Last Updated : 03 Apr, 2018 08:47 AM

 

Published : 03 Apr 2018 08:47 AM
Last Updated : 03 Apr 2018 08:47 AM

ஆகாய ஆம்புலன்ஸ் சேவை இன்னும் அதிகம் தேவை!

கு

ரங்கணி காட்டுத்தீ விபத்தில் கடுமையானத் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் கொண்டுசென்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். இம்மாதிரியான நிகழ்வுகள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகளில் ஏற்படுமானால், ஹெலிகாப்டருக்குப் பதிலாக, ஆகாய ஆம்புலன்ஸையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண ஹெலிகாப்டரில் ஆட்களை மட்டும் சீக்கிரத்தில் ஏற்றிச்செல்ல முடியும். அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க அதில் வழியில்லை. ஆனால், அதுதான் முக்கியம். உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அத்தனை சீக்கிரம் அவர்களின் உயிர் காக்கப்படும். ஆகாய ஆம்புலன்ஸும் ஒரு ஹெலிகாப்டர்தான். ஆனால், இதில் அவசர சிகிச்சைக்குப் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளர் ஆகியோரும் பயனாளியுடன் பயணம் செய்வார்கள். இதில் உயிர் காக்கும் மருந்துகள் இருக்கும்; ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவும் குளுக்கோஸ் சலைன் பாட்டில்கள் இருக்கும்; இதயத் துடிப்பைக் கண்காணிக்க உதவும் இசிஜி கருவி, இதயத் துடிப்பைச் சரிப்படுத்தும் டீஃபிபிரிலேட்டர், சுவாசத்துக்குத் துணைபுரியும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் வெண்டிலேட்டர் என நவீன மருத்துவக் கருவிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். அருகிலுள்ள சிறப்பு மருத்துவமனையில் பயனாளி அனுமதிக்கப்படும்வரை அவருக்குத் தேவைப்படும் அவசர சிகிச்சைகளை அந்த மருத்துவக் குழு தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும். இதன் மூலம் அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

யாருக்கு உதவுகிறது?

தற்போதைய நடைமுறையில், சாலை விபத்துகளிலும், பெரும் தீ விபத்துகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்பு, பக்கவாதம், மூளைத்தண்டுவட நரம்பு தொடர்புடைய ஆபத்தான நோய்களால் அவதிப்படுபவர்கள், எதிர்பாராத விதத்தில் சிக்கல் ஏற்பட்டு பிரசவம் கடுமையாகும் கர்ப்பிணிகள், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளால் உயிருக்குப் போராடும் பச்சிளம் குழந்தைகள் எனப் பலதரப்பட்ட நோயாளிகளை உரிய நேரத்தில் சென்று சேர முடியாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தக் குறையைப் போக்கவே ஆகாய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

உலகப் போர்களின்போது, ராணுவ வீரர்களுக்கு அவசர சிகிச்சை கொடுக்க இடம்விட்டு இடம் செல்ல நேர்ந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர்கள் அவர்களுக்குப் பயன்பட்டன. ஆனால், உலகில் பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் ‘ராயல் ஃபிளையிங் டாக்டர் சர்வீஸ்’ எனும் நிறுவனம் 1928-ல் முறைப்படி இந்தச் சேவையைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது உலக நாடுகள் பலவற்றில் இந்தச் சேவை தாராளமாகக் கிடைக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகள் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளதைப்போல், மேல்நாடுகளில் அரசு, சிறப்பு மருத்துவமனைகள் எல்லாமே ஆகாய ஆம்புலன்ஸ் வைத்துள்ளன. இந்தச் சேவையை அவை சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இது புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும் தனியார் மருத்துவமனைகள் சென்ற ஆண்டில் ஆகாய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கின. தமிழக அரசு இந்தச் சேவையைத் தொடங்குவதற்குப் பரிசீலித்துவருகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கும் உதவுகிறது!

அவசர சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், இதயம், சிறுநீரகம், கண், கல்லீரல், தோல் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, மூளைச்சாவில் இறந்தவரின் உறுப்புகளை உடனடியாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்குப் பொருத்தவும் இந்தச் சேவை மிகவும் உதவியாக இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழிடங்களில் வசிப்போருக்கு இந்தச் சேவை இன்னும் அதிகப் பலன் தருகிறது. உதாரணமாக, ஊட்டியிலிருந்து கோவைக்குச் சாலை வழியில் வரவேண்டுமானால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்; ஆகாய ஆம்புலன்ஸில் பத்தே நிமிடங்களில் வந்துவிடலாம். ஊசிமுனைத் திருப்பங்கள் கொண்ட மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, உடலைக் குலுங்கச் செய்யும் அந்தப் பயணமே பயனாளிக்குப் பல ஆபத்துகளைக் கொண்டுவர வாய்ப்புண்டு.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைப் பராமரிப்பு சரியில்லை என்பது நிதர்சனம். மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தச் சாலைகளில் பயணப்படுவது சாதாரணமானவர்களுக்கே படுசிரமம். உயிருக்குப் போராடிக்கொண்டு பயணம் செய்வோருக்கு கேட்கவே வேண்டாம்!

