Published : 31 May 2018 09:16 AM
Last Updated : 31 May 2018 09:16 AM

விவாதக்களம் ஆகட்டும் சட்ட மன்றம்!

தூ

த்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100 நாள் போராட்டம், துப்பாக் கிச் சூடு, கலவரம், 13 உயிர்களின் பலி, இன்னும் மக்களிடம் கனன்றுகொண்டிருக்கும் கோபம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அந்த ஆலை மூடப் படுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்கத் தொடங்கியிருப்பதன் அறிகுறி என்ற வகை யில் வரவேற்கக் கூடியதாகிறது இது. எனினும், இது சட்டபூர்வமாக உறுதியான நடவடிக்கைதானா என்று எழும் கேள்விகள் நியாயமானவை. சட்ட வல்லுநர்கள் பலர் ‘‘அர சின் இந்நடவடிக்கை உறுதியாக நிற்கக் கூடியதல்ல” என்று கூறியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் பலவும் “இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை” என்று விமர்சித்திருக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான திமுக முதல் நாள் சட்ட மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தது. “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத்தக்க வகையில் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி, முழுமையான அரசாணை வெளியிடப்பட வேண்டும்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். திமுகவின் வார்த்தைகளில் உண்மையும் நியாயமும் இருக்கிறது என்றாலும், தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்த அது எடுத்திருக்கும் முடிவு ஏமாற்றத்தையே தருகிறது. சட்ட மன்றக் கூட்டத்தொடர் புறக்கணிப்பு முடிவு எந்த வகையிலும் நியாயப்படுத்தக்கூடியது அல்ல. அதிமுக அரசு கேள்வி கேட்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி லாவணியாக மாறிவிடக் கூடாது.

தூத்துக்குடி பிரச்சினை வெறுமனே ஒரு ஆலையின் பிரச்சினையோ, ஒரு ஊரின் பிரச்சினையோ அல்ல. தமிழ்நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கு நாம் தீர்வுகாண வேண்டியிருக்கிறது. நாட்டின் முக்கிய மான தொழில் கேந்திரங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த நம்முடைய கடந்த கால ஆட்சியாளர்கள் தொழில் வளர்ச்சிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைச் சுற்றுச்சூழலுக்குக் கொடுக்கவில்லை. சூழலியல் பிரக்ஞை பெரிதாக வளராத ஒரு காலகட்டத்தில் நடந்தது இது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புவி வெப்பமாதலுக்குப் பிறகு உலகெங்கும் சூழலியல் அக்கறைகள் முக்கிய இடம்நோக்கி நகர்கின்றன. ‘நீடித்த வளர்ச்சிக்கான புதிய தொழில் கொள்கைகள்’ இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. இது குறித்து ஆட்சியாளர்களுடன் விவாதிக்க இன்று சட்ட மன்றத்தை விட்டால் வேறு இடம் இல்லை. இந்த விவாதம் நோக்கி ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதே எதிர்க்கட்சிகளின் முக்கியமான இன்றைய பணி. திமுக அதை முன்னெடுக்க வேண்டும். போட்டி சட்ட மன்றம் என்ற போராட்ட வடிவத்தை ஒரு அடையாளப் போராட்டமாக முடித்துக்கொண்டு, சட்ட மன்றத்துக்குத் திமுக திரும்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x