Published : 12 Feb 2018 09:27 AM
Last Updated : 12 Feb 2018 09:27 AM

நான்கு நாட்கள் வேலை: நியூசிலாந்து காட்டும் வழி!

வா

ரத்தில் நான்கு நாட்கள் வேலை என்பது உங்கள் கனவா? அப்படியென்றால் நியூசிலாந்துக்கு விமானம் ஏறுங்கள். நான்கு நாட்களுக்கு வேலை, அதற்கு ஐந்து நாட்களுக்குச் சம்பளம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது பெர்பச்சுவல் கார்டியன் என்ற நியூசிலாந்து நிறுவனம். வேலை செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அலுவலகத்தில் உருவாக்குவதற்கு இந்தப் புதிய முறை சோதித்துப் பார்க்கப்படுகிறது. 21-வது நூற்றாண்டுக்கு ஏற்ப இந்தச் சோதனையில் இறங்கியிருப்பதாக நிறுவனம் கூறுகிறது.

நியூசிலாந்து நாட்டவர்கள் ஆண்டுக்கு 1,752 மணி நேரம் வேலை செய்கின்றனர். இதுதான் பொதுவாக எல்லா நிறுவனங்களி லும் உள்ள நிலை. ஆனால், உலகிலேயே மிகக் குறைந்த மணி நேரம் வேலைசெய்கிறவர்கள் ஜெர்மானியர்கள்தான். அவர்களை அடுத்து இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகள் டென்மார்க், நார்வே, நெதர்லாந்து ஆகியவை. உலகிலேயே அதிக மணி நேரம் வேலை பார்ப்பவர்கள் மெக்சிகோ, கொரியா, கோஸ்டாரிகாவில் அதிகம்.

நியூசிலாந்தில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பது வழக்கத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த அறக்கட்டளை நிறுவனம், இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்று அறிமுகப்படுத்த நினைக்கிறோம், உங்களுடைய கருத்து என்ன என்று ஊழியர்களிடம் கேட்டது. நிறைய மணி நேரம் வேலைசெய்தோம் என்பதைவிட, நிறைய உற்பத்தித் திறனுடன், அதிகம் உற்பத்திசெய்தால் போதும் என்ற தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியது.

பெர்பச்சுவல் கார்டியன் நிறுவனத்தில் பணிபுரியும் கிர்ஸ்டன் டெய்லர் (39) இந்த அறிவிப்பைக் கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே மகிழ்ச்சியில் திளைக்கிறார். கிர்ஸ்டன் டெய்லரின் 21 மாதக் குழந்தை வீட்டில் வேறு யாரும் இல்லாததால் தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் வளர் கிறான். இனி, அவனுடன் வாரத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கலாம். குழந்தை வளரும்போது அவனுடன் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ரசிக்க, நினைவில் வைத்துப் போற்ற வேண்டிய கணங்கள். எனவே, அந்நிறுவனத்தின் அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பு.

பெர்பச்சுவல் கார்டியன் நிறுவனத்தை நடத்துபவர் ஆண்ட்ரு பர்னஸ் என்ற பிரிட்டிஷ்காரர். இந்த நிறுவனத்துக்கு நியூசிலாந்தில் 16 இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. மொத்தம் 200 பேருக்கும் மேல் வேலைசெய்கின்றனர்.

குடும்பத்துக்காகவும் சொந்த பொழுதுபோக்குகளுக்காகவும், இதர வேலைகளுக்காகவும் வாரத்தில் ஒரு நாள் கூடுதலாகக் கிடைப்பதால் ஊழியர்களால் அலுவலகத் தில் முன்பைவிட நன்றாக வேலைசெய்ய முடியும் என்று கருதியதால், இந்த முறையைச் சோதித்துப் பார்ப்பதாக அவர் அறிவித்தார். புதிய அறிவிப்பை வெளியிட்ட போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததை வியப்புடன் கவனித்தார்.

இந்தச் சோதனை முயற்சி வெற்றியடைந்தால், வரும் ஜூலை 1 முதல் இதுவே நிரந்தரமாக அமல்படுத்தப்படும் என்றார். ‘‘நேர்மையாகச் சொல்வதென்றால், இதில் சலுகை ஏதும் இல்லை. எல்லா ஊழியர் களுமே அலுவலக நேரத்தில் சிறிது நேரம் தங்களுடைய சொந்த வேலைகளையும் குடும்ப வேலைகளையும் பார்க்கின்றனர். இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதற்குப் பதிலாக கூடுதலாக ஒரு நாளை ஒதுக்கினால், அவர்கள் எஞ்சிய நான்கு நாட்களில் அலுவலக வேலையை அக்கறையுடன் செய்வார்கள் என்று சிந்தித்துதான் இந்த முடிவை எடுத்தேன்’’ என்கிறார் பர்னஸ்.

ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் வழக்கத்துக்கு மாறான வேலை முறைகளை ஆராய்வதில் நிபுணரான பேராசிரியர் எலிசபெத் ஜார்ஜ், இந்த சோதனை முயற்சிக் காலத்தில் அலுவலகப் பணியின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாகக் குறிப்பிட்டார். இது வெற்றியடைந்தால் நியூசிலாந்து நாட்டின் இதர தொழில் நிறுவனங் களுக்கும் இதைப் பரிந்துரைக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

மனிதர்களுக்கு வாழக் கிடைப்பது ஒரே ஒரு முறைதான்; அதைக் காலம் பூராவும் அலுவலகத்திலேயே கழித்துவிட வேண்டுமா என்றும் அவர் கேட்டார்.

இந்த மாற்றத்துக்குப் பிறகு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, உடல் நலம் மேம்படுகிறதா, அலுவலக வேலைகள் சிக்கலின்றி விரைவாக நடக்கின்றனவா, நிறுவனத்துக்கு நல்ல வருவாயும் லாபமும் கிடைக்கிறதா என்று பல்வேறு கோணங்களில் இதன் பலன்கள் ஆராயப்படும் என்றார். இந்த நிறுவனத்தின் சோதனை முயற்சியின் முடிவுகள், விரும்பும் வேறு எந்த நிறுவனத்துடனும் பகிரப்படும்.

© ‘தி கார்டியன்’,

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x