கள். பிறகு, அதே புத்தகத்தை வாசித்தவர்களும் இந்தப் பரிமாற்றத்திலும் விவாதத்திலும் பங்கேற்க வாய்ப்பு உருவாகும்.

இத்தகைய செயல்பாடுகள் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, ஊழியர்களிடம் படைப்பாக்கத் திறனையும் உருவாக்கலாம். அது அலுவலகம் சார்ந்த பணிகளிலும் தனித்தன்மையுடன் மிளிர வழிவகுக்கும். பொழுதுபோக்கு என்பது வெறுமனே கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்பதைத் தாண்டி, பயனுள்ள வகையில் அமைய இதுபோன்ற திட்டங்கள் உதவும்.

50 பேர் பணிபுரியும் சிறு அலுவலகங்களில்கூட, வாசிப்பில் ஆர்வமுள்ள ஐந்து பேர் இதைத் தொடங்கினால், அதைப் பார்த்து வேறு சிலர் வாசிப்புக்குள்ளே வரக்கூடும். இது ஒரு உதாரணம்தான். இதே விஷயத்தை வேறு மாதிரிகூட நாம் பணிபுரியும் இடங்களில் முயன்றுபார்க்கலாம். இக்குழுவில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் வெளியே எங்கேயாவது கூடி விவாதிக்கலாம்.

மேலை நாடுகளில் பேருந்து, ரயில் பயணங்களில் புத்தகங்களோடு பயணிக்கும் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. அப்படியான நபர்களை நம் ஊரில் காண்பது மிகவும் அரிதானது. எனவே, இப்படியான சிறுசிறு நகர்வுகளின் மூலம் பெரும் மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x