Published : 29 Aug 2014 10:32 AM
Last Updated : 29 Aug 2014 10:32 AM

இறுதியில் பெண்கள்தான் குற்றவாளிகளா?

அதிகாரத் தரப்பின் செல்வாக்கால் வல்லுறவு வழக்குகள் பொய் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பான வழக்குகளில், உதவும் பெண் வழக்கறிஞர்களாக கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் இருக்கிறோம். அந்த அனுபவங்களி லிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

மும்பையில் எங்கள் அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளியில் வாட்ச்மேனால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமியின் தாய்க்கு உதவ குற்றவியல் நீதிமன்றத்துக்கு 2011-ல் சென்றோம். அந்தப் பள்ளியின் பெண் முதல்வர் கொடுத்த நெருக்குதல் காரணமாக, போலீஸார் முதல் மூன்று நாட்களுக்கு அந்தச் சிறுமியின் தாய் தந்த புகாரை ஏற்கவோ, முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) தாக்கல் செய்யவோ முன்வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல்ரீதியான கடும் பாதிப்புகளை மருத்துவமனை ஆதாரபூர்வமாகத் தெரிவித்த பிறகே போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தனர்.

இதற்குள் உள்ளூர் பத்திரிகைகளில் அந்தச் சிறுமியின் அன்னைக்கு புத்திபேதலித்திருப்பதாகவும், இந்தப் புகாரை மேற்கொண்டு வலியுறுத்தாமல் இருக்க பள்ளி நிர்வாகத்திடம் 10 லட்ச ரூபாய் கேட்டார் என்றும் செய்திகள் வரத்தொடங்கின. வேறு மாநிலத்திலிருந்து வந்து வேலை செய்யும் அந்த அப்பாவித் தாய்க்கு, தான் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்றே புரியவில்லை.

செல்வாக்கு மிக்க அந்தப் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு எதிராக, அந்தத் தாய்க்குத் துணையாக நாங்கள் களமிறங்கினோம். அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழக்கைக் கைவிட்டுவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பிலோ மிகச் சிறந்த வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார். நாங்கள் தீவிரமாகப் போராடி, எதிரிக்குத் தண்டனை பெற்றுத்தந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இப்படித்தான் நாங்கள் களமிறங்கத் தொடங்கினோம்.

தெரியவந்த உண்மைகள்

அப்போது பாலியல் குற்றங்கள் தொடர்பாக எங்களுடைய கண்ணோட்டமும் பெரும்பாலான மக்களிடையே நிலவுவதைப் போன்றே இருந்தது. எல்லா பாலியல் வன்புணர்ச்சியும் அறிமுகம் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது என்றே நினைத்தோம். ஆனால், வழக்குகளைத் தொடர்ந்து ஆராய்ந்தபோதுதான், புதியவர்களால் பாதிப்புக்கு உள்ளாவது குறைவு என்பதையும், ஏற்கெனவே அறிமுக மானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் இதில் ஈடுபடுகின்றனர் என்பதையும் உணர்ந்தோம். பாதிப்புக்குள்ளான பெண்ணிடம், ‘குற்றம்சாட்டப்பட்டவரையே திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று நீதிபதி கேட்டதாகப் பத்திரிகைகளில் படித்தபோது நெளிந்தோம். இது நல்ல வழக்கு, இது போலி வழக்கு என்று போலீஸாரும், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் பேசும்போது எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும். உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்த இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகளைப் படித்தபோது, தெரிந்துகொள்ளாத பல உண்மைகளை, வழக்குகளை நேரில் கையாளும்போதுதான் தெரிந்துகொண்டோம்.

வழக்குகளில் ஆராய்ச்சி

கடந்த மூன்று ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டோம். குற்றப்பத்திரிகைகளை ஆழ்ந்து வாசித்தோம். நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தோம். காவல் துறையினர், மருத்துவத் துறையினர், வழக்கை நடத்துபவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். எல்லாவற்றுக்கும் சிகரமாக, பாதிக்கப்பட்ட பெண்களுடன் பயணம் செய்து பேசி, அவர்களைத் துணிவுகொள்ளச் செய்தோம். எங்களுடைய ஆய்வு முடிவுகளும், ‘தி இந்து’(ஆங்கிலம்) டெல்லியில் 2013-ல் நடந்த வழக்குகளின்போது நடத்திய ஆய்வு முடிவுகளும் ஒன்றுபோலிருந்தன. இந்த வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் வகை. திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆண் கூறும் வார்த்தையை நம்பி அவனுடன் வரம்புகடந்து பழகி, தாய்மை அடைவதால் ஏற்படும் வழக்குகள் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்கு. இவ்விரு வகை வழக்குகளைத்தான் அதிகாரிகள் ‘பொய் வழக்குகள்' என்று முத்திரை குத்துகின்றனர்.

தண்டனை பெறுவோர் குறைவு

பாலியல் வல்லுறவு வழக்குகளில், தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 25% என்று தேசிய குற்றப்பதிவேடுகள் துறை (என்.சி.ஆர்.பி.) தெரிவிக்கிறது. ஆனால், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் மும்பையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வெறும் 10% முதல் 12%-க்கு உள்ளாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணே பிறகு வாக்குமூலத்தை மாற்றுவது, முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யத் தாமதிப்பது, பழுதான விசாரணை, அரைகுறையான சாட்சியங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள், வழக்குகளின் சுமை தாளாமல் பிதுங்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், 18 வயதுக்குக் குறைந்த பெண்ணாக இருந்தாலும் குற்றவியல் வழக்கறிஞர்கள் நடத்தும் தீவிர குறுக்கு விசாரணைகள், வழிகாட்டு நெறிகளையும் மரபுகளையும் பின்பற்றாத நீதிமன்றங்கள், அனுபவமற்ற நீதிபதிகள்... இதுபோன்ற காரணங்களால் வழக்குகள் தேக்கமடைவதுடன், குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதும் அதிகமாக இருக்கிறது. ஒரு வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதிலிருந்து இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும்வரை நடப்பவற்றைக் கூர்ந்து பின்பற்றினால் இது நமக்குப் புரியும். இனி, சில வழக்குகளைப் பார்ப்போம்.

சாந்த் கதை

16 வயதான சாந்த் என்ற பெண்ணுக்கு ஒரு சிநேகிதன் இருந்தான். அவனிடம் மனம்விட்டுப் பேசியபோது, அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. தன்னுடைய தந்தையே தன்னிடம் முறைகேடாக நடந்துகொள்வதாகவும் தன்னை அவரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். இந்த விஷயம் அவளுடைய தாய்க்கும் தெரியும் என்றாலும், இதை யாரிடம் சொல்வது, என்ன செய்வது, குடும்ப மானம் என்னாகும் என்றெல்லாம் குழம்பி, அந்தத் தாய் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். காவல் துறையில் புகார் செய்யுமாறு அவளுடைய சிநேகிதன் கூறினான். அவள் கூறிய புகாரைப் பதிவுசெய்வதற்கு முன்னால் காவல் துறையினர் அந்தப் பெண்ணின் பெற்றோரையும் சமூகப் பெரியவர்களையும் அழைத்தனர். தந்தை கைதுசெய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின்போது சாந்த் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அதிர்ச்சியிலிருந்து மீள அவளுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அதே சமயம், அவளைக் காப்பகத்துக்கு மாற்றாமல் அதே வீட்டிலேயே தங்கவைத்தனர். “தந்தையையே கைது செய்ய வைத்துவிட்டாயே” என்று உறவினர்கள் அந்தப் பெண்ணை வசைபாடினர். வழக்கு விசாரணை யின்போது சாந்த், தனது வாக்குமூலத்தை மாற்றிவிட்டாள். தன்னுடைய தந்தை மீது தான் கூறிய புகாரையே இல்லையென்று மறுத்தாள். தன்னுடைய சிநேகிதனுடன் உறவுகொண்டதால்தான் தனக்குக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினாள். அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்தக் கட்டத்தில் குறுக்கிட்டு, அவரைப் பரிசோதித்த டாக்டர்களை விசாரணைக்கு அழைக்கவேயில்லை. சாந்த் இப்படிக் கூறியதால் அவளுடைய தகப்பனார் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் மீண்டும் அதே வீட்டில் வாழ்ந்தனர். அதற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் மனநிலை எந்த அளவுக்குப் புண்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

சீமாவின் குடிகாரத் தந்தை

வீட்டுவேலை செய்யும் பெண்ணின் மகள்தான் சீமா (13). அவளைவிட வயதில் பெரிய பணக்காரச் சிறுவன், தனக்குப் பிறந்த நாள் என்று கூறி அழைத்துச் சென்று குளிர்பானம் கொடுத்தான். மயங்கிவிழுந்த அவளைத் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவு கொண்டான். மயக்கம் தெளிந்த சீமா, தனக்கு ஆடை இல்லாததையும் ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதையும் அறிந்து அழுதுகொண்டே வீட்டை அடைந்தாள். அவளுடைய தாய், சீமாவை முனிசிபல் மருத்துவமனையில் சேர்த்தாள். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சீமா அந்தக் குற்றவாளியை அடையாள அணிவகுப்பில் சரியாகவே அடையாளம் காட்டினாள். சீமாவை அரசுக் காப்பகத்தில் தங்கவைத்தனர். சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட இன்னொரு பெண்ணையும் அங்கே சேர்த்திருந்தனர். அந்தப் பெண் யாருடைய ஏற்பாட்டின்பேரிலோ சீமாவை அடித்துத் துன்புறுத்தினாள். எனவே, சீமாவை போலீஸார் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

சீமாவின் தந்தை குடிகாரன். குடும்பப் பொறுப்பில்லாத அவன், வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். இதன் பிறகு, சீமா வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டாள். எதிரிகளை அடையாளம்காட்ட மறுத்தாள். மரபணுச் சோதனையில் அந்த நான்கு பேரும் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது. ஆயினும் சீமா தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றியதால் நான்கு எதிரிகளும் விடுதலை பெற்றனர். மும்பையில் சக்தி மில்லில் நடந்த பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்புடைய மூன்று எதிரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட அதே நாளில்தான் சீமா வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்தது.

இப்படிப் பல வழக்குகளில் ‘எதிரிகள்' விடுதலை யாகிவிடுகின்றனர். இதனாலேயே இந்த வழக்குகளை ‘பொய் வழக்குகள்' என்பது மிகவும் ஆபத்தானது. எனவே, இந்த வழக்குகள் தொடர்பான நம்முடைய அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாற வேண்டும்.

- தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x