Last Updated : 21 Aug, 2014 08:22 AM

 

Published : 21 Aug 2014 08:22 AM
Last Updated : 21 Aug 2014 08:22 AM

இதயங்களைத் துளைக்கும் 14 வருடப் போராட்டம்

‘ஏழு சகோதரிகள்’ என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். அதன் தலைநகரம் இம்பால். சென்னையிலிருந்து மணிப்பூர் செல்ல கொல்கத்தாவை அடைந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்றடைவது எளிது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் அம்மாநிலத்தை நேரில் காணச் செல்ல நேரிட்டது. கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்குச் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பலதரப்பினரும் பயணித்தனர். அதில் அரசில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களும் அடக்கம். விமானத்திற்கான பயணச் செலவில் பாதியை அரசு உதவித்தொகையாக வழங்குவதால் கட்டணச் சலுகை உண்டு. ரயில்வண்டி மூலமாக கொல்கத்தாவிலிருந்து பயணிப்போர் இம்பால் சென்று சேர மூன்று நாட்களாகும் என்பதால் இந்த ஏற்பாடு.

இப்பகுதியில் விமான சேவை என்பது மிகவும் மோசமானது. முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் குறிப்பிட்டதுபோல் கால்நடை கொட்டகை மாதிரி விமானம் இருந்தது. இம்பால் நகரில் விமானம் தரையிறங்கியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தவிர வேறொருவரும் இல்லை. விமான நிலையத்தை விட்டு வெளிவந்தவுடன் எதிரேயிருந்த சுவரில் காணப்பட்ட வாசகங்களோ அதிர்ச்சியிலும் அதிர்ச்சி தந்தது. அவ்வாசகம்: இந்திய நாய்களே வெளியேறு.

முதன்முறையாக வெளிநாடு ஒன்றில் தரையிற க்கப்பட்டது போல தோன்றியது. இரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே 25 அடிக்கு ஒருவர் என்று மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களின் பாதுகாப்பு. தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் ராணுவத்தின் அனுமதி என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன.

சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டப்படும் சம்பிரதாய இடங்களாக பெண்களே நிர்வகிக்கும் ஒரு சந்தை, கோவிந்தாஜி என்றழைக்கப்படும் பெருமாள் கோயில் ஆகியவை காட்டப்பட்டன. ‘காங்லா’, மணிப்பூரின் 17-ம் நூற்றாண்டு அரண்மனை. மெய்ட்டி மொழியில் ‘காங்லா' என்ற பெயருக்கு ‘வறண்ட இடம்' என்று பொருளாகும். அதைக்கூட 2004-ம் வருடம் வரை அசாம் ரைபிள்ஸ் என்ற மத்திய அரசின் படை ஆக்கிரமித்திருந்தது.

மணிப்பூர், காங்கிலிபேக் மற்றும் மீடிலிபேக் என்ற பெயர்களிலும் அழைக் கப்படுகிறது. வடக்கில் நாகாலாந்து, தெற்கில் மிசோரம், மேற்கில் அசாம் மற்றும் கிழக்கில் பர்மா என எல்லைகள் கொண்ட அதன் விஸ்தீரணம் 22.327 சதுர கிலோமீட்டர். மீடாயி, குக்கி, நாகா, பங்கல், குர்காலி, பிஷ்ணுப்ரியா, மணிப்பூரி போன்ற பல மொழிகள் அங்கு பேசப்படுகின்றன.

மணிப்பூர் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1930-களின் கடைசியில், மணிப்பூர் சமஸ்தானத்தை பிரிட் டிஷ் இந்தியாவின் பகுதியாக்க வேண்டு மென்று பிரிட்டிஷார் விரும்பினர். அதற் கான பேச்சுவார்த்தைகள் பர்மாவில் (மியான்மர்) நடைபெற்றன. உலகப் போர் முடிந்து இந்திய விடுதலைக்குப்பின் 21-9-1949ல், அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையொட்டி மக்களின் கருத்தை அறியாமலும், வற்புறுத்தலின் பேரிலும் மணிப்பூர் இணைக்கப்பட்டதாக கூறி பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின.

விடுதலை மண்ணில் அந்நிய சட்டம்

1942 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. காங்கிரஸ் பேரியக்கம் ‘வெள்ளை யனே வெளியேறு’ என்னும் இயக்கத்தை நடத்தியது. அப்போராட்டத்திற்கு கிடைத்த பெரும் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு, ஒரு சட்டத்தை ‘ஆயுதப்படைகள் (சிறப்பதிகார) சட்டம்’ என்ற பெயரில் இயற்றியது. அதன்படி யாராவது ஒருவரை போராட்டக்காரர் என்று ஆயுதப்படையினர் சந்தேகித்தால், உடனே அவரைச் சுட்டுத்தள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அநேகம் பேர் கொல்லப்பட்டனர்.

அச்சட்டத்தை ஒரு வார்த்தைக் கூட மாற்றாமல் அப்படியே 1958 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய அரசு மீண்டும் இயற்றியது. அப்போதைய உள்துறை அமைச்சர், சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, இச்சட்டம் ஆறு மாதத்திற்கு மட்டும்தான் அமலில் இருக்குமென்றும், பின்னர் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித் தார். இச்சட்டம் ஐம்பத்தி ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. துரதிஷ்டவசமாக இச்சட்டத்தை ரத்து செய்ய நாகா மக்கள் இயக்கம் போட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது (1997).

மத்திய அரசு இச்சட்டத்தை எந்த மாநிலத்திலும் எப்போது வேண்டு மானாலும் அமல்படுத்தலாம். இச் சட்டத்தின்படி ஆயுதப்படையினர் யாரை சந்தேகிக்கிறார்களோ அவரை கைது செய்யலாம், விசாரிக்கலாம்... ஏன் கொல்லக் கூட செய்யலாம்! தேடு தலுக்கான அதிகாரமும், சந்தேகத்தின் பேரில் பொருட்களை அழிக்கவும், காணாமல் போகச்செய்யவும் ஆயுதப் படையினருக்கு இச்சட்டம் அதிகாரங் களை வழங்குகின்றது.

சிறையானது மருத்துவமனை

எங்கெல்லாம் இச்சட்டம் அமலில் இருக்கின்றதோ, அங்கெல்லாம் ஆயுதப் படையினர் கேள்விகளில்லா அதிகாரத் தால் நீதிக்குப் புறம்பாக மக்களைக் கொல்வது, காணாமல் போகச் செய் வது, சித்திரவதை செய்வது, பாலியல் வன்புணர்வு செய்வது, முறையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இந்த சட்டத்தால் முறைகேடாக நடந்துகொண்டதற்காக எந்த ஆயுதப் படையினரையும் தண்டிக்க முடியா தென்பது குறிப்பிடத்தக்கது.

2000 ம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமானநிலையம் அருகே நடந்த என்கவுண்ட்டரில் 10 பேரை ஆயுதப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஆயுதப்படை வீரர்களுக்கான (சிறப்பதிகாரம்) சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், அந்த ஆண்டிலிருந்து சமூக சேவகியான இரோம் சானு சர்மிளா(வயது 42) தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால், அவர் போராட்டத்தை முறி யடிக்க அவருக்குண்டான உணவை நாசித்துவாரத்தின் மூலம் செலுத்த தொடங்கினர். அவர் மீது மணிப்பூர் காவல்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருப்ப தால் அவரது மருத்துவமனை பிரிவையே காவல்துறையினர் அவருக்கான சிறையாக மாற்றிவிட்டனர்.

2004ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி தங்ஜம் மனோரமா என்ற பழங்குடிப் பெண்ணின் பாலியல் கொடுங்கொலைக்குப் பின், 28.4.2013 அன்று ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ மணிப்பூருக்கு நேரில் சென்று மனோரமாவின் தாயாரை விசாரித்தார். நான்கு சுவர்களுக்குள் நடந்த அப்பேட்டிக்குப் பின்னர் வெளியே வந்த ஐ.நா. தூதர் கண்ணீர் விட்டு அழுததை ஊடகங்கள் சந்தித்தன.

15.7.2004 அன்று மணிப்பூர் பெண்கள் சிலர் அசாமில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் முன்பு தங்களை நிர் வாணப்படுத்திக் கொண்டு ‘இந்திய ராணுவமே எங்களைக் கற்பழித்துக் கொல்’ என்னும் அதிர்ச்சிகரமான முழக்கத்துடன் பதாகை தாங்கி நின்றது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர்தான் இந்திய ஊடகங்கள் மணிப்பூர் மக்களின் போராட்டங்களை செய்திகளாக வெளியிட ஆரம்பித்தன.

இதற்கிடையில் போராட்டங்களின் தீவிரத் தன்மையை உணர்ந்த மத்திய அரசு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஆயுதப்படைகள் சிறப்பதிகார சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உத்திரவிட்டது. அக்குழு தனது அறிக்கையில் (2007) அச் சட்டத்தை முற்றிலும் திரும்பப் பெறப் பரிந்துரைத்தது. பல்வேறு விசாரணைக் குழுக்களின் சிபாரிசுகள் போலவே அக்குழுவின் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு அச்சட்டத்தை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் அமல்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று கொடியேற்றி முதன்முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி தனது உரையில் “நாட்டில் சமீப காலமாக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் நாட்டை தலைகுனியச் செய்துள்ளன. இவ்வாறான சமூக சீர்கேடுகள் இடம்பெறும் இடத்தில் சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்” என்று கர்ஜனை செய்தாலும், மணிப்பூரில் ஆயுதப்படைகள் இழைக் கும் அட்டூழியங்களைப் பற்றி மௌனித்த தோடு, வடகிழக்கு மாநில மக்களைப் பற்றிய அவரது அரசின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் ஏதும் கூறவில்லை. வடகிழக்கு இந்தியாவைப் பற்றிய அணுகுமுறையில் முன்னாள்/இந்நாள் அரசுகளுக்கு வேறுபாடு ஏதுமில்லை.

தன்னை விடுதலை செய்யுமாறு இம்பால் (கிழக்கு) அமர்வு நீதிமன்றத்தில் இரோம் சர்மிளா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குணேஷ்வர் சர்மா, அவர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி அவரை விடுதலை செய்து உத்தர விட்டுள்ளார். மேலும், சர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவரது உயிரை பாதுகாக்கும் பொருட்டு நாசித்துவாரத்தின் வழியாக அவருக்கு கட்டாயமாக உணவை செலுத்த மாநில அரசு உரிய நட வடிக்கை எடுக்கலாமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தன்னுடைய ஒரே கோரிக்கை ஆயுதப் படைகளின் சிறப்பதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதுதான் என்றும், அதுவரை தான் தொடர்ந்து உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் ஆரம்பத்திலிருந்து கூறிவரும் இரோம் சர்மிளா தன்னுடைய போராட் டத்தை விடப்போவதுமில்லை, மணிப் பூர் காவல்துறையினர் அவர் மீது தற்கொலைக்கு முயற்சித்ததான வழக்கு களை பதிவு செய்வதை நிறுத்தப் போவதுமில்லை என்பதே நிலைமை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முற்றுப்பெற்ற தற்கொலைக்கு தண்டனையேதுமில்லை. ஆனால் தற்கொலை முயற்சி என்பது பிரிவு 309-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக் கப்பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமென்று அறிவிக்க, ரத்தினம் என்ற சென்னை வழக்கறிஞர் போட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அச்சட்டப்பிரிவை ரத்து செய்தது(1994). இரண்டே ஆண்டுகளில் வேறொரு உச்சநீதிமன்ற அமர்வு அச்சட்டப்பிரிவு சட்டப்படி செல்லுமென்று கியான் கௌர் என்ற வழக்கில் அறிவித்தது(1996). அதிர்ஷ்டவசமாக சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அச்சட்டப்பிரிவின் செல்லும் தன்மையை ஆராய முன்வந்துள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றம் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியை கிரிமினல் குற்றமாக்க முடியாதென்று அறிவித்துவிட்டால், மணிப்பூர் காவல் துறையினருக்கு வழக்குகள் போடுவ திலிருந்து ‘விடுதலை’ கிடைக்கலாம். ஆனால் ஆயுதப்படைகள் (சிறப்பதிகார) சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முன்வராதவரை, இரோம் சர்மிளாவின் தொடர் போராட்டம் இந்திய மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பிக் கொண்டேயிருக்கும்!

- கே. சந்துரு, முன்னாள் நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x