Last Updated : 28 Aug, 2014 08:36 AM

 

Published : 28 Aug 2014 08:36 AM
Last Updated : 28 Aug 2014 08:36 AM

கடவுள் மீது கொண்ட அன்பால்...

அன்னை தெரசாவின் ஒளி ஆதரவற்றோருக்காக எப்போதும் வீசிக்கொண்டிருக்கும்.

அன்னை தெரசாவின் ஆசிரமத்தில், குசும் என்ற அந்தச் சிறுமியை நான் பார்த்தபோது அவளுக்கு வயது ஆறு. எங்களுடைய வீடு ஆசிரமத்துக்கு அருகில் இருந்ததால் அடிக்கடி அந்த இல்லத்துக்குச் செல்வேன். குசும் எப்போதும் என்னைப் புன்னகையுடன் வரவேற்பாள். அவளால் சுயமாக எழுந்து நிற்க முடியாதபடிக்குக் கால்கள் செயலிழந்திருந்தன. ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ்' என்ற அந்த அமைப்பின் அருள் சகோதரிகள்தான் அவளுக்குக் கையாகவும் காலாகவும் திகழ்ந்தார்கள். தினமும் காலையில் அவளை அழைத்துச் சென்று காலைக்கடன்களைக் கழிக்க உதவி, பிறகு பல் தேய்த்துவிட்டு, குளிப்பாட்டி, துவைத்த ஆடைகளை அணிவித்து, உணவு ஊட்டி, வேளைக்கு மருந்து கொடுத்துப் பார்த்துக்கொண்டார்கள். அத்துடன் எப்போதெல்லாம் அவள் இயற்கையின் உபாதைகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருந்ததோ அப்போதெல்லாம் முகம் சுளிக்காமல் ஒருவர் மாற்றி ஒருவர் அவளைத் தாங்கிப் பிடித்தோ தூக்கிச் சென்றோ உதவிவந்தார்கள். என்னைப் பார்த்தால் மிகவும் முயற்சி செய்த பிறகே, அவளால் ‘ஹலோ' என்று சொல்ல முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவள் என்னைப் பார்த்து ‘ஹலோ அங்கிள்' என்று இன்னொரு வார்த்தை சேர்த்துச் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கொல்கத்தாவின் நெரிசலான இரண்டு வீதிகள் சந்திக்கும் ஓரிடத்தில் மழையில் நனைந்தபடியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்த குசுமைக் கண்டெடுத்து ஆசிரமத்துக்குக் கூட்டிவந்தார்கள். அவளைப் பரிசோதித்த ஒன்றுக்கும் மேற்பட்ட எலும்புமுறிவு மருத்துவ நிபுணர்கள், அவளுடைய கால்கள் விபத்தில் ஒடிந்திருக்க வேண்டும் அல்லது பிச்சை எடுப்பதற்காக வேண்டுமென்றே ஒடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். “உன் கால்களை ஒடித்து உன்னைப் பிச்சை எடுக்க வைத்தது யார்?” என்று கேட்டால் குசும் பதில் சொல்ல முடியாமல் பொங்கிப்பொங்கி அழுவாள். இந்தக் கேள்வியைக் கேட்கும்போது மட்டும்தான் அழுவாள், மற்ற சமயங்களில் புன்னகையோடுதான் இருப்பாள்.

நகரச் சாலைகளில் சிக்னலுக்காக காரில் அல்லது பைக்கில் காத்துக்கொண்டிருக்கும்போது, நம்மிடம் பிச்சை கேட்க வரும் சிறுவர், சிறுமியரைப் போலத்தான் குசும். இப்படிப் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்தாலே அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக்கொள்வோம் அல்லது “இவர்களையெல்லாம் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்காமல் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?” என்று கோபத்துடன் முனகுவோம். குழந்தைகள் அருகில் வந்து மேலும் நச்சரித்தால் கோபத்தால் எரிந்துவிழுவோம். குற்றவுணர்வு உள்ளவர்கள் ஏதும் பேசாமல் இருப்பார்கள். தயை உள்ளவர்கள் எட்டணாவையோ, ஒரு ரூபாயையோ உடனே வீசி எறிவார்கள். ஆனால், வேறு எந்த வகையிலும் அந்தக் குழந்தைகளுக்கு உதவத் தோன்றாது. தனிநபராக என்ன செய்துவிட முடியும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டுவிடுவோம்.

காலம் முழுக்கக் கவனிப்பு

வீதிகளில் தவிக்கும் சிறார்கள், ஆதரவற்ற பெண்கள், நோயில் வீழ்ந்துவிட்டவர்கள், புறக்கணிக்கப் பட்ட முதியவர்கள் என்று சமூகம் சுமையாகக் கருதும் மனிதர்களைத் தேடி அன்னை தெரசாவின் ஆசிரமத் தொண்டர்கள் வீதிகளிலும் சேரிகளிலும் குப்பைக்கூளங்கள், சாக்கடைகள் நிரம்பிய ஒதுக்குப் புறங்களிலும் அன்றாடம் நடக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டதும் ஆசிரமத்துக்கு அழைத்துவந்து தூய்மைப்படுத்திப் புதிய ஆடைகளைக் கொடுத்து, மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அளித்து, ஆசிரமத்தில் தங்கவைக்கின்றனர். சுமார் 136 நாடுகளில் இந்தச் சேவைகளைச் செய்கின்றனர். வீடற்றவர்களை மீட்டுவந்து, ஆசிரமத்தையே இல்லமாக்குகின்றனர். பசித்தவர்களுக்கு சோறு தருகின்றனர். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். தொழுநோயாளிகளின் புண்களைக் கழுவி மருந்துபோட்டு, மாத்திரை கொடுக்கின்றனர். குசும் போன்ற குழந்தைகள் சமூக விரோதிகளின் கொடுங்கரங்களில் சிக்காமல் அவர்களை மீட்டு, அவர்களுக்கு அன்பையும் பராமரிப்பையும் அளிக்கின்றனர். இந்தச் சேவைக்காகத் தங்களுக்கு ஊதியத்தையோ பாராட்டுகளையோ எதிர்பார்ப்பதில்லை.

அன்னைக்குப் பின்னால்…

அன்னையின் ஆசிரமத்துடன் எனக்கு 23 ஆண்டு களாகத் தொடர்ந்து பழக்கம். அவருடைய அமைப்பில் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் பராமரிப்பு மையம், ஏழைகளுக்கு உணவளிக்கும் கூடங்கள், பள்ளிக்கூடங்கள், மரணத் தறுவாயில் இருப்போருக்கான புகலிடங்கள் என்று 600-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நாடு முழுக்க விரிவடைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்னையின் மறைவுக்குப் பிறகு, இந்த இல்லங்களின் எதிர்காலம் என்னவாகும், யார் எடுத்து நடத்துவார்கள் என்றெல்லாம் கவலைப்பட்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவன் என்ற முறையில் இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டிருக்கிறேன்.

“நான் இல்லாமலேயே நூற்றுக் கணக்கான இடங்களில் இந்த வேலை இப்போது நடக்கும்போது, எதிர்காலத்திலும் ஏன் தொடராது?” என்று அன்னை கேட்டார். “ஏழைகளுக்கு மட்டும்தான் சேவை என்ற நாலாவது சபதத்திலிருந்து எங்கள் அமைப்பு விலகாதவரை, இந்த அமைப்பின் பணிகள் தொய்வடையாது” என்றார். அதாவது, இந்த அமைப்பு நடுத்தர வர்க்கத்துக்கும் பணக்காரர்களுக்கும் சேவை செய்யாதவரை இப்படியேதான் நீடிக்கும் என்றார்.

1997-ல் அன்னை மரணமடைந்த பிறகும் இந்த அமைப்பு எப்படித் தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் என்னிடம் இப்போது கேட்கின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த அருள் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் கடவுளிடம் இருக்கும் பற்றும் சேவையில் இருக்கும் ஈடுபாடும்தான் இதற்குக் காரணம் என்று பதில் அளித்துவருகிறேன்.

“உங்களால் உங்கள் குடும்பத்தாரை அன்போடு கவனித்துக்கொள்ள முடியும்; என்னால் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் கவனித்துக்கொள்ள முடியும். நான் அவர்களையெல்லாம் கடவுளாகவே பார்க்கிறேன்” என்று அன்னை தெரசா ஒருமுறை கூறினார்.

பணக்காரப் பெண் ஒருவர் அன்னையைப் பார்க்க ஆசிரமத்துக்கு வந்தார். அன்னை ஒரு தொழு நோயாளியின் புண்களைக் கழுவி, பஞ்சால் துடைத்து மருந்து போட்டுக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததுமே முகம் சுளித்த அந்தப் பணக்காரப் பெண், “உலகத்தில் உள்ள எல்லாப் பணத்தையும் கொடுப்பதாக இருந் தால்கூட என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது” என்று அருவருப்பு பொங்கக் கூறினார். அன்னையும் சிரித்துக்கொண்டே, “என்னாலும்தான் முடியாது. ஆனால், நான் கடவுள் மீது கொண்ட அன்பால் இதைச் செய்கிறேன்” என்று அவருக்குப் பதில் அளித்தார்.

பொதுச் சேவையில் உள்ளவர்களுக்கு…

அரசுப் பணியில் 41 ஆண்டுகள் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். உலகெங்கும் இருக்கும் அதிகார வர்க்கத்தினரும் திட்டமிடுவோரும் ஏழைகளின் நிலைமை என்ன, அவர்களைக் கைதூக்கி விடுவதற் கான வழிகள் என்ன என்ற சிந்தனையே இல்லாமல் விலகி நிற்கின்றனர். வறுமைக் கோட்டுக்கு எவ்வளவு ரூபாயைத் தினக்கூலியாக நிர்ணயம் செய்யலாம் என்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம். நாம் வகுக்கும் திட்டங்களும் நாம் நிறைவேற்றிய திட்டங்களும் மக்களுக்குப் பயன்பட்டனவா, ஏழ்மையை ஒழித்து விட்டனவா என்று உளமாரப் பார்ப்பதே இல்லை.

இந்த விஷயத்தில், சுவாமி விவேகானந்தர் தொடங்கி வைத்த ராமகிருஷ்ண மிஷன், பாபா ஆம்தேவின் சேவை அமைப்புகள், அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' ஆகிய அமைப்புகளிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பொதுச் சேவை என்பதைத் தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். இந்த அமைப்பினர் இதற்காக ஊதியம் எதையும் பெறுவதில்லை. நமக்கோ அரசு ஊதியம் அளிக்கிறது. அப்படி நாம் உழைக்காததால்தான் உலக அரங்கில் மனித ஆற்றல் வளர்ச்சியில் நாம் கீழிடத்தில் இருக்கிறோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் குசும் உடல்நிலை மிகவும் மோசமானது. சகோதரிகள் அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். தன்னுடைய 18-வது வயதில் குசும் இந்த உலக வாழ்வை நீத்து, இறைவனிடத்தில் அமைதியடைந்தாள். பிறந்த முதல் ஆறு ஆண்டுகள் இந்தச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, புண்படுத்தப் பட்ட அவள், அடுத்த 12 ஆண்டுகள் அருள் சகோதரிகளின் அரவணைப்பில், அன்பில், பராமரிப்பில் இன்புற்று இருந்தாள். இந்த ஆசிரமத்தின் வரலாற்றில் அவள் சிறு அத்தியாயம்.

- நவீன் சாவ்லா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர்.

- தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x