Last Updated : 16 May, 2018 08:57 AM

 

Published : 16 May 2018 08:57 AM
Last Updated : 16 May 2018 08:57 AM

பிளவுபட்ட கர்நாடகா!

ந்திய மாநிலங்களில் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம் கர்நாடகா. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து பல்வேறு பகுதிகளை மைசூரு மாநிலத்துடன் இணைத்தே 1956-ல் கர்நாடகா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இப்படி ஒன்றிணைந்த பகுதிகள் இன்னமும்கூட தனித்தனி குணாம்சத்துடனேயே தொடர்கின்றன.

ஐந்து பிரிவுகள்

நகர்ப்புற கர்நாடகா, கிராமப்புற கர்நாடகா என்று ஏனைய மாநிலங்களைப் போலவே இரு பெரும் பிரிவுகளாக மேலோட்டமாகப் பிரித்துப் பார்த்தாலும், பெங்களூரு பெருநகரம், மத்திய கர்நாடகா, வடக்கு கர்நாடகா, தெற்கு கர்நாடகா, கடற்கரையோர கர்நாடகா என்று ஐந்து பிரிவுகளாக அரசியல்ரீதியாக கர்நாடகா அணுகப்படுகிறது. இவற்றில் வடக்கே மேல் எல்லையில் மஹாராஷ்டிரத்தை ஒட்டியிருக்கும் பெல்காம், பீஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மராத்திய அரசியலின் தாக்கம் இருக்கும். கிழக்கே ஆந்திர - தெலங்கானா எல்லையை ஒட்டியுள்ள பீதர்,ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தெலுங்கு அரசியல் தாக்கம் இருக்கும். இதேபோல கேரளாவுடன் இருந்த மங்களூரு, காசர்கோடு பகுதிகளில் மலையாளிகளும், தமிழகத்திலிருந்து இணைக்கப்பட்ட பெங்களூரு, கொள்ளேகால், கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் தாக்கமும் இருக்கும்.

கன்னட தேசியம் பெரிதாகப் பேசப்பட்டாலும் மாநிலக் கட்சியாக இங்கே எதுவும் எடுபடாமல் போனதும், தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தவும் இந்த வகையான கலவை ஒரு முக்கியமான காரணம். அதேபோல, சாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமும் இது.

சுமார் 6 கோடி மக்கள் வாழும் கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பின்படி தலித்துகள் 19.5 %, இஸ்லாமியர் 16%, லிங்காயத்துகள் 14%, ஒக்கலிகர்கள் 11%, குருபர்கள் 8%, பழங்குடியினர் 5% ஆகியோர் தேர்தலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் சமூகத்தினர். என்றாலும், ஆதிக்க சாதிகளான லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பெரும் செல்வாக்கு செலுத்தும் வரலாறு கர்நாடகாவுடையது. அந்தந்த எல்லையோரச் சமூகங்கள், சாதிகள் இரண்டையும் சேர்த்துதான் கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும்.

தென் கர்நாடகம்

தென் கர்நாடகா ஒக்கலிகர்கள் அதிகம் வாழும் பகுதி. விளைவாக இந்தச் சமூகத்தைச் சேர்ந்த தேவ கவுடாவுக்கு இங்கே செல்வாக்கு அதிகம். அது இந்தத் தேர்தலிலும் தொடர்ந்திருக்கிறது. விளைவாக, இங்குள்ள 51 தொகுதிகளில் அவருடைய மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் வென்றிருக்கிறது. காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 9 தொகுதிகளையும் வென்றிருக்கின்றன.

வட கர்நாடகம்

வட கர்நாடகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மும்பை கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா என்று உள்ளூர் அரசியலில் குறிப்பிடப்படுபவை இவை. மராத்தி எல்லையோர கர்நாடகாவில் 50 தொகுதிகளும், தெலுங்கு எல்லையோர கர்நாடகாவில் 31 தொகுதிகளும் உள்ளன. வடக்கு கர்நாடகாவில் லிங்காயத்துகள் செல்வாக்கு அதிகம். இங்கே பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம். பாஜக தலைவர் எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். மராத்தி எல்லையோர கர்நாடகத்திலுள்ள 50 தொகுதிகளில் 30 தொகுதிகளை பாஜக வென்றது. தெலுங்கு எல்லையோர கர்நாடகாவிலுள்ள 31 தொகுதிகளில் காங்கிரஸ் 15, மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 தொகுதிகளைக் கைப்பற்ற 12 தொகுதிகளை வென்றது பாஜக.

கடலோர கர்நாடகா

ஆர்எஸ்எஸ் ஆழமாக வேரூன்றியுள்ள பகுதி கடலோர கர்நாடகா. பாஜகவின் கோட்டை. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வென்றிருக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.

மத்திய கர்நாடகா

இது பொதுவாக காங்கிரஸுக்கு சாதகமான பகுதி. மொத்தம் 35 தொகுதிகளைக் கொண்ட இங்கு பாஜக 24 தொகுதிகளை வென்றது இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த பின்னடைவுக்கு முக்கியமான காரணம். காங்கிரஸால் 11 தொகுதிகளை மட்டுமே இங்கு வெல்ல முடிந்தது. கடந்த முறையைக் காட்டிலும் பாஜக 20 தொகுதிகளை இங்கு வென்றது ஒரு திருப்புமுனை.

பெங்களூரு பெருநகரம்

கதம்பான பெங்களூருவின் தொகுதிகள் நகர்ப்புற மனப்பான்மையை நேரடியாகப் பிரதிபலிக்கக் கூடியவை. 34 தொகுதிகளுக்கு இங்கு நடந்த தேர்தலில் பாஜக 16 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 11 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 இடங்களிலும் வென்றன.

சிதறிய தலித், முஸ்லிம் ஓட்டுகள்

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 38% வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் வந்திருக்கிறது (78 தொகுதிகள்). பாஜக 36.2 % வாக்குகளுடன் இரண்டாமிடம் பெற்றாலும் 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாகியிருக்கிறது. காங்கிரஸின் தோல்விக்கு முக்கியமான காரணாமாகப் பேசப்படுவது அதன் முக்கிய பலமான தலித்துகள், முஸ்லிம்கள் ஓட்டுகள் சிதறியிருப்பதாகும். மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.4% வாக்குகளுடன் 37 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்கு வந்ததோடு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்திய சேதமும் காங்கிரஸின் தோல்விக்கு முக்கியமான காரணம். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்காவிடில் பாஜகவுக்கு அணை போட முடியாது என்பதே தேர்தல் வெளிப்படுத்தும் முக்கியமான செய்தி.

- இரா.வினோத், தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x