

நில மோசடி தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், பிணையில் விடுதலையாகியிருப்பது, ஜார்க்கண்ட் அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பட்காய் என்கிற பகுதியில் உள்ள 8.86 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. அவர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், 2024 ஜனவரி 31 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும் ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்கு உரியவருமான சம்பய் சோரன் முதல்வரானார்.
ஹேமந்த் மீதான கைது நடவடிக்கைக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இடம்பெற்றிருந்த இண்டியா கூட்டணியிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூன் 28 அன்று பிணை வழங்கியிருக்கிறது.
வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சூழலையும் ஆராய்ந்த நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய், ஹேமந்த் சோரன் குற்றம் இழைக்கவில்லை என்று நம்புவதற்கான காரணிகள் இருப்பதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். ஐந்து மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் ஹேமந்த் சோரன், இதைத் தனது அரசியல் எதிர்காலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறார்.
இன்னும் சில மாதங்களில் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவுக்கு எதிரான வியூகம் வகுப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கும் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்டிலிருந்து பாஜக துடைத்து அகற்றப்படும் எனச் சூளுரைத்திருக்கிறார்.
அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கருதப்பட்ட நிலையில், அதைத் தவிர்த்துவிட்டுத் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை, அவர் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டால் எதிர்க்கட்சியான பாஜக அதைக் கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிகிறது. இதற்கிடையே சம்பய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு அடுத்தடுத்து நலத் திட்டங்களை அறிவித்துவருகிறது. இது தேர்தல் வெற்றிக்கான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
ஹேமந்த் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி கல்பனா சோரன் அரசியலுக்கு வந்ததுடன், காண்டே சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான ஹேமந்த் சோரன், தன் மீதான வழக்கு பழங்குடியினர் மீதான தாக்குதல் என்று ஆரம்பம் முதலே குற்றம்சாட்டிவருகிறார்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஜார்க்கண்ட் மக்கள்தொகையில் 26% பேர் பழங்குடியினர். மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டில், பாஜக எட்டு தொகுதிகளில் வென்றிருந்தாலும் பழங்குடியினருக்கான ஐந்து தனித் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணிக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது. மொத்தத்தில், பாஜக அரசின் இந்நடவடிக்கை, அரசியல்ரீதியாக அக்கட்சிக்கு எதிர்மறையான விளைவுகளையும் தந்திருக்கிறது.
அதே நேரம், ஹேமந்த் சோரன் பிணையில்தான் வெளிவந்திருக்கிறார். இது எந்த விதத்திலும் அவர் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான நிரூபணமாகிவிடாது. அமலாக்கத் துறை சோரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். சோரனும் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து, ஊழல் கறையிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதாகும்.