Published : 14 Feb 2018 08:57 AM
Last Updated : 14 Feb 2018 08:57 AM

இப்படிக்கு இவர்கள்: என்ன செய்கிறது காவல் துறை?

என்ன செய்கிறது காவல் துறை?

ரும்பாக்கம், குன்றத்தூரில் பைக்கில் சென்று, சாலையில் நடந்து செல்லும் பெண்களின் செயின்களைப் பறிக்கும் சம்பவங்களைப் பற்றி (பிப்ரவரி 12) பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் பார்க்கும்போது, மனம் பதைபதைக்கிறது. இம்மாதிரியான நிகழ்வுகள், காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையால்தான் இவ்வளவு துணிகரமாக நடைபெறுகின்றன. காவல் துறையினர் மீது குற்றவாளிகளுக்குப் பயம் இருந்தால் குற்றம்புரிவார்களா? இம்மாதிரியான தொடர் நிகழ்வுகள் காவல் துறைக்குப் பெரும் களங்கமே.‘டெல்லி, மும்பை நகரங்களைவிட சென்னை பெண் களுக்குப் பாதுகாப்பான நகரம்’ என்று சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியானது. நடக்கும் நிகழ்வுகள் அந்த அறிக்கைக்கு முரணாகவே இருக்கின்றன. சமீபத்தில் பல ரௌடிகள் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியதும் நினைவுக்குவருகிறது. சங்கிலிப் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

பொறிக்கப்படாத பெயரும்

மறக்கப்படாத பெயரும்!

மு

தல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் ஜப்பானில் வருகைதரு பேராசிரியராக இருந்தபோது, அவரைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார் எம்.ஜி.ஆர். அரசி யல் குறுக்கீடு எதுவும் தலையிடக் கூடாது என்ற உத்தர வாதத்தின்பேரில் அவர் துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் துணைவேந்தர் தம் பணிகளைத் தொடரும் வழியில் ஜனநாயகப் பண்பைப் பாதுகாத்தார் எம்.ஜி.ஆர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடக்க ஆண்டுகளில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அக்கட்டிடங்களில் கட்டிடம் கட்டத் தொடங்கிய நாள், அதைத் தொடங்கிவைத்தவர் பெயர், அப்போதிருந்த துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகளை வைப்பது பொதுவான நடைமுறை. வ.அய்.சு. துணைவேந்தராகப் பணிபுரிந்த காலத்தில், பல கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன. எந்தக் கல்வெட்டுகளிலும் அவரு டைய பெயர் காணப்படாது. ஆனால், பல்கலைக்கழக வளர்ச்சியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு எதனோடும் ஒப்பிட இயலாத அளவு உயர்ந்தது. ஏறக்குறைய 37 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பல்கலைக்கழகத்தில் நிலைத்த துணைவேந்தர் பெயர் வ.அய்.சுப்பிரமணியன்தான். அவர் இட்ட பலமான அடித்தளத்தில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர், பல நிறுவனங்களை உருவாக்கிய மாபெரும் நிறுவனம்.

- பேரா. கி.அரங்கன்,

முன்னாள் மொழியியல் துறைத் தலைவர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பாரம்பரிய மருத்துவத்தில்

சித்த மருத்துவம் கிடையாதா?

பி

ப்.13 அன்று டாக்டர் டி.ஜோசப் ஜான் எழுதி வெளியான ‘வெவ்வேறு மருத்துவ முறைகளை இணைப்பது சரியா?’ என்கிற கட்டுரை வாசித்தேன். அவர், ‘பாரம்பரிய மருத்துவ முறைகளில் காலம் கடந்து நிற்கும் மருத்துவ முறைகள் மூன்று என ஹோமியோபதி, சீன சிகிச்சை, ஆயுர்வேதம்’ எனக் கூறியுள்ளார். தமிழகமெங்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்து, மக்கள் நிலைகுலைந்தபோது அரசு உதவியுடன் நிலவேம்புக் குடிநீர் தந்து பல உயிர்களைக் காத்தது சித்த மருத்துவம்தானே! சித்த மருத்துவத்தில் 4,448 நோய்களும் உள் மருந்துகள் 32, புற மருந்துகள் 32, எண்வகைத் தேர்வு, மருந்து செய்முறைகள் என சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இவையெல்லாம் அறிவியல்பாற்பட்டதுதானே! அனைத்து சித்த மருத்துவர்களும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அறிவியல்பூர்வமான முறையில், பன்னாட்டு மருத்துவ இதழில் கண்டிப்பாகப் பிரசுரிக்க வேண்டும் என நடைமுறை உள்ளது.

- மரு. அ.கிருபாகரன், எம்.டி. (சித்தா), திருவண்ணாமலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x