Last Updated : 26 Apr, 2018 09:15 AM

 

Published : 26 Apr 2018 09:15 AM
Last Updated : 26 Apr 2018 09:15 AM

நிர்மலா தேவி விவகாரம்: காலம் தாழ்ந்த விழிப்பு?

ல்லா நிகழ்வுகளிலும், முதற்கோணலானது சீர்செய்யப்படாமல் முற்றும் கோணலாகிக்கொண்டிருக்கிறது. முதற்கோணலைப் பார்க்கத் தவறியும்விடுகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சியில் உட்கார்ந்து கோலோச்சுகையில், குற்றங்கள் தங்கள் பங்குக்குத் தலைவிரித்தாடுகின்றன!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் முறைகேடானது என்ற மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, அக்டோபர் 2017-ல் வாதி-பிரதிவாதி விவாதங்கள் முடிந்த பிறகு, ஆறு மாதங்களாகத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. அதைப் போலவே, ‘காமராசர் பல்கலைக்கழகத்தைக் காப்போம்’ (‘சேவ் எம்.கே.யு’) அமைப்பின் அமைப்பாளர் பேராசிரியர் அ.சீனிவாசன், நடைப்பயிற்சியின்போது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு. 16.05.2014 காலை நடைப்பயிற்சிக்குப் போகையில், அடியாட்களை வைத்து பேராசிரியர் அ.சீனிவாசனின் கைகளை முறித்த வழக்கில், செல்லத்துரையின் பெயர் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது.

மறைந்து கிடக்கும் பூதங்கள்

இப்போது இன்னொரு புது வழக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக அலுவலகத்தை வளைய வந்தபடி, அதன் வாசற்கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது. அது, பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்காக மாணவிகளைத் தவறான உறவுக்கு அழைக்கும் விதமாக, அருப்புக்கோட்டை கல்லூரியின் கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசியது தொடர்பான வழக்கு. தனக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கும் இருக்கும் நெருக்கத்தை, அதன் மூலம் அடையவிருக்கும் ஆதாயத்தை இந்த உரையாடலில் உணர்த்தியிருந்தார் நிர்மலா தேவி.

இந்தப் பிரச்சினையால், பெண்களை உயர் கல்விக்கு அனுப்ப விரும்புகிற சாதாரண பெற்றோர்களும், கல்வியில் நேர்மையையும் தூய்மையையும் விரும்புகிற ஆசிரியர்களும்தான் செய்வதறியாது தவித்துக் கிடக்கின்றனர். குறைந்தபட்சமாக, கடந்த ஓராண்டில் மட்டுமாவது, பல்கலைக்கழகங்கள் சார்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போடப்பட்ட அனைத்துப் பணி நியமனங்களையும் பதவி உயர்வுகளையும் ஆய்வுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தினால், பாதாளம் வரை பாய்ந்திருக்கிற பல பகீரதப் பூதங்கள் வெளிவரும்.

இதன் முன்கதை, இப்படி இருக்கிறது: ‘மதுரை காமராசர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் கடந்த பத்து ஆண்டுகள் கொண்டிருந்த பல்வேறு வகைத் தொடர்புகளின் நீட்சியாக, பேராசிரியர் முனைவர் நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு 2018-ல், மூன்று முறை வந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி மாதக் கடைசியில் தொலைநிலைக் கல்விப் பிரிவுத் தேர்வுத்தாள்களைத் திருத்த வந்துள்ளார். அதன் பின்னர், இரண்டாவது முறையாக 09.03.2018 முதல் 29.03.2018 வரை, 21 நாட்கள் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி வகுப்பில், தேவாங்கர் கல்லூரியின் சார்பில் கலந்துகொண்டார். பயிற்சி வகுப்பின், அந்த வார முடிவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்துதான், 15.03.2018 வியாழக்கிழமையன்று, தன் மாணவியரிடம் செல்பேசியில் பேசியிருக்கிறார். 18.03.2018 ஞாயிற்றுக்கிழமைக்குள் மாணவிகள் நன்கு யோசித்து தங்கள் முடிவுகளைச் சொல்லச் சொல்கிறார்.

மாணவிகளின் புகார்

‘வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம்; ரகசியம் காக்கப்பட வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டாலும், அந்த உரையாடலைத் திட்டமிட்டுப் பதிவுசெய்த மாணவியர், பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி மேல் நடவடிக்கை எடுக்கக் கூறி, 19.03.2018 அன்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் எழுத்துவழி அவர்கள் முறையிட்டிருக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தை யார் கைப்பற்றுவது என்கிற மும்முனைப் போட்டியில் இதுவும் கையாளப்பட்டிருக்கலாம் என்கிற தனிக் கதையும் கிளைக் கதையாய்ப் போகிறது. ஆனால், கடிதத்தை யார் எழுதியது என்று நிர்வாகம் கணித வகுப்பு மாணவியரை மிரட்டியபோது, ஒட்டுமொத்த மாணவியரும் ஒற்றைக் குரலில் ‘நாங்கள்தான்’ என்று உரத்துச் சொன்னதாகச் சொல்லப்படும் சம்பவம், மாணவியர் மீது மரியாதையை வரவழைக்கக்கூடியது!

மாணவிகளின் குற்றச்சாட்டின் அடிப்படையில், புத்தாக்கப் பயிற்சி வகுப்பின் 13-வது நாளில் 21.03.2018 அன்றே பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி கல்லூரிக்குத் திரும்ப வரவழைக்கப்பட்டார். மூன்று மூத்த பேராசிரியர்களின் விசாரணைக்குப் பின், தேவாங்கர் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலரால், அதேநாளில் முனைவர் நிர்மலா தேவி இடைநீக்கம் செய்யப்படுகிறார். அதன் நகல், உயர்கல்வித் துறைச் செயலருக்கும், கல்லூரிக் கல்வித் துறைக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் பின்னும், மார்ச் இறுதியில் பல்கலைக்கழகம் வந்து விருந்தினர் இல்லத்தில் தங்கிச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 24 நாட்களுக்குப் பிறகு, 14.04.2018-ல் இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்ததன் காரணமாக, கல்லூரி மாணவ-மாணவியரின் போராட்டத்துக்குப் பின், நிர்மலா தேவி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, 16.04.2018 அன்று கல்லூரி நிர்வாகத்தால், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 17.04.2018-ல் பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நடவடிக்கைகளும் நம்பிக்கையும்

12 நாட்கள் மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கும் திடீரென்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் 20.04.2018 அன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சிபிசிஐடி தலைவர் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் கூடுதல் டி.ஜி.பி.யாக அம்ஜேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டிருப்பதும் இதற்குத் தொடர்பேயில்லாதது என்றே நம்புவோம்!

இந்நிலையில், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சந்தானத்தின் ஒரு நபர் உயர்மட்ட விசாரணை, ஆளுநரால் அவசர அவசரமாக 16.04.2018-ல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் அவருக்கு உதவுவதற்காக, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கமலியும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மண்ணியல் மற்றும் சூழலியல் துறைப் பேராசிரியர் தியாகேசுவரியும் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரின் விசாரணையானது, ‘பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மட்டுமே இருக்கும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. 19.04.2018-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அதன் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான முதல் இரண்டு வழக்குகள் போலல்லாமல், இந்த வழக்கின் விசாரணை அறிக்கை உரிய காலத்தில், அதாவது 15 நாட்களுக்குள், நியாயமாக வெளிவரும் என்று நம்புவோம்!

- மு.இராமசுவாமி, பேராசிரியர்.

தொடர்புக்கு: dramaswamy.mu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x