Published : 07 Jun 2024 09:44 AM
Last Updated : 07 Jun 2024 09:44 AM

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு

‘அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

இதே விதமான ஏமாற்றம் பாஜகவுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும்கூட இருக்கலாம். இத்தேர்தலில் அதிகத் தொகுதிகளில் வென்ற கட்சியாக பாஜக நீடித்தாலும், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியொரு ‘திரிசங்கு சொர்க்க நிலை’யைத் தனது ஆளுமையில் அதிக நம்பிக்கை உடைய மோடி நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். ஆனால், மக்கள் மனத்தில் இருப்பது என்ன என்பதை யாரால்தான் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்?

அரசின் பங்களிப்பு: ‘மோடி ஆட்சி அமைத்தால் நாட்டின் பொருளாதார நிலை மிகப் பெரும் அளவில் வளர்ச்சி அடையும். சாலை கட்டமைப்பு மேம்படும். மாநகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும்’ என்பன உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பத்தினரிடம் முன்பு இருந்தன. அவற்றை நிறைவேற்றும் வகையில் மோடி அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் மறுக்க முடியாது.

இதுவரை சாலைப் போக்குவரத்தில் பின்தங்கியிருந்த பல பகுதிகளில் பாலம், சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. நவீன யுகத்தின் தேவைக்கேற்ப ரயில் நிலையங்களையும் வழித்தடங்களையும் மேம்படுத்தும் வேலைகள் நடந்தன.

பல்வேறு மாநிலங்கள் வழியே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க வழிசெய்யும் ‘வந்தே பாரத்’ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது ஓர் உதாரணம்; மோடி அரசின் சாதனைத் திட்டமாக பாஜகவினரால் முன்வைக்கப்படும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் முற்றிலும் இந்தியாவிலேயே, குறிப்பாக, சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ரயில் இது. புத்தாக்கத் துறையில் (start up) தொழில் முனைவோருக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்குவோர், முதல் 3 ஆண்டுகளுக்கு வரி செலுத்தத் தேவை இல்லை. இப்படிப் பல சலுகைகளைத் தொழில் முனைவோர் பெற முடிந்தது. இதுபோன்ற திட்டங்களுக்குப் பிறகும், இந்தத் தேர்தல் பாஜகவுக்குக் கடும் சவாலாகவே இருக்கும் என்றே பலர் கூறி வந்தனர். அவற்றை ‘எதிர்க்கட்சி’களின் குரலாகவே கருதி, பாஜக புறந்தள்ளியது.

வேலைவாய்ப்பின்மையும் தற்கொலைகளும்: பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் தீவிரம் அடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பது 2000இல் 35.2 சதவீதமாக இருந்தது. அது 2022இல் 65.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளின் விகிதம் அமையவில்லை என்பது பல ஆண்டுகளாகவே ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இப்பிரச்சினை எரிமலையாக வெடித்தது. ஓரளவு பண வசதி கொண்டவர்களுக்கே பொதுமுடக்கக் காலம் பெரும் சாபம்போல அமைந்தது. ஆகஸ்ட், 2020இல் டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் நகை விற்பனை செய்துவந்த அர்பித் குப்தா, அங்கித் குப்தா ஆகிய இரண்டு சகோதரர்கள் தற்கொலை செய்துகொண்டது ஓர் உதாரணம்.

தாங்கள் பணப் பிரச்சினையில் உள்ளதாக அவர்கள் கடிதம் எழுதிவைத்திருந்தனர். டெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மேலாளராக இருந்த சலீல் திரிபாதி வேலையிழந்து, உணவு நேரடி விநியோக வேலைபார்க்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு, சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் பொதுமுடக்கக் காலத்தின் ரத்த சாட்சியம்!

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2021இல் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,64,033. இதில் 25.6 சதவீதம் பேர், தினக்கூலி வேலை செய்வோர். 14 சதவீதம் பேர், குடும்பத் தலைவிகள் (housewives). 12.3 சதவீதம் பேர் சொந்தத் தொழில் செய்தோர். 8.4 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு அற்றோர்.

6.6 சதவீதம் பேர் வேளாண்மைத் துறையில் ஈடுபட்டோர். இவற்றில் பெரும்பாலான மரணங்களுக்கு வருவாய் இன்மையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்கிற புரிதல் மத்திய அரசுக்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இருந்திருக்க வேண்டும். கூலி வேலை செய்வோரின் கதறலுக்குக் காதுகொடுத்து பாஜக அரசு உறுதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

விவசாயிகளின் வேதனை: விவசாயிகளின் உரிமைப் போராட்ட வரலாற்றில் பாஜக ஆட்சிக் காலத்துக்கு எனத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட வேண்டிய அளவுக்குப் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. வெங்காயப் பயன்பாட்டுக்கு நாடே மகாராஷ்டிரத்தில் உள்ள லாஸல்கான் சந்தையைச் சார்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், வெங்காய விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

‘தேசிய அளவில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, வெங்காயச் சாகுபடியை இரட்டிப்பாக்குமாறு 2019இல் பிரதமர் மோடி எங்களிடம் கூறினார். அப்போது வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர் சொன்னபடி வெங்காய விளைச்சல் இரட்டிப்பு ஆகியுள்ளது. இப்போது அதை வாங்க ஆள் இல்லை. மத்திய அரசு எங்களுக்கு ஊட்டிவிடவும் வேண்டாம்; எங்களிடமிருந்து பறித்துக்கொள்ளவும் வேண்டாம்’ என அச்சந்தையைச் சார்ந்துள்ள சில விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

தீர்வு: கரோனா பொதுமுடக்கத்தின்போது பாஜக அரசு, சில சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன. அடித்தட்டு மக்கள் வருவாயை இழந்திருந்த சூழலின் கடுமையை இத்தகைய திட்டங்கள் குறைத்தன.

எனினும், காங்கிரஸ் அரசால் 2013 - தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டதன் நீட்சிதான் இத்திட்டம் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரான ஜெயதி கோஷ். மசாசூசெட்ஸ் அம்கெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர், தொடர்ந்து மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் போதாமையை விமர்சித்து வருகிறார்.

“முன்பு ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும் ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும் அளிக்கப்பட்டதை, கரோனா காலத்தில் பாஜக அரசு முற்றிலும் இலவசம் என ஆக்கியது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இதையெல்லாம் ஏழைகளுக்கான பரிசு போன்ற பெருமிதத்துடன் பாஜக அரசு செய்தது.

உணவுப் பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. நாட்டில் 10 கோடி மக்கள், போதுமான உணவைப் பெற முடியாத நிலையில்தான் உள்ளனர். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அளிக்க 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன் உண்மையான நோக்கத்துடன் அத்திட்டம் செயலாக்கம் பெறுவதுடன், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையைக் களைவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும். சிறு, குறு - நடுத்தரத் தொழில் முனைவோர், கடந்த 10 ஆண்டுகளாகக் கவனிக்கப்படாத நிலையில் உள்ளனர். கடனுதவி பெறுதல், தொழில்நுட்ப வசதி பெறுதல் உள்ளிட்ட அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என ஜெயதி கோஷ் அறிவுறுத்துகிறார்.

ஏழைத் தாயின் புதல்வன் எனத் தாம் அறியப்படுவதில் மோடிக்கு மிகுந்த விருப்பம் உண்டு. ஆட்சிப் பொறுப்புக்கு யார் வந்தாலும், ஏழைத் தாயின் புதல்வர்களின் தேவையை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x