Published : 28 Apr 2018 08:43 AM
Last Updated : 28 Apr 2018 08:43 AM

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்துக்கு வழிகாட்டும் ‘பராக்’!

கோ

டை விடுமுறை என்பது மாணவர்களுக்குப் பயனுள்ள விதமாக அமைய வேண்டும், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பேசிவருகிறோம். மகாராஷ்டிரத்தில் இதைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது டாடா அறக்கட்டளையைச் சேர்ந்த ‘பராக்’ அமைப்பு. இதன்படி, சதாரா மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் வருகிற கோடை விடுமுறையில் கதைசொல்லிகளாகவும் நூலகர்களாகவும் மாறவிருக்கிறார்கள். அவர்கள் குழுக்களாக அமர்ந்து கதைகளை வாய்விட்டு வாசிக்கப்போகிறார்கள். பள்ளிக் குழந்தைகளின் கோடை விடுமுறையை வாசிப்பு இயக்கமாக மாற்றியிருக்கும் இந்த முன்னெடுப்பு, நாட்டுக்கே ஒரு முன்னுதாரணம் எனலாம்.

பொதுவாக, பள்ளிக் குழந்தைகளின் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க உதவும் கதைசொல்லலும் புத்தக வாசிப்பும் பெரும்பாலான பள்ளிகளில் தவிர்க்கப்படுகிறது. கல்வி சார்ந்து வாசிப்பது மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சொந்தமாக நூலகங்களைக் கொண்ட பள்ளிகள்கூட பாடத்திட்டங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார்கள். இந்நிலையில், சதாரா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், இப்படிப்பட்ட போக்கை மாற்றும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அம்மாவட்டத்தின் 150 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுகிறது பராக் அமைப்பு. ஒவ்வொரு பள்ளிகளிலும் கிராமவாரியாக ஒரு தன்னார்வ ஊழியரோ அல்லது புத்தகங்களில் ஆர்வமுள்ள, வாசிப்பின் மூலம் ஏற்கெனவே பயிற்சிபெற்றிருக்கும் நூலகரோ பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பள்ளிகளில் அனுதினப் பாட அட்டவணையிலேயே வாசிப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்றும் வாசிக்கலாம். விடுமுறை காலத்தில் கிட்டத்தட்ட 250 புத்தகங்கள் நிறைக்கப்பட்ட பெட்டிகளைக் கிராமத் தன்னார்வ ஊழியர்களின் வீட்டுக்கு அல்லது சமூகக் கூடங்களுக்கோ அனுப்பப்படும்.

இதில் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. தேர்வில் தோற்றுவிடுவோம், புத்தகத்தைத் தொலைத்துவிடுவோம் என்று குழந்தைகளிடம் தயக்கம் இருக்கிறது. இதைக் களைவதிலும் இந்தத் திட்டத்தில் அக்கறை காட்டப்படுகிறது. முதலாவதாக, இந்தப் புத்தகங்களை வைத்து எந்தத் தேர்வும் கிடையாது எனக் குழந்தைகளிடம் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை என்றால், வாசிப்பை நிறுத்திவிட்டு அவர்களுக்குப் பிடித்த வேறொரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நல்ல விஷயங்கள், எங்கு நடந்தாலும் அதைப் பின்பற்றி நம் பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது நமது கடமை. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் விஷயங்களை வெற்றிகரமாகச் செய்துகாட்டுபவர்களைத் தயக்கமின்றிப் பின்பற்றலாம். பராக் அமைப்பு முன்னெடுத்திருக்கும் இந்தக் கோடை கால வாசிப்பு இயக்கத்தைத் தமிழக அளவிலும் முன்னெடுத்துச் செல்ல அரசு நிறுவனங்களும், கல்வியாளர்களும், சமூகக் குழுக்களும் முன்வர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x