தமிழகத்தில் தற்போது, மூளைச்சாவில் இறந்த ஒருவரின் இதயத்தையோ, சிறுநீரகத்தையோ தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள நபருக்குப் பொருத்த வேண்டுமானால், ஆம்புலன்ஸ் மூலம் சாலை வழியாகவே கொண்டுசெல்கின்றனர். அப்போது அந்த வாகனம் செல்லும் வழியில் போக்குவரத்தை முற்றிலும் மாற்றியமைத்தால் மட்டும் அல்லது தற்காலிகமாக நிறுத்தினால் மட்டுமே சரியான நேரத்துக்குள் இதயத்தை/சிறுநீரகத்தைக் கொண்டுசேர்க்க முடியும். இவ்வாறு இதயம் உள்ளிட்ட உயிர் காக்கும் உடல் உறுப்புகளைச் சாலைவழியாகக் கொண்டுசெல்வதைக் காட்டிலும், ஆகாயம் வழியாகக் கொண்டுசெல்வதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களையும் தவிர்க்கலாம். மேலும், உடல் உறுப்புகளை சாலை வழியாகக் கொண்டுசெல்லும்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டுசேர்க்க முடியவில்லை என்றால், அந்த உறுப்புகள் வீணாகிப்போகவும் வாய்ப்புண்டு. இந்தக் குறையையும் ஆகாய ஆம்புலன்ஸ் சேவையில் போக்கிவிடலாம். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தாகும் நேரங்களில், அவசர சிகிச்சைத் தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையாக ஆகாய ஆம்புலன்ஸ் சேவை கருதப்படுகிறது.

மாவட்டந்தோறும் ஹெலி-பேடு

தற்போது சென்னையிலும் கோவையிலும் ஆகாய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துவர மாவட்டத் தலைமை இடங்களில் ஹெலி-பேடு இல்லை. அப்படியே இருந்தாலும் அது தனியாருக்குச் சொந்தமான இடத்தில்தான் இருக்கிறது.

தமிழக அரசு ஆகாய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குவது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறது எனச் சுகாதாரத் துறைச் செயலர் தனியார் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கிவைத்தபோது தெரிவித்தார். அப்படித் தொடங்குவதற்கு முன்பு, மாவட்டந்தோறும் அதிநவீன ஹெலி-பேடுகளை அரசே அமைத்துத்தர வேண்டியது முக்கியம். அப்போதுதான் அருகிலுள்ள சிறப்பு மருத்துவமனைகளும் ஆகாய ஆம்புலன்ஸ் சேவையில் இணைந்துகொள்ள முன்வரும். மேலும், இந்த மருத்துவமனைகள் மாவட்டத் தலைமையிடங்களில் அமைக்கப்படும் ஹெலி-பேடுகளில் தங்கள் ஆகாய ஆம்புலன்ஸ்களை நிரந்தரமாக நிறுத்திவைக்கவும் வாய்ப்புண்டு. அதன்மூலம் அரசுக்கு வாடகை வருமானம் கிடைக்கவும் வழியுண்டு. அடுத்ததாக, பெருநகரங்களில் உள்ள தனியார் சிறப்பு மருத்துவமனைகள் ஹெலி-பேடு அமைக்கப்பட்டுள்ள நகரங்களில் அவசர சிகிச்சைக்கான உதவி மையங்களை ஏற்படுத்தக்கூடும். மனித உயிரிழப்புகள் இதனால் குறையும்.

காப்பீட்டிலும் இணைக்க வேண்டும்!

உயிர்காக்கும் சிகிச்சை கிடைப்பதில் ஏழை, பணக்காரர் எனும் வேறுபாடு இருக்கக் கூடாது. ஆகாய ஆம்புலன்ஸ் சேவைக்கு அதிகம் செலவாகும். அதைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவும் வழிசெய்ய வேண்டும். அப்போதுதான் சாமானிய இந்தியருக்கும் பலன் தரும் திட்டமாக இது அமையும்.

‘ஆகாய ஆம்புலன்ஸ் இருக்கட்டும், சாலையில் செல்லும் 108 எண் அரசு ஆம்புலன்ஸ்களைச் சரியாகப் பாராமரித்துவந்தாலே, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்’ எனப் பொதுஜனம் முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது!

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x