Published : 07 May 2018 09:12 AM
Last Updated : 07 May 2018 09:12 AM

நோபல் ரத்தும் தார்மீகப் பொறுப்பும்!

ந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது, அடுத்த ஆண்டில் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது இலக்கியத்துக்கான நோபல் விருதாளர்களைத் தேர்வுசெய்யும் ஸ்வீடிஷ் அகாடமி.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1901-லிருந்து வழங்கப்பட்டுவருகிறது. உலகப் போர்களின் காரணமாக இடையிடையே ஏழு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. 1958-ல் ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக், சோவியத் அரசின் கட்டாயத்தால் விருதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். 1964-ல் பிரெஞ்ச் எழுத்தாளர் ழான் பால் சார்த்தரும் இந்த விருதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகாரபூர்வமான விருதுகளை மறுக்கும் தனது திட்டவட்டமான கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை. இருவரின் பெயர்களும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களின் பெயர்களில் தொடரவே செய்கின்றன. ஆனால், இந்த ஆண்டு ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்டுள்ள அறிவிப்பு, இதற்கு முந்தைய அறிவிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இதில் உறுப்பினராக இருந்த கவிஞரும் எழுத்தாளருமான காத்தரீனா ப்ரோஸ்டென்சனின் கணவர் ழீன் - கிளாட் அர்னால்ட் மீது எழுந்திருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களே இந்த ஆண்டு விருது தள்ளிப்போடப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம். கடந்த 2017-ல் மேற்குலகைச் சுற்றிச் சுழன்ற ‘#மீ டூ’ இயக்கத்தின்போது புகைப்படக் கலைஞரான அர்னால்ட் மீது, 18 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தெரிவித்திருந்தார்கள். சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களில் அகாடமிக்குச் சொந்தமான இடங்களும் உண்டு. அந்தப் புகார்களை அர்னால்ட் மறுத்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, அவரது மனைவி காத்தரீனா, அகாடமியில் தனக்கு உள்ள செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் குற்றசாட்டுகள் இருக்கின்றன.

ஸ்வீடிஷ் அகாடமி விருது அறிவிப்பை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போட்டதற்கான காரணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்திருக்கிறது. ‘அடுத்த விருதுக்கான நபரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், மக்களிடம் எங்கள் மீதிருக்கும் நன்னம்பிக்கையை மீட்டெக்கக் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று மட்டுமே அறிவித்திருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில், தனியொரு நபரை மட்டுமே அதற்குக் காரணமாக்கி, அமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுக்க முனையவில்லை ஸ்வீடிஷ் அகாடமி. கலை இலக்கிய அமைப்பொன்றின் இந்தத் தார்மிகப் பொறுப்பு என்றைக்கு நமது பல்கலைக்கழகங்களுக்கு வாய்க்குமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